பணப் பிரச்சினைகளைச் சமாளிக்க . . .
பைபிள் சொல்கிறபடி நடந்ததால், நிறைய பேருக்குப் பணப் பிரச்சினைகள் குறைந்திருக்கின்றன.
நன்றாகத் திட்டமிடுங்கள்
பைபிள் ஆலோசனை: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.”—நீதிமொழிகள் 21:5.
இதன் அர்த்தம் என்ன? முதலில் நன்றாகத் திட்டம் போடுங்கள். திட்டம் போட்டபடி செலவு செய்யுங்கள். இதுதான் வெற்றியின் ரகசியம். பெரும்பாலும், ஆசைப்பட்ட எல்லாவற்றையும் உங்களால் வாங்க முடியாது. அதனால், பணத்தைப் பார்த்து பார்த்து செலவு செய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
பட்ஜெட் போட்டபடி செலவு செய்யுங்கள். உங்களுக்கு இருக்கிற எல்லா செலவுகளையும் முதலில் பட்டியல் போடுங்கள். அவற்றை போக்குவரத்து, கல்வி, உணவு என பல பிரிவுகளாகப் பிரித்து எழுதுங்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தொகையை ஒதுக்குங்கள். ஒரு பிரிவில் அதிகமாகச் செலவாகிவிட்டால், இன்னொரு பிரிவுக்கு ஒதுக்கியிருக்கிற பணத்தில் கொஞ்சம் எடுத்து செலவை ஈடுகட்டுங்கள். உதாரணத்துக்கு, பெட்ரோல் செலவு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாகிவிட்டதா? அவ்வளவு முக்கியமாக இல்லாத விஷயத்துக்கு ஒதுக்கியிருந்த பணத்தை வைத்து, உதாரணத்துக்கு ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவதற்காக ஒதுக்கியிருந்த பணத்தை வைத்து, செலவை சமாளியுங்கள்.
-
தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். முடிந்தவரை, கடன் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையானதை வாங்க பணத்தைச் சேர்த்து வையுங்கள். நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? அப்படியானால், கட்ட வேண்டிய பணத்தை அந்தந்த மாதமே முழுவதுமாகக் கட்டிவிடுங்கள். அப்படிச் செய்தால், வட்டி கட்ட வேண்டிய அவசியம் வராது. நீங்கள் ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால், அதை அடைப்பதற்கு திட்டம் போட்டு, அதன்படி செய்யுங்கள்.
பொதுவாக, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குகிறவர்கள், பணத்தை அதிகமாகச் செலவழிப்பதாக ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால், அதைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.
கெட்ட பழக்கங்கள்—உஷார்!
பைபிள் ஆலோசனை: “சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான். அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்.”—நீதிமொழிகள் 20:4.
இதன் அர்த்தம் என்ன? சோம்பேறித்தனம் வறுமையில் கொண்டுபோய் விடும். அதனால், சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள். முடிந்தவரை, எதிர்காலத்துக்காகச் சேர்த்து வையுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
கடினமாக உழையுங்கள். உங்கள் வேலை பறிபோகாமல் இருக்க, கடினமாக வேலை செய்யுங்கள்; பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஆட்களைத்தான் முதலாளிகள் விரும்புகிறார்கள்.
-
நேர்மையாக இருங்கள். முதலாளியிடமிருந்து திருடாதீர்கள். நேர்மையாக இல்லையென்றால், உங்கள் பெயர் கெட்டுவிடும். பிறகு, உங்களுக்கு வேலை கிடைப்பதே திண்டாட்டமாகிவிடும்.
-
பேராசையைத் தவிருங்கள். பணம், பணம் என்று ஓட ஆரம்பித்தால், உடம்பு கெட்டுவிடும். உறவுகளும் முறிந்துவிடும். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்னும் சில பைபிள் ஆலோசனைகள்
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி, நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்.
“குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள். தூக்க மயக்கத்திலேயே இருப்பவர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள்.”—நீதிமொழிகள் 23:21.
பணத்தை நினைத்து ரொம்பக் கவலைப்படாதீர்கள்.
“எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.”—மத்தேயு 6:25.
பொறாமைப்படாதீர்கள்.
“பொறாமைபிடித்தவன் சொத்து சேர்ப்பதில் வெறியாக இருக்கிறான். ஆனால், வறுமை அவனைத் துரத்திப் பிடித்துவிடுமென்று தெரியாமல் இருக்கிறான்.”—நீதிமொழிகள் 28:22.