அட்டைப்படக் கட்டுரை | பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகமா?
பைபிள்—எல்லா விதத்திலும் துல்லியமானது
அறிவியல்பூர்வமாக துல்லியமானது
பைபிள் ஒரு அறிவியல் புத்தகம் இல்லையென்றாலும், அறிவியல் விஷயங்களைப் பற்றி அது துல்லியமாக சொல்கிறது. இதை எப்படிச் சொல்லலாம்? சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
வானவியல்-மழை உருவாகும் விதம்
“[கடவுள்] தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார். அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார். அது மேகங்களிலிருந்து பொழிகிறது” என்று பைபிள் சொல்கிறது.—யோபு 36:27, 28.
நீர் சுழற்சியில் உட்பட்டிருக்கும் மூன்று முக்கியமான விஷயங்களை இந்த வசனம் விவரிக்கிறது. சூரியனைப் படைத்த கடவுள், முதலில் சூரிய வெப்பத்தின் மூலமாக “தண்ணீரை ஆவியாக (evaporation) மேலே போக வைக்கிறார்.” பிறகு, இந்த நீராவி மேலே போனதும் மேகங்களோடு சேர்ந்து குளிர்வடைகிறது (condensation). கடைசியில், அது மழையாகவோ அல்லது வேறு விதமாகவோ (precipitation) பூமியின் மீது பொழிகிறது. இன்றுவரை, வானவியல் ஆராய்ச்சியாளர்களால் மழையைப் பற்றிய எல்லா விவரங்களையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. “மேகங்கள் திரண்டிருக்கும் அதிசயத்தை யாராவது புரிந்துகொள்ள முடியுமா?” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை! (யோபு 36:29) நீர் சுழற்சியைப் பற்றிய எல்லா விவரங்களும் படைப்பாளருக்கு தெரியும். அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே, மனிதர்கள் மூலமாக பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.
மரபியல்-மனித கருவின் வளர்ச்சி
பைபிள் எழுத்தாளரான தாவீது ராஜா கடவுளிடம் இப்படிச் சொன்னார்: “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன. என்னுடைய உறுப்புகள் . . . ஒவ்வொன்றைப் பற்றியும் . . . உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.” (சங்கீதம் 139:16) ஒரு கரு வளர்வதற்கு தேவையான தகவல்கள் ஏதோவொரு “புத்தகத்தில்” முன்னதாகவே எழுதப்பட்டிருக்கிறது (திட்டமிடப்பட்டிருக்கிறது) என்று தாவீது கவிதை நடையில் சொல்கிறார். 3,000 வருஷங்களுக்கு முன்பே தாவீது இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்!
1860-களில்தான் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கிரீகர் மெண்டல், மரபியலின் அடிப்படை உண்மைகளைக் கண்டுபிடித்தார். மனிதனின் உடல் உறுப்புகள் உருவாவதற்கும் அவை தொடர்ந்து செயல்படுவதற்கும் தேவையான மரபியல் தகவல்கள் மனித ஜீனோமில் இருக்கின்றன. ஏப்ரல் 2003-ல்தான், இந்த ஜீனோமை ஆராய்ச்சியாளர்கள் வரிசைப்படுத்தி முடித்தார்கள். ஒரு அகராதியில் இருக்கும் எழுத்துகளும் வார்த்தைகளும் எப்படி ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறதோ அதேபோல் ஜீன்களில் இருக்கும் மரபியல் தகவல்களும் ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த மரபியல் தகவல்களின் அடிப்படையில்தான் ஒரு கருவின் உறுப்புகள், அதாவது மூளை, இதயம், நுரையீரல், கை-கால் போன்றவை சரியான வரிசையிலும் சரியான நேரத்திலும் உருவாகிறது. ஒரு மனிதனின் மரபியல் தகவல்கள் அடங்கிய ஜீனோமை, “உயிரைப் பற்றி விவரிக்கும் புத்தகம்” என்று விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தை தாவீது ராஜாவால் எப்படித் துல்லியமாக சொல்ல முடிந்தது? “யெகோவாவின் சக்தி என் மூலம் பேசியது; அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது” என்று அவரே ஒத்துக்கொள்கிறார். *—2 சாமுவேல் 23:2.
