பேட்டி | ஃபான் யூ
மென்பொருள் பொறியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்
டாக்டர் ஃபான் யூ, கணிதவியல் ஆய்வாளராக சீன அணுசக்தி நிறுவனத்தில் (China Institute of Atomic Energy) வேலை செய்தார். இந்த நிறுவனம், பெய்ஜிங் அருகில் இருக்கிறது. முன்பு, அவர் ஒரு நாத்திகராக இருந்தார்; பரிணாமக் கொள்கையை நம்பினார். ஆனால், உயிர் கடவுளால் படைக்கப்பட்டது என்று இப்போது நம்புகிறார். ஏன் இந்த மாற்றம்? இதைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் அவரே சொல்கிறார்.
உங்களைப் பற்றி சொல்லுங்கள்.
1959-ல் சீனாவின் ஜியாஷி என்ற மாகாணத்திலுள்ள ஃபூசௌ நகரத்தில் நான் பிறந்தேன். எனக்கு எட்டு வயது இருக்கும்போது எங்கள் நாட்டில் கலாச்சார புரட்சியினால் நிறைய பேர் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். என் அப்பா ஒரு சிவில் இன்ஜினியர். ரொம்ப தூரத்திலிருந்த ஒரு பாலைவனத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதனால், அவர் அங்கேயே தங்கி வேலை செய்தார். வருஷத்துக்கு ஒருமுறைதான் என்னையும் அம்மாவையும் பார்க்க வருவார். என் அம்மா, ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தார். அந்தப் பள்ளியில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். பிறகு 1970-ல், லின்சுவான் மாவட்டத்தில் இருந்த யூஃபான் என்ற கிராமத்துக்குக் குடிமாறினோம். அங்கு உணவு தட்டுப்பாடு இருந்தது.
உங்கள் குடும்பம் எந்த மதத்தைச் சேர்ந்தது?
மதத்திலும் அரசியலிலும் அப்பாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அம்மா, புத்த மதத்தைச் சேர்ந்தவர். நான் பரிணாமத்தை நம்பினேன். ஏனென்றால், இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் உயிர் தானாக தோன்றியது என்று பள்ளியில் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
உங்களுக்குக் கணிதவியல் ஏன் பிடித்திருந்தது?
தர்க்க ரீதியாக ஒத்துக்கொள்ள முடியாத எதையும் கணிதவியல் ஏற்றுக்கொள்ளாது. அதனால்தான் அது எனக்குப் பிடித்திருந்தது. 1976-ல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். கணிதவியலை முக்கிய பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். முதுகலைப் பட்டம் பெற்றபின் எனக்கு வேலை கிடைத்தது. அணுசக்தி உற்பத்திக்கு உதவும் சில ஆராய்ச்சிகளைச் செய்வதுதான் என் வேலை.
ஆரம்பத்தில் பைபிளைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?
1987-ல் பேரறிஞர் பட்டம் பெறுவதற்காக அமெரிக்காவில் இருக்கும் டெக்ஸஸ் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அமெரிக்காவில் இருந்த நிறைய பேர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள், பைபிளையும் படித்தார்கள். வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன என்பதை நான் கேள்விப்பட்டேன். அதனால், பைபிளைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
வாழ்க்கைக்குப் பிரயோஜனமான நிறைய விஷயங்கள் பைபிளில் இருப்பதைப் பார்த்தேன். ஆனால், சில பகுதிகளை என்னால் புரிந்துகொள்ள
முடியவில்லை. அதனால், பைபிள் படிப்பதை நிறுத்திவிட்டேன்.பைபிளை மறுபடியும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற விஷயம் எனக்கு புதிதாக இருந்தது. அதனால், அதைப் பற்றி நானே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்
1990-ல் யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு பெண் என் வீட்டுக்கு வந்தார். மனிதர்களுக்குக் கிடைக்கப்போகும் அருமையான எதிர்காலத்தைப் பற்றி பைபிளிலிருந்து காட்டினார். அதன்பின், ஒரு தம்பதி எனக்கு பைபிளைப் பற்றி சொல்லித்தருவதற்கு அந்தப் பெண் ஏற்பாடு செய்தார். கொஞ்ச நாட்களில் என் மனைவி லிப்பிங்கும் என்னோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். அவள், சீனாவில் இருந்த ஒரு உயர்நிலை பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை செய்தாள். ஆரம்பத்தில் அவளுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், உயிர் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய பைபிளின் கருத்தை நாங்கள் தெரிந்துகொண்டோம். படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற விஷயம் எனக்குப் புதிதாக இருந்தது. அதனால், அதைப் பற்றி நானே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
என்ன ஆராய்ச்சிகளைச் செய்தீர்கள்?
