Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலர் என்ன நம்புகிறார்கள்?

சிலர் என்ன நம்புகிறார்கள்?

இந்துக்கள்,

இந்த ஜென்மத்திலோ போன ஜென்மத்திலோ ஒரு நபர் செய்த பாவம்தான் அவர் கஷ்டப்படுவதற்கான காரணம் என்று நம்புகிறார்கள். பல ஜென்மங்கள் எடுப்பதிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைய வேண்டும் என்றால், எந்தச் சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் ஒரு துறவியாக வாழ வேண்டும் என்றும் நம்புகிறார்கள்.

முஸ்லிம்கள்,

கஷ்டங்களை பாவத்துக்குக் கிடைக்கிற தண்டனையாகவும், கடவுள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வருகிற சோதனையாகவும் பார்க்கிறார்கள். “நமக்குக் கிடைக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், உதவி தேவைப்படுகிறவர்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்பதையும் நமக்கு வரும் கஷ்டங்கள் ஞாபகப்படுத்துவதாக வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்புடைய (ISNA) தலைவர் டாக்டர் சயெத் சயீத் சொல்கிறார்.

யூதர்களுடைய நம்பிக்கைபடி,

ஒரு நபருக்குக் கஷ்டம் வருவதற்குக் காரணம் அவர் செய்யும் செயல்கள்தான். சில யூதர்கள், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்றும், அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். கபாலா யூத மதம், மறுபிறவி இருக்கிறது என்று கற்பிக்கிறது. மறுபிறவியின் மூலம், பாவம் செய்த ஒருவருக்கு, அதற்கான பரிகாரத்தைச் செய்ய திரும்பத் திரும்ப வாய்ப்பு கிடைக்கிறது என்று அது சொல்கிறது.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்,

கஷ்டங்கள் பல ஜென்மங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறார்கள். ஒரு நபர் தன் மோசமான செயல்களை, உணர்ச்சிகளை, ஆசைகளை அடக்கும் வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருப்பார் என்று நம்புகிறார்கள். ஞானத்தின் மூலமும், நல்ல செயல்களின் மூலமும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலமும் ஒருவரால் எந்தக் கஷ்டமும் இல்லாத ஒரு நிலையை அடைய முடியும். அதைத்தான் நிர்வாணா என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

கன்பூசியர்கள்,

மனிதர்கள் எதிர்ப்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அவர்களுடைய “இயலாமையும், அவர்கள் செய்யும் தவறுகளும்தான்” காரணம் என்று நம்புவதாக எ டிக்‍ஷ்னரி ஆஃப் கம்பேரட்டிவ் ரிலிஜியன் சொல்கிறது. நல்லவர்களாக வாழும்போது கஷ்டங்கள் வருவதைக் குறைக்க முடியும் என்று அவர்களின் கோட்பாடு சொல்கிறது. ஆனால், நிறைய பிரச்சினைகளுக்கு “மனிதர்களைவிட சக்திபடைத்த ஆவிகள்தான் காரணம். அதுபோன்ற சமயங்களில், விதி விட்ட வழியை மனிதன் எந்தக் குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அது சொல்கிறது.

சில பழங்குடி மதங்கள்,

கஷ்டங்களுக்குப் பில்லிசூனியம்தான் காரணம் என்று கற்பிக்கின்றன. அந்த மதங்களின் நம்பிக்கைப்படி, சூனியக்காரர்களால் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவர முடியும், சாபத்தையும் கொண்டுவர முடியும். நிறைய சடங்குகளைச் செய்தவன்மூலம் அவர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம். அதனால், யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போகும்போது, மந்திரவாதிகள் செய்யும் சடங்குகளும் அவர்கள் தரும் மருந்துகளும் சூனியக்காரர்களுடைய சாபத்தைத் தவிடுபொடி ஆக்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கிறிஸ்தவர்கள்,

முதல் மனித தம்பதி செய்த பாவம்தான் நம் கஷ்டங்களுக்குக் காரணம் என்று நம்புகிறார்கள். இதைத்தான் பைபிளில் இருக்கும் ஆதியாகமம் என்ற புத்தகம் சொல்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் இருக்கிற நிறைய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், இந்தப் போதனையோடு தங்களுடைய சொந்தக் கருத்துகளைச் சேர்த்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில கத்தோலிக்கர்கள், நம்முடைய கஷ்டங்கள் கடவுளுக்கு நாம் கொடுக்கும் பலியாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதை வைத்து கடவுள் ஒரு சர்ச்சை ஆசீர்வதிப்பார், அல்லது இரட்சிப்பையும் ஆசீர்வாதத்தையும் இன்னொரு நபருக்குக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள்.

அதிகம் தெரிந்துகொள்ள...

எல்லா விதமான வணக்கத்தையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா? என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.