நடக்கவிருந்த சம்பவங்களைத் துல்லியமாக சொன்னது
ஒரு அரசாங்கம் எப்போது ஆட்சிக்கு வரும்... எப்போது வீழ்ச்சியடையும்... இதெல்லாம் எப்படி நடக்கும்... போன்ற விவரங்களை யாராலும் சரியாக சொல்ல முடியாது. ஆனால், இதுபோன்ற விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, பலம்படைத்த ராஜ்யங்களும் பெரிய நகரங்களும் எப்படி அழிக்கப்படும் என்ற துல்லியமான விவரங்கள் பைபிளில் முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
பாபிலோன்–அதன் வீழ்ச்சியும் அழிவும்
பூர்வகால பாபிலோன் சக்திபடைத்த சாம்ராஜ்யமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆசிய பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஒரு காலத்தில், பாபிலோன்தான் உலகத்திலேயே மிகப் பெரிய நகரம். ஆனால், கோரேசு என்ற வெற்றிவீரர் பாபிலோனைக் கைப்பற்றுவார் என்றும் கடைசியில் யாருமே குடியிருக்க முடியாத அளவுக்கு அந்த நகரம் பாழாய்ப்போகும் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுள் சொன்னார். அதுவும் அந்தச் சம்பவம் நடப்பதற்கு 200 வருஷங்களுக்கு முன்பே சொன்னார்! (ஏசாயா 13:17-20; 44:27, 28; 45:1, 2) இது உண்மையிலேயே நடந்ததா?
கி.மு. 539 அக்டோபர் மாதத்தில், மகா கோரேசு பாபிலோனை ஒரே ராத்திரியில் கைப்பற்றினார். அந்த நகரத்தைச் சுற்றியிருந்த பகுதிகளை வளமாக வைத்திருந்த கால்வாய்களும் சரியான பராமரிப்பு இல்லாமல் காலப்போக்கில் வற்றிப்போனது. பிறகு, கி.பி. 200-ல் இந்த இடம் வெறிச்சோடிப்போனதாக தெரிகிறது. இன்று, பாபிலோனின் இடிபாடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. பைபிள் சொன்னது போலவே பாபிலோன் ‘அடியோடு அழிந்துபோனது!’—எரேமியா 50:13.
நடக்கவிருந்த சம்பவங்களை இந்த பைபிள் எழுத்தாளரால் எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடிந்தது? “பாபிலோனுக்கு எதிரான தீர்ப்பைப் பற்றி ஆமோத்சின் மகனாகிய ஏசாயா,” ஒரு ‘தரிசனத்திலிருந்து’ தெரிந்துகொண்டார் என்று பைபிளே சொல்கிறது.—ஏசாயா 13:1.
நினிவே–‘பாலைவனம் போலாகும்’
நினிவே, அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரம். கலைநயமிக்க கட்டிடங்கள் அந்த நகரத்துக்கு அழகு சேர்த்தன. பிரமாண்டமான அரண்மனைகள், விசாலமான தெருக்கள், பூங்காக்கள், கோயில்கள் போன்றவை அங்கு இருந்தன. இப்பேர்ப்பட்ட நகரம் ‘பாழாகி பாலைவனம் போலாகும்’ என்று செப்பனியா தீர்க்கதரிசி முன்னதாகவே சொன்னார்.—செப்பனியா 2:13-15.
கி.மு. ஏழாம் நூற்றாண்டில், பாபிலோன் மற்றும் மேதிய படைகள் ஒன்றுசேர்ந்து வந்து நினிவே நகரத்தை முழுவதுமாக அழித்தன. தோற்கடிக்கப்பட்ட இந்த நகரத்தை “2,500 வருஷங்களாக மக்கள் மறந்தே போய்விட்டார்கள்” என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. நினிவே என்ற ஒரு நகரம் உண்மையிலேயே இருந்ததா என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நினிவே நகரத்தின் இடிபாடுகளைத் தோண்டி எடுத்தார்கள். இன்று, இந்த இடிபாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே வருகின்றன. மக்களும் அதை நாசமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் “நினிவே நகரத்தின் இடிபாடுகளும் மண்ணோடு மண்ணாகிவிடும்” என்று உலகளாவிய பாரம்பரிய நிதியம் (Global Heritage Fund) எச்சரிக்கிறது.
செப்பனியா தீர்க்கதரிசிக்கு இந்தத் தகவல் எப்படி முன்னதாகவே தெரிந்தது? இந்தத் தகவல் தனக்கு ‘யெகோவாவிடமிருந்து கிடைத்தது’ என்று அவரே சொன்னார்.—செப்பனியா 1:1.
வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் பதில் தருகிறது
வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் திருப்தியான பதில்கள் இருக்கின்றன. சில கேள்விகளை இப்போது பார்க்கலாம்.
உலகில் ஏன் இத்தனை பிரச்சினைகளும் கெட்ட காரியங்களும் நடக்கின்றன?
இதற்கான காரணங்களை பைபிள் விவரமாக விளக்குகிறது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
-
“மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.”—பிரசங்கி 8:9.
