வாசகர் கேட்கும் கேள்விகள்
மற்றவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கைத்துப்பாக்கியையோ துப்பாக்கியையோ ஒரு கிறிஸ்தவர் வைத்துக்கொள்ளலாமா?
தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கைத்துப்பாக்கியையோ துப்பாக்கியையோ அல்லது வேறு விதமான துப்பாக்கிகளையோ கிறிஸ்தவர்கள் வைத்திருப்பது தவறு என்று இந்த நியமங்கள் காட்டுகின்றன. இப்போது இந்தக் குறிப்புகளைக் கவனியுங்கள்:
மனித உயிர் யெகோவாவுடைய பார்வையில் புனிதமானது. “உயிரின் ஊற்று நீங்கள்தான்” என்று யெகோவாவைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங். 36:9) அதனால், தன்னையோ தன் உடைமையையோ பாதுகாக்க வேண்டும் என்று ஒரு கிறிஸ்தவர் தீர்மானிக்கலாம். அப்போது, ஒருவருடைய சாவுக்கு தான் காரணமாகிவிடாமல் இருக்கவும், அவருடைய இரத்தப்பழிக்கு ஆளாகாமல் இருக்கவும், தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அந்தக் கிறிஸ்தவர் செய்வார்.—உபா. 22:8, அடிக்குறிப்பு; சங். 51:14.
தன்னுடைய பாதுகாப்புக்காக ஒருவர் வைத்திருக்கும் ஏதாவது ஒரு பொருளே, அவரை இரத்தப்பழிக்கு ஆளாக்கிவிடலாம். துப்பாக்கி வைத்திருந்தால், தற்செயலாகவோ வேண்டுமென்றோ ஒருவரை எளிதில் கொலை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதோடு, தாக்குதல் செய்பவர் ஏற்கனவே பதட்டமாக இருப்பார். அந்தச் சூழ்நிலையில், அவர் துப்பாக்கியைப் பார்த்துவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடலாம்; கொலையும் நடந்துவிடலாம்.
தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, வாளை வைத்துக்கொள்ளும்படி இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். ஆனால், பாதுகாப்பை மனதில் வைத்து அவர் அப்படிச் சொல்லவில்லை. (லூக். 22:36, 38) அவர்களுக்குப் பாடம் கற்றுத்தரவே இயேசு அப்படிச் சொன்னார். அதாவது, ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு கும்பலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை வந்தால்கூட வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதைக் கற்றுத்தரவே அப்படிச் சொன்னார். (லூக். 22:52) பேதுரு தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கியபோது, “உன் வாளை உறையில் போடு” என்று இயேசு பேதுருவுக்குக் கட்டளை போட்டார். பிறகு, “வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று சொன்னார். இந்த நியமம், இன்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது.—மத். 26:51, 52.
மீகா 4:3-ல் சொல்லப்பட்டிருப்பது போல, கடவுளுடைய மக்கள் “தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.” உண்மை கிறிஸ்தவர்கள் சமாதானத்துக்குப் பேர் போனவர்கள். “யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்,” “எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் மூலம் கடவுள் கொடுத்த கட்டளைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். (ரோ. 12:17, 18) ‘திருடர்களால் வந்த ஆபத்துகள்’ உட்பட, மற்ற கஷ்டமான சூழ்நிலைகள் வந்தபோதும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பவுல் ஒருபோதும் பைபிள் நியமங்களை மீறவில்லை. (2 கொ. 11:26) அவர் கடவுள்மேல் நம்பிக்கை வைத்தார். அதோடு, பைபிளில் இருக்கிற ஞானமான ஆலோசனை “போர் ஆயுதங்களைவிட” சிறந்தது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.—பிர. 9:18.
பொருள் வசதிகளைவிட உயிர்தான் கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப முக்கியம். “ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்பது நமக்குத் தெரியும். (லூக். 12:15) துப்பாக்கியை வைத்திருக்கும் திருடனிடம் சாந்தமாகப் பேசியும் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால், “அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்” என்ற இயேசுவின் ஆலோசனையை நாம் பின்பற்றுவோம். (மத். 5:39, 40; லூக். 6:29) * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நாம் குற்றவாளிகளின் இலக்காக ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்வது நல்லது. பைபிள் ஆலோசனையைப் பின்பற்றி, ‘பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணத்தை’ நாம் தவிர்த்தால், அவர்கள் நம்மைத் தாக்க மாட்டார்கள். (1 யோ. 2:16) யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் சமாதானமானவர்கள் என்பது நம் அக்கம்பக்கத்தாருக்குத் தெரிந்திருப்பதும் நமக்குப் பாதுகாப்புதான்.—நீதி. 18:10.