நான் கணிதவியல் ஆய்வாளராக இருந்ததால், ஒரு சம்பவம் நடப்பதற்கு என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டுப் பார்க்கப் பழகியிருந்தேன். உயிர் தானாகவே தோன்றியது என்ற கருத்து உண்மையாக இருந்தால், உயிர் உருவாவதற்கு காரணமாக இருக்கும் புரோட்டீன்கள் முன்கூட்டியே தானாக தோன்றியிருக்க வேண்டும். இப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தேன். புரோட்டீன்கள்தான் இருப்பதிலேயே அதிக சிக்கலான மூலக்கூறுகள். அதுவும், ஒரு செல்லில் வித்தியாசமான புரோட்டீன்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்பு வைத்துக்கொள்கின்றன. அநேகர் சொல்வதுபோல், இப்பேர்ப்பட்ட புரோட்டீன்கள் தானாக உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நானும் புரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல, புரோட்டீன் மூலக்கூறுகள் தானாகவே உருவாகியிருக்கும் என்பதற்கு பரிணாமக் கொள்கை சொல்லும் காரணங்கள் எனக்குத் திருப்தியாக இல்லை. அப்படி இருக்கும்போது புரோட்டீன்கள் அடங்கிய உயிரினங்கள் தானாக தோன்றியிருக்கும் என்பதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?! இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை எனக்குக் காட்டியது.
பைபிள் கடவுள் தந்த புத்தகம்தான் என்று நம்ப எது உங்களுக்கு உதவியது?
நான் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தேன். பைபிளில் இருக்கும் தீர்க்கதரிசனங்கள் எப்படித் துல்லியமாக நிறைவேறியிருக்கின்றன என்று கற்றுக்கொண்டேன். அதுமட்டுமல்ல, பைபிள் சொல்லும் ஆலோசனைகளை வாழ்க்கையில் பொருத்தியதால் பல நன்மைகளை அடைந்தேன். பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த பைபிள் எழுத்தாளர்களால், எப்படி நம் காலத்துக்கு ஒத்துவரும் ஆலோசனைகளைக் கொடுக்க முடிந்தது என்று யோசித்தேன். பைபிள் கடவுள் தந்த புத்தகம்தான் என்பதைப் படிப்படியாகப் புரிந்துகொண்டேன்.
ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பதை இப்போதும் நீங்கள் நம்புவதற்கு என்ன காரணம்?
இயற்கையில் இருக்கும் அநேக விஷயங்களைப் பார்க்கும்போது படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. இப்போது ஒரு மென்பொருள் பொறியாளராக, கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுதுகிறேன். நம் மூளை இப்படிப்பட்ட புரோகிராம்களையே மிஞ்சிவிடுகிறது! உதாரணத்துக்கு, யாராவது சொல்லும் ஒரு தகவலை நம் மூளை சட்டென புரிந்துகொள்கிறது. இது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்! தகவல் முழுமையாகச் சொல்லப்படவில்லை என்றாலும், அதைச் சொல்லும் நபர் திக்கித் திணறி சொன்னாலும், அதைச் சொல்லும்போது அந்த நபருக்கு சிரிப்போ இருமலோ வந்தாலும் நம் மூளை அதைப் புரிந்துகொள்கிறது. ஒருவேளை ஃபோனில் தகவலைச் சொல்லும்போது சுற்றி வேறு ஏதாவது சத்தம் கேட்டாலும் அல்லது வார்த்தைகள் எதிரொலித்தாலும், இரைச்சல் சத்தம் கேட்டாலும் நம் மூளை தகவலைப் புரிந்துகொள்கிறது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அது எவ்வளவு பெரிய விஷயம் என்று மென்பொருள் பொறியாளர்களுக்குத்தான் தெரியும். மனிதர்களின் பேச்சைக் கண்டறியும் சிறந்த மென்பொருளால்கூட (speech-recognition software) மனித மூளைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
ஒரு நபரின் குரலை வைத்தே அவர் யார் என்று நம் மூளை அடையாளம் கண்டுகொள்ளும். அவருடைய உணர்ச்சிகளையும் மொழிநடையையும்கூட புரிந்துகொள்ளும். சூப்பர் கம்ப்யூட்டர்களால்கூட இதையெல்லாம் செய்ய முடியாது. மூளையின் இந்த அபார திறனோடு ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமைத் தயாரிக்க மென்பொருள் பொறியாளர்கள் முயற்சி செய்துகொண்டிருகிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வதன் மூலம் விஞ்ஞானிகள் உண்மையில் கடவுளின் கைவண்ணத்தைத்தான் இன்னும் நன்றாகப் ஆராய்கிறார்கள்.