யெகோவாவின் சாட்சிகள் படைப்புக் கோட்பாட்டை நம்புகிறார்களா?
இல்லை. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்புகிறோம். ஆனால், படைப்புக் கோட்பாட்டை நாங்கள் நம்புவதில்லை. ஏனென்றால், படைப்புக் கோட்பாட்டில் இருக்கிற நிறைய கருத்துக்கள் பைபிளோடு ஒத்துப்போவதில்லை. அதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்:
ஆறே நாட்களில் எல்லாம் படைக்கப்பட்டன. ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்ற கணக்கில், ஆறே நாட்களில் எல்லாம் படைக்கப்பட்டன என்று படைப்புக் கோட்பாட்டாளர்கள் உறுதியாக சொல்கிறார்கள். ஆனால், பைபிளில் “நாள்” என்பது மிக நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது.—ஆதியாகமம் 2:4; சங்கீதம் 90:4.
பூமியின் வயது. பூமி படைக்கப்பட்டு ஒருசில ஆயிர வருஷங்கள்தான் ஆகிறது என்று படைப்புக் கோட்பாட்டாளர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், படைப்பின் ஆறு நாட்களுக்கு முன்பே பூமியும் பிரபஞ்சமும் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:1) அதனால்தான், கோடிக்கணக்கான வருஷங்களுக்கு முன்பாகவே பைபிள் படைக்கப்பட்டது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை யெகோவாவின் சாட்சிகள் ஒத்துக்கொள்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் படைப்பை நம்புகிறோம், என்றாலும் அறிவியலுக்கு எதிரானவர்கள் கிடையாது. பைபிளோடு ஒத்துப்போகிற அறிவியல் விஷயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.