Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் என்ன செய்திருக்கிறார்?

கடவுள் என்ன செய்திருக்கிறார்?

ஒருவரைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவர் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறார்... என்னென்ன சவால்களைச் சமாளித்திருக்கிறார்... என்றெல்லாம் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். அதேபோல், கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள, அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கடவுள் செய்திருக்கிற விஷயங்களால் இப்போதும் எதிர்காலத்திலும் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

கடவுள் நம் நன்மைக்காக எல்லாவற்றையும் படைத்தார்

எல்லாவற்றையும் படைத்தவர் கடவுளாகிய யெகோவாதான். “பார்க்க முடியாத அவருடைய குணங்களை . . . உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.” (ரோமர் 1:20) “உண்மையான கடவுள்தான் தன்னுடைய வல்லமையினால் பூமியைப் படைத்தார். தன்னுடைய ஞானத்தினால் நிலத்தை உண்டாக்கினார். தன்னுடைய புத்தியினால் வானத்தை விரித்தார்.” (எரேமியா 10:12) நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான படைப்புகளைப் பார்க்கும்போது, கடவுளுக்கு நம்மேல் எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று தெரிகிறது.

மனிதர்கள் எப்படி யெகோவாவின் விசேஷப் படைப்பாக இருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களை அவர் “தன்னுடைய சாயலில்” படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:27) அப்படியென்றால், அற்புதமான அவருடைய குணங்களை ஓரளவுக்கு வெளிக்காட்டும் திறனை நமக்குக் கொடுத்திருக்கிறார். எது சரி, எது தவறு என்று அவர் நினைக்கிறாரோ அதைப் புரிந்துகொள்ளும் திறனையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய விருப்பப்படி வாழ நாம் முயற்சி செய்யும்போது, நம் மனதுக்கு அதிக சந்தோஷம் கிடைக்கும், நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் கிடைக்கும். இன்னொரு முக்கியமான திறனையும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அதுதான் அவரோடு ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ளும் திறன்.

இந்தப் பூமியிலுள்ள கடவுளுடைய படைப்புகளைப் பார்க்கும்போது, நம்மேல் அவர் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. கடவுள் “தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை. எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் [நமக்கு] தந்து, [நம்] உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (அப்போஸ்தலர் 14:17) நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையானவற்றையும் கடவுள் வகை வகையாக அள்ளித் தந்திருக்கிறார். உண்மையில், நமக்காக அவர் வாரி வழங்க நினைத்தது இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கின்றன!

மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் யெகோவா இந்தப் பூமியைப் படைத்தார். அவர் “இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்” என்றும், “அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்” என்றும் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 115:16; ஏசாயா 45:18) எப்படிப்பட்ட ஜனங்கள் பூமியில் குடியிருக்க வேண்டுமென்று கடவுள் நினைத்தார்? அவர்கள் எவ்வளவு காலத்துக்குக் குடியிருக்க வேண்டுமென்று நினைத்தார்? “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று அவர் பைபிளில் சொல்லியிருக்கிறார்.—சங்கீதம் 37:29.

யெகோவா முதன்முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்து, இந்தப் பூமியில் ஒரு தோட்டத்தில் அவர்களைக் குடிவைத்து, ‘அதைப் பராமரிக்க’ சொன்னார். (ஆதியாகமம் 2:8, 15) “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்” என்று சொன்னார். (ஆதியாகமம் 1:28) பூமியை நிரப்புவதும் அதைப் பண்படுத்துவதும், கடவுள் அவர்களுக்குத் தந்த சந்தோஷமான வேலைகள். இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது. ஆனால், வருத்தமான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் கடவுளுடைய பேச்சை மீறினார்கள். அதனால், ‘இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ ‘நீதிமான்களில்’ அவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனாலும், அவர்கள் கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா தன் நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை; நமக்காகவும் இந்தப் பூமிக்காகவும் செய்ய நினைத்ததை அவர் கண்டிப்பாகச் செய்வார். இதைப் பற்றி நாம் இன்னும் விவரமாகப் பார்க்கலாம். ஆனால் அதற்குமுன், கடவுள் செய்திருக்கும் இன்னொரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

