Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்​—நம்பகமான வழிகாட்டி

பைபிள்​—நம்பகமான வழிகாட்டி

நமக்கு சரியென படுவதை அல்லது மற்றவர்களுக்கு சரியென படுவதை வைத்து முடிவுகள் எடுத்தோம் என்றால், அது எல்லா சமயத்திலும் நல்ல முடிவாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கான காரணம் பைபிளில் இருக்கிறது. அதுமட்டுமல்ல நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் பைபிளில்தான் இருக்கின்றன. அவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

நமக்கான வழிகாட்டி—கடவுள்

ஒரு மனுஷனுக்கு இன்னொரு மனுஷன் வழிகாட்ட முடியாது. ஏனென்றால், யெகோவா a நம்மை அப்படிப் படைக்கவில்லை என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 10:23) நமக்குக் கண்டிப்பாக யெகோவாவுடைய உதவி தேவை. அதனால்தான், அவர் பைபிள் மூலமாக நமக்கு நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். வாழ்க்கையில் நாம் ஏதாவது தவறான முடிவை எடுத்துவிட்டு, வேதனையையோ கஷ்டத்தையோ அனுபவிக்க கூடாதென்று அவர் நினைக்கிறார். (உபாகமம் 5:29; 1 யோவான் 4:8) எல்லாவற்றுக்கும் மேலாக அவர்தான் நம்மை படைத்தவர். அவருக்கு நிறைய ஞானமும் அறிவும் இருக்கிறது. இருப்பதிலேயே சிறந்த ஆலோசனையை அவரால் மட்டும்தான் கொடுக்க முடியும். (சங்கீதம் 100:3; 104:24) ஆனால், அவர் சொல்கிற மாதிரிதான் வாழ வேண்டுமென்று யாரையும் அவர் கட்டாயப்படுத்துவது கிடையாது.

முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்திருந்தார். (ஆதியாகமம் 1:28, 29; 2:8, 15) அதோடு, சில விஷயங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்களைக் கடவுள் கட்டாயப்படுத்தவில்லை. கீழ்ப்படியலாமா வேண்டாமா என்று அவர்களே முடிவெடுப்பதற்கு சுதந்திரம் கொடுத்தார். (ஆதியாகமம் 2:9, 16, 17) வருத்தமான விஷயம் என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். (ஆதியாகமம் 3:6) அன்றும் சரி, இன்றும் சரி, மனிதர்கள் தங்களுக்கு சரியென படுவதைத்தான் செய்கிறார்கள். அது அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறதா? இல்லை. கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் உண்மையான சந்தோஷமும் நிம்மதியும் இருக்காது என்பதை மனிதர்களுடைய சரித்திரம் தெளிவாகக் காட்டுகிறது.—பிரசங்கி 8:9.

நாம் யாராக இருந்தாலும் சரி, எங்கே வாழ்ந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கு பைபிள் நமக்கு உதவி செய்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17; “ எல்லா விதமான மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) பைபிள் எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

பைபிளை “கடவுளுடைய வார்த்தை” என்று சொல்வதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13. jw.org-ல் “பைபிளின் நூலாசிரியர் யார்?” என்ற வீடியோவைப் பாருங்கள்.

கடவுளுடைய வழிகாட்டுதல்—பைபிளில்

மனிதர்களைக் கடவுள் ஆரம்பத்திலிருந்தே எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறார் என்பதைப் பற்றி பைபிளில் இருக்கிறது. பைபிளை நாம் படிக்கும்போது நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று கடவுள் சொல்லியிருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் எல்லாம் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். (சங்கீதம் 19:7, 11) நம் வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுப்பதற்கும் உதவி செய்யும்.

உதாரணத்துக்கு, நீதிமொழிகள் 13:20-ல் சொல்லியிருக்கிற ஆலோசனையைப் பாருங்கள். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று அந்த வசனம் சொல்கிறது. பைபிள் காலங்களில் மட்டுமல்ல, நம் காலத்துக்கும் இந்த ஆலோசனை பொருந்தும். நமக்கு ரொம்பவே தேவைப்படுகிற இந்த மாதிரி முத்தான ஆலோசனைகள் பைபிளில் நிறைய இருக்கின்றன.—“ நம் காலத்துக்கும் கைகொடுக்கும் பைபிள் ஆலோசனைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஒருவேளை நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் எல்லாம் உண்மையிலேயே எனக்கு உதவும் என்று நான் எப்படி நம்புவது?’ அதை நம்புவதற்கு நம் காலத்தில் வாழ்கிற சிலருடைய அனுபவங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.