Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

போர்

போர்

பூர்வ காலங்களில், இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளான யெகோவாவின் பெயரில் போர் செய்தார்கள். அதற்காக, இன்று நடக்கும் போர்களை கடவுள் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமா?

பூர்வ கால இஸ்ரவேலர்கள் ஏன் போர் செய்தார்கள்?

மக்கள் என்ன சொல்கிறார்கள்

 

இரத்தவெறி பிடித்த ‘குல தெய்வத்தை’ இஸ்ரவேலர்கள் வணங்கினார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது

 

இஸ்ரவேலர்களால் தோற்கடிக்கப்பட்ட ஜனங்கள