கடவுள் தன் வார்த்தையைக் கொடுத்திருக்கிறார்

பைபிள், கடவுளுடைய வார்த்தை என்றும் அழைக்கப்படுகிறது. யெகோவா ஏன் நமக்காக பைபிளைக் கொடுத்திருக்கிறார்? முக்கியமாக அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 2:1-5) கடவுளைப் பற்றி நம் மனதில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பைபிளில் பதில் இருக்கிறது என்று சொல்ல முடியாதுதான்; உலகத்திலுள்ள வேறு எந்தப் புத்தகத்திலும்கூட பதில் இல்லை. (பிரசங்கி 3:11) ஆனால், பைபிளில் இருக்கும் எல்லா விஷயங்களும் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவர் மக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றிப் படிக்கும்போது, அவர் எப்படிப்பட்டவர் என்று நாம் புரிந்துகொள்வோம். கடவுளுக்கு எப்படிப்பட்டவர்களைப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்று பைபிள் காட்டுகிறது. (சங்கீதம் 15:1-5) வழிபாடு, ஒழுக்கம், பொருள் வசதிகள் போன்ற விஷயங்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்றும் நாம் பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, யெகோவாவின் மகனாகிய இயேசு கிறிஸ்து சொன்ன விஷயங்களையும், அவர் செய்த விஷயங்களையும் பற்றி பைபிளில் படிக்கும்போது, யெகோவாவின் குணங்கள் அப்படியே நம் கண்முன் வந்து நிற்கும்.—யோவான் 14:9.

நாம் எப்படிச் சந்தோஷமாகவும், அர்த்தமுள்ள விதத்திலும் வாழலாம் என்று தெரிந்துகொள்வதற்குக்கூட யெகோவா நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார். குடும்பத்தில் எப்படிச் சந்தோஷமாக இருப்பது, எப்படித் திருப்தியாக வாழ்வது, எப்படிக் கவலையைச் சமாளிப்பது என்றெல்லாம் அவர் பைபிளில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் அவர் பதில் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, ‘நமக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை? எதிர்காலம் எப்படி இருக்கும்?’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதோடு, தான் நினைத்ததை எப்படிச் செய்து முடிக்கப்போகிறார் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை அடுத்துவரும் பக்கங்களில் இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

நிச்சயமாகவே, பைபிள் கடவுளுடைய புத்தகம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; ஏனென்றால், இன்னும் பல விதங்களில் அது மிக விசேஷமான ஒரு புத்தகமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 40 பேர் அதை எழுதினார்கள்; அதை எழுதி முடிக்க 1,600 வருஷங்கள் எடுத்தன; இருந்தாலும், பைபிள் முழுவதும் ஒரே கருத்தைப் பற்றித்தான் பேசுகிறது. ஏனென்றால், உண்மையில் அதன் நூலாசிரியர் கடவுள்தான். (2 தீமோத்தேயு 3:16) பைபிள் பழங்காலப் புத்தகமாக இருந்தாலும், அதில் எழுதப்பட்டது எழுதப்பட்டபடியே இருக்கிறது; இதுவும்கூட பைபிளுக்கு இருக்கும் ஒரு விசேஷம்! ஆயிரக்கணக்கான பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் இதை உறுதிசெய்கின்றன. அதுமட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்க்கவும் விநியோகிக்கவும் படிக்கவும் எத்தனையோ எதிர்ப்பு வந்தபோதிலும், பைபிளை யாராலும் அழிக்கவே முடியவில்லை. சொல்லப்போனால், இன்று மிக அதிகமாக விநியோகிக்கப்படும் புத்தகமும் மொழிபெயர்க்கப்படும் புத்தகமும் பைபிள்தான்! பைபிள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதே, ‘கடவுளின் வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது’ என்பதற்கு ஒரு அத்தாட்சி!—ஏசாயா 40:8.

