படைப்பாளர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவியுங்கள்
இந்தப் ‘பூமியிலுள்ள எல்லா தேசத்தாரையும்’ ஆசீர்வதிக்கப் போவதாக இப்ராஹீம் நபியிடம் இறைவன் வாக்குக் கொடுத்தார். இப்ராஹீம் நபியின் வம்சத்தில் வரப்போகும் ஒருவர் மூலம் அதைச் செய்யப்போவதாகச் சொன்னார். (ஆதியாகமம் 22:18) அவர் யார்?
கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்குமுன் வாழ்ந்த இயேசு, இப்ராஹீம் நபியின் வம்சத்தில் வந்தவர். அவருக்குப் பெரிய பெரிய அதிசயங்களைச் செய்கிற சக்தியை இறைவன் கொடுத்தார். அவர் செய்த அதிசயங்கள் எதைக் காட்டின? எல்லா தேசத்தாரையும் ஆசீர்வதிக்கப் போவதாக இப்ராஹீம் நபிக்கு இறைவன் கொடுத்த வாக்கு, இயேசு மூலமாகத்தான் நிறைவேறும் என்பதைக் காட்டின.—கலாத்தியர் 3:14.
இயேசு செய்த அதிசயங்களைப் பார்த்தவர்கள், மனிதர்களை ஆசீர்வதிக்க அவரைத்தான் இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதோடு, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்க இயேசுவை இறைவன் எப்படியெல்லாம் பயன்படுத்தப்போகிறார் என்பதையும் புரிந்துகொண்டார்கள். அவர் செய்த அதிசயங்களிலிருந்து அவரிடம் இருக்கிற தங்கமான குணங்களைத் தெரிந்துகொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
கனிவு—இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
ஒருமுறை, தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் தன்னைக் குணப்படுத்தும்படி கெஞ்சிக் கேட்டான். இயேசு அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே, தொழுநோய் முழுமையாக மறைந்துபோனது!—மாற்கு 1:40-42.
தாராள குணம்—பசியாக இருந்தவர்களுக்கு இயேசு சாப்பாடு கொடுத்தார்.
மக்கள் பசியில் வாடக் கூடாது என்று இயேசு நினைத்தார். இரண்டு சந்தர்ப்பங்களில், கொஞ்சம் ரொட்டிகளையும் சில சிறிய மீன்களையும் வைத்து ஆயிரக்கணக்கான மக்களுடைய பசியை அற்புதமான விதத்தில் போக்கினார். (மத்தேயு 14:17-21; 15:32-38) எல்லாரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். அவர்கள் சாப்பிட்டதுபோக நிறைய மீதியும் இருந்தது.
கரிசனை—இறந்தவர்களை இயேசு உயிரோடு எழுப்பினார்.
தன்னுடைய ஒரே மகனைப் பறிகொடுத்து நிர்க்கதியாக நின்ற விதவையைப் பார்த்து இயேசு ‘மனம் உருகினார்.’ அதனால், இறந்துபோன அந்தப் பையனை உயிரோடு எழுப்பினார்.—லூக்கா 7:12-15.