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய மனசாட்சியை மதிக்கிறார்கள். (ரோ. 14:21) தன்னுடைய பாதுகாப்புக்காக ஒரு சகோதரர் துப்பாக்கியை வைத்திருக்கிற விஷயம் சகோதர சகோதரிகளுக்குத் தெரியவரும்போது, சிலர் அதிர்ச்சியடையலாம் அல்லது இடறல்கூட அடைந்துவிடலாம். துப்பாக்கியை வைத்திருக்க நமக்குச் சட்டப்பூர்வமான உரிமை இருக்கலாம். ஆனால், நம் சகோதரர்களை நாம் நேசித்தால், அவர்களுக்கு இடறலாக இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் நாம் செய்ய மாட்டோம்.—1 கொ. 10:32, 33; 13:4, 5.
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க விரும்புகிறார்கள். (2 கொ. 4:2; 1 பே. 5:2, 3) மற்றவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு கிறிஸ்தவர் துப்பாக்கியை வைத்திருந்தால், மூப்பர்கள் அவருக்கு பைபிளிலிருந்து ஆலோசனை கொடுப்பார்கள். ஒருவேளை, துப்பாக்கியை வைத்துக்கொள்வதென்று அவர் முடிவு செய்தால், அவர் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க மாட்டார். அதனால், சபையில் எந்தவொரு பொறுப்போ விசேஷ நியமிப்போ அவருக்குக் கிடைக்காது. தன்னுடைய வேலையின் காரணமாக தொடர்ந்து துப்பாக்கியை வைத்திருக்கும் ஒரு கிறிஸ்தவருக்கும் இது பொருந்துகிறது. அவர் வேறொரு வேலையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வது நல்லது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
ஒரு கிறிஸ்தவர், தன்னையும் தன் குடும்பத்தையும் தன் உடைமைகளையும் எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், எங்கே வேலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அது பைபிள் நியமங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். நம்மேல் அன்பு இருப்பதால்தான் ஞானமுள்ள நம் கடவுள் இந்த நியமங்களைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான், யெகோவாவோடு நெருங்கிய பந்தம் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி வைத்திருப்பது கிடையாது. கடவுள்மேல் நம்பிக்கை வைத்து, தங்கள் வாழ்க்கையில் பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்றினால் என்றென்றும் தங்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.—சங். 97:10; நீதி. 1:33; 2:6, 7.
^ பாரா. 3 உணவுக்காக மிருகங்களை வேட்டையாடவோ, மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ ஒரு கிறிஸ்தவர் துப்பாக்கியை (அல்லது கைத்துப்பாக்கியை) வைத்திருக்க முடிவு செய்யலாம். துப்பாக்கியைப் பயன்படுத்தாத சமயத்தில், அதிலிருக்கும் தோட்டாக்களை வெளியே எடுத்து வைக்க வேண்டும். துப்பாக்கியின் பாகங்களைக்கூட தனித்தனியாகப் பிரித்துவைத்து, அதைப் பத்திரமாகப் பூட்டி வைக்கலாம். துப்பாக்கியை வைத்திருப்பது சட்டவிரோதமாக இருந்தாலோ, அல்லது அரசாங்கத்தால் அது தடை செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலோ கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.—ரோ. 13:1.
^ பாரா. 2 கற்பழிக்கப்படுவதிலிருந்து ஒருவர் தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, ஜூன் 8, 1993 விழித்தெழு!-வில் வந்த “கற்பழிப்பைத் தடுப்பது எப்படி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ பாரா. 4 துப்பாக்கி ஏந்த வேண்டிய அவசியம் ஏற்படுகிற வேலையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, நவம்பர் 1, 2005 காவற்கோபுரம், பக்கம் 31 மற்றும் ஜூலை 15, 1983 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 25-26-ல் உள்ள கட்டுரைகளைப் பாருங்கள்.