கடவுள் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தந்திருக்கிறார்

கடவுள் நமக்காக இன்னொரு முக்கியமான விஷயத்தைச் செய்திருக்கிறார். அது ஒரு விசேஷமான ஏற்பாடு என்று சொல்லலாம். அதன் மூலம், தன் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அவர் உத்தரவாதம் தந்திருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, மனிதர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் கடவுள் நினைத்தார். ஆனால், ஆதாம் கடவுளுடைய பேச்சைக் கேட்காமல் பாவம் செய்தபோது, என்றென்றும் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டான். அவன் செய்த பாவத்தால் அவனுடைய வருங்காலத் தலைமுறைகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12) மனிதன் கீழ்ப்படியாமல் போனபோது, கடவுளுடைய நோக்கம் இனி நிறைவேறாது என்பதுபோல் தோன்றியது. ஆனால், யெகோவா என்ன செய்தார்?

யெகோவா தன்னுடைய குணங்களுக்கு ஏற்றபடி நடந்துகொண்டார். ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்துக்குத் தகுந்த தண்டனையை அவர் கொடுத்தார். அதேசமயத்தில், அவர்களுடைய வருங்காலத் தலைமுறைகள் சந்தோஷமாக வாழ்வதற்கு அன்போடு ஏற்பாடு செய்தார். பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என்று அவர் ஞானமாக முடிவு செய்தார்; உடனடியாக, ஒரு தீர்வையும் சொன்னார். (ஆதியாகமம் 3:15) தன்னுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்ய அவர் ஏற்பாடு செய்தார். எப்படி?

ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காக இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பினார். என்றென்றும் வாழ அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசு கற்றுக்கொடுத்தார்; அதோடு, ‘பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார்.’ a (மத்தேயு 20:28; யோவான் 14:6) இயேசு ஆதாமைப் போலவே எந்தக் குறையும் இல்லாத பரிபூரணமான மனிதராக இருந்தார்; அதனால், மீட்புவிலையைச் செலுத்த அவரால் முடிந்தது. ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவர் ஆதாமுக்கு நேர்மாறாக இருந்தார்; இறுதிமூச்சுவரை அவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவர் எந்தத் தவறும் செய்யாததால், யெகோவா அவரை மறுபடியும் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பினார். ஆதாம் செய்யத் தவறியதை இயேசு அப்போது செய்தார்; அதாவது, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்கு அவர் வாய்ப்பைத் திறந்துவைத்தார். “ஒரே மனிதன் கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரே மனிதன் கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:19) இயேசு செய்த உயிர்த்தியாகத்தின் அடிப்படையில், கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார்; அதாவது, மனிதர்களை இந்தப் பூமியில் என்றென்றும் வாழவைப்பார்.

ஆதாம் செய்த பாவத்தின் விளைவுகளைச் சரிசெய்ய யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவரைப் பற்றி நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்கிறோம். முதலாவதாக, யெகோவா ஒன்றைச் செய்ய ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்காமல் விட மாட்டார் என்று புரிந்துகொள்கிறோம். சொன்னதை அவர் ‘கண்டிப்பாகச் செய்து முடிப்பார்.’ (ஏசாயா 55:11) இரண்டாவதாக, யெகோவா நம்மேல் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்கிறோம். “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப் பிராயச்சித்த பலியாக தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.”—1 யோவான் 4:9, 10.

கடவுள் ‘தன்னுடைய சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தார்.’ அதனால், தான் வாக்குக் கொடுத்திருக்கிற ‘மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுப்பார்’ என்பதில் சந்தேகமே இல்லை. (ரோமர் 8:32) அப்படியென்றால், நமக்காக என்ன செய்யப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்? தொடர்ந்து படியுங்கள்.

கடவுள் என்ன செய்திருக்கிறார்? மனிதர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக யெகோவா இந்தப் பூமியைப் படைத்திருக்கிறார். நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பைபிளைக் கொடுத்திருக்கிறார். நம்மைச் சந்தோஷமாக வாழ வைப்பதற்காகத் தன்னுடைய மகனையே கொடுத்திருக்கிறார்.

a மீட்புவிலை பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் பாடம் 27-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது; இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் படிக்க www.mr1310.com வெப்சைட்டைப் பாருங்கள்.