மனித ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறவர்களாகவும் திறமை இல்லாதவர்களாகவும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
-
“எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.”—பிரசங்கி 9:11.
மோசமான நோய், விபத்து, பேரழிவு போன்றவை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
-
“ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.”—ரோமர் 5:12.
கடவுள் முதல் ஆணையும் பெண்ணையும் பரிபூரணமாக படைத்தார். சாகாமல் என்றென்றும் வாழ்வதற்காக அவர்களைப் படைத்தார். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனபோது பாவம் ‘இந்த உலகத்துக்கு வந்தது.’
கஷ்டங்களுக்கான காரணத்தை மட்டுமல்ல, சீக்கிரத்தில் கடவுள் அதையெல்லாம் சரிசெய்யப் போகிறார் என்றும் பைபிள் சொல்கிறது. மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது?
மரணத்தை, சுயநினைவில்லாத ஒரு நிலைக்கு பைபிள் ஒப்பிடுகிறது. “உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. நாம் சாகும்போது நம்முடைய எல்லா ‘யோசனைகளும் அழிந்துபோகின்றன.’ (சங்கீதம் 146:4) மூளையும் ஐம்புலன்களும் செயலிழந்து போகின்றன. அதனால், இறந்த பிறகு நம்மால் எதையும் செய்யவோ உணரவோ யோசிக்கவோ முடியாது.
சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்ல, இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்ற சந்தோஷமான செய்தியையும் பைபிள் சொல்கிறது.—ஓசியா 13:14; யோவான் 11:11-14.
மனிதர்களை கடவுள் ஏன் படைத்தார்?
யெகோவா தேவன்தான் முதல் ஆணையும் பெண்ணையும் படைத்தார். (ஆதியாகமம் 1:27) முதல் மனிதனை “கடவுளின் மகன்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 3:38) திருப்தியான வேலைகளைச் செய்வதற்காகவும்... என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்காகவும்... தன்னோடு நல்ல நட்பை வைத்துக்கொள்வதற்காகவும்... மனிதர்களை கடவுள் படைத்தார். அதனால்தான் மனிதர்களுக்குள் ஆன்மீக உணர்வு இயல்பாகவே இருக்கிறது. அதாவது, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று பைபிள் சரியாகவே சொல்கிறது.—மத்தேயு 5:3.
லூக்கா 11:28) பைபிள் நமக்கு கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுப்பதோடு, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது. அதுமட்டுமல்ல, இப்போதே சந்தோஷமாக வாழ உதவி செய்கிறது.
“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று பைபிள் சொல்கிறது. (பைபிளின் நூலாசிரியரோடு நட்பு!
ஆதாரங்களை அலசி ஆராய்ந்த பிறகு, பைபிள் வெறுமனே ஒரு பழங்காலத்து புத்தகம் இல்லை என்பதை லட்சக்கணக்கானோர் ஒத்துக்கொள்கிறார்கள். ‘கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்தான்’ பைபிள் எழுதப்பட்டது என்றும், அதன் மூலமாக கடவுள் நம் ஒவ்வொருவரோடும் பேசுகிறார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்... அவரோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும்... என்று கடவுளே ஆசைப்படுவதாக பைபிள் சொல்கிறது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.
பைபிளை ஆழமாக படித்தால் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்துகொள்வீர்கள். அது என்ன? பொதுவாக, ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதன் நூலாசிரியர் எப்படி யோசிக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும். அதேபோல், பைபிளைப் படிக்க படிக்க அதன் நூலாசிரியரான கடவுள், எப்படி யோசிக்கிறார்... எப்படி உணருகிறார்... என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். நம்மை படைத்தவர் எப்படியெல்லாம் உணருகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! அதோடு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியும் பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்:
-
கடவுளுடைய பெயர், அவருடைய சுபாவம், அவருக்கு இருக்கும் அருமையான குணங்கள்.
இன்னும் நிறைய விஷயங்கள் பைபிளில் இருக்கின்றன. அதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு இலவசமாக பைபிளைப் பற்றி சொல்லித்தருவார்கள். பைபிளின் நூலாசிரியரான யெகோவா தேவனோடு இன்னும் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள இந்த பைபிள் படிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பைபிள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதற்கு இந்தக் கட்டுரையில் சில ஆதாரங்களைப் பார்த்தீர்கள். கூடுதலாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 2-ஐ பாருங்கள். இது www.mr1310.com என்ற வெப்சைட்டிலும் கிடைக்கும். அல்லது இந்த code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்
www.mr1310.com வெப்சைட்டில் இருக்கும் பைபிளின் நூலாசிரியர் யார்? என்ற வீடியோவையும் பாருங்கள்
வெளியீடுகள் > வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்
^ பாரா. 10 கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 83:18.