இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
செக்ஸ் பற்றி யோசிக்காமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
“செக்ஸ் பற்றிய எண்ணங்கள் எங்கிருந்துதான் வரும் என்றே தெரியாது. ஆனால், அது வந்துவிட்டால் என்னால் அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாது. என்னுடைய மனசை வேறு யாரோ கன்ட்ரோல் பண்ணுகிற மாதிரி இருக்கும்.”—வெரா.
“கையை விரிச்சு வானத்தில் பறக்க சொன்னால்கூட பறந்துவிடலாம், ஆனால் செக்ஸ் பத்தி யோசிக்காமல் இருக்கவே முடியாது.”—ஜான்.
வெராவும் ஜானும் நினைக்கிற மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும்.
செக்ஸைப் பற்றியே யோசிப்பது ஏன் ஆபத்தானது?
“நமக்கு செக்ஸ் ஆசைகளை தந்ததே கடவுள்தான். அதனால் அதை திருப்திப்படுத்துவதில் எந்த தப்பும் இல்லை என்று என்னுடைய மாமா சொன்னார்” என்று அலெக்ஸ் என்ற ஒரு இளைஞர் சொல்கிறார்.
அலெக்சின் மாமா சொன்னது பாதி கரெக்ட். செக்ஸ் ஆசைகளை கடவுள்தான் கொடுத்தார். ஆனால் அதற்கு பின்னால் நல்ல காரணம் இருக்கிறது. செக்ஸ் என்ற விஷயமே இல்லையென்றால் இன்றைக்கு மனித இனமே இருந்திருக்காது. இருந்தாலும் செக்ஸைப் பற்றியே ஏன் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது? அதற்கு இரண்டு நல்ல காரணங்கள் இருக்கின்றன:
கல்யாணமான ஒரு ஆணும் பெண்ணும் மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் நினைப்பதாக பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:28; 2:24.
உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை, கடவுள் கொடுத்த ஒழுக்க சட்டங்களையும் நீங்கள் மதிக்கிறீர்கள். அதனால், செக்ஸ் ஆசைகளை உங்களால் திருப்திப்படுத்த முடியாது. அப்படியிருக்கும்போது செக்ஸைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு விரக்திதான் வரும். செக்ஸைப் பற்றியே யோசிப்பது, ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய உறுதியை உடைத்துவிடும், அந்த தப்பையும் செய்துவிடுவீர்கள். இப்படி தப்பு செய்த நிறைய பேர் அதை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கெட்ட எண்ணங்களை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டீர்கள் என்றால், சுயக்கட்டுப்பாடு என்ற குணத்தை நீங்கள் வளர்த்துக்கொள்வீர்கள்.—1 கொரிந்தியர் 9:25.
இந்த குணம் உங்கள் வாழ்க்கையில் மற்ற எல்லா விஷயங்களிலுமே கைகொடுக்கும். இப்போதும் எதிர்காலத்திலும் நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் சுயக்கட்டுப்பாடு ரொம்பவே முக்கியம். சின்ன வயதிலேயே சுயக்கட்டுப்பாடோடு இருக்கிற பிள்ளைகள், வளர்ந்து பெரியவர்களான பின்பு, உடல்நல பிரச்சினை, பண நெருக்கடி, சட்ட சிக்கல்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்வது ரொம்ப குறைவு என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. a
செக்ஸைப் பற்றி யோசிக்காமல் இருப்பது ஏன் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது?
உங்கள் உடலிலேயே நிறைய ஹார்மோன் மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இது போதாதென்று நாம் வாழ்கிற இந்த உலகமும் செக்ஸ் பைத்தியம் பிடித்த உலகமாக இருக்கிறது. அதனால் செக்ஸைப் பற்றி யோசிக்காமல் இருப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம்.
“இன்றைக்கு இருக்கிற எல்லா டிவி நிகழ்ச்சிகளிலுமே கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பதுபோல் காட்டுகிறார்கள். அதில் இருக்கிற ஆபத்துகளை காட்டுவது இல்லை. அதனால் நாமும் செக்ஸைப் பற்றியே யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.”—ரூத்.
“நான் வேலை செய்கிற இடத்தில் எங்கே திரும்பினாலும் ஆபாசமான பேச்சுதான் காதில் விழும். அதனால் அதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் வந்தது. யார், யார்கூட வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்பது இந்த உலகத்தில் சகஜமாகிவிட்டது. அதனால் அது தப்பு என்று யோசிப்பது கூட கஷ்டமாக இருக்கிறது.”—நிக்கோல்.
“சோஷியல் மீடியாவை பார்த்துக்கொண்டு இருக்கும்போது நமக்கே தெரியாமல் சிலநேரம் இந்த மாதிரி படங்களை பார்த்துவிடுவோம். அப்படி, ஒரு படம் நம் மூளையில் பதிந்துவிட்டால்கூட அதை டெலீட் பண்ணுவது ரொம்ப கஷ்டம்.”—மரியா.
இதுபோன்ற காரணங்களால் அப்போஸ்தலன் பவுல் மாதிரியே நீங்களும் நினைக்கலாம். அவர் இப்படி எழுதினார்: “நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது.”—ரோமர் 7:21.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்கள் மனதை திசை திருப்புங்கள். செக்ஸைத் தவிர வேறு எதையாவதை பற்றி யோசிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்குப் பிடித்த வேலைகளை செய்யலாம், விளையாடலாம், உடற்பயிற்சி செய்யலாம். உங்கள் மனதை திசை திருப்புகிற மாதிரி வேறு எதை வேண்டுமானாலும் செய்யலாம். “பைபிள் படிப்பது உங்களுக்கு உதவி செய்யும். கடவுள் என்ன நினைக்கிறார் என்று அதில் இருக்கிறது. அதே மாதிரி நீங்களும் நினைத்தீர்கள் என்றால் செக்ஸைப் பற்றிய எண்ணங்களுக்கு இடமே இருக்காது” என்று வெலரி என்ற இளம் பெண் சொல்கிறாள்.
செக்ஸ் பற்றிய எண்ணங்கள் வருவது இயல்புதான். ஆனால் அந்த எண்ணங்களை தங்க வைப்பதும், துரத்தியடிப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் மனது வைத்தால் அதை கண்டிப்பாக உங்களால் துரத்தியடிக்க முடியும்.
“என்னுடைய மனசு அலைபாய ஆரம்பித்தால் அதை எப்படியாவது வேறு வழிக்கு கொண்டுவந்து விடுவேன். அதுமட்டுமல்ல, அந்த எண்ணங்கள் எப்படி என் மனதுக்குள் நுழைந்தது என்று கண்டுபிடிக்க முயற்சி எடுப்பேன். ஒருவேளை அது என் பிளேலிஸ்டில் உள்ள ஒரு பாட்டாக இருக்கலாம், இல்லையென்றால் ஒரு ஃபோட்டோவாக கூட இருக்கலாம். அதை நான் டெலீட் பண்ண வேண்டும்.”—ஹெலெனா.
பைபிள் ஆலோசனை: “நீதியானவை எவையோ, சுத்தமானவை எவையோ, . . . அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்களுடைய ஃபிரெண்ட்ஸ் எப்போதும் செக்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உங்களுடைய மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்களுக்கும் சவாலாக இருக்கும்.
“டீனேஜ் வயசில் என்னுடைய மனசை சுத்தமாக வைத்துக்கொள்வது எனக்கு பெரிய போராட்டமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணமே என்னுடைய நண்பர்கள்தான். கெட்ட ஆசைக்கு அசை போடுகிற நண்பர்கள் உங்கள் கூடவே இருந்தால், சின்ன தீ மாதிரி இருக்கிற கெட்ட எண்ணங்கள் காட்டு தீ மாதிரி ஆகிவிடும்.”—சாரா.
பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
தவறான பொழுதுபோக்கை தவிர்த்துவிடுங்கள். இன்றைக்கு எந்த பொழுதுபோக்கை எடுத்துக்கொண்டாலும் அதில் கண்டிப்பாக செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும் என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை. “எனக்கு பாட்டுதான் பெரிய பிரச்சினையே. சிலசமயம் அது என்னுடைய ஆசைகளை அளவுக்கு அதிகமாக தூண்டிவிடும்” என்று நிக்கோல் சொல்கிறான்.
“நான் பார்த்த படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் செக்ஸ் பற்றிய விஷயங்கள்தான் நிறைய இருந்தது. எனக்கே தெரியாமல் நான் செக்ஸைப் பற்றி நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால், எனக்குள் ஏன் இந்த மாதிரி எண்ணங்கள் வந்தது என்பதை கண்டுபிடிப்பது எனக்கு ஈஸியாக இருந்தது. அதை எல்லாம் பார்ப்பதை நிறுத்திய பின்பு செக்ஸைப் பற்றி நான் அவ்வளவாக யோசிப்பதில்லை. நாம் பொழுதுபோக்கை கவனமாக தேர்ந்தெடுத்தால் கெட்ட எண்ணங்கள் வராத மாதிரி நம் மனதைப் பூட்டி வைப்பது ஈஸியாக இருக்கும்.”—ஜோவன்.
பைபிள் ஆலோசனை: “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.”—எபேசியர் 5:3.
சுருக்கமாக சொன்னால்: இன்றைக்கு சிலர், ‘எங்களுடைய செக்ஸ் ஆசைகள் எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதைக் கட்டுப்படுத்தக் கூடாது. நாங்களே நினைத்தால் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று நினைக்கிறார்கள். ஆனால் பைபிள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. நம்முடைய எண்ணங்களை நம்மால் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும் என்று அது சொல்கிறது. இப்படி பைபிள் நம்மை கௌரவப்படுத்துகிறது.
பைபிள் ஆலோசனை: “உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.”—எபேசியர் 4:23.
a உங்களுக்கு கல்யாணமானாலும் சுயக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். அதனால் கல்யாணம் ஆகாமல் இருக்கும்போதே நீங்கள் இந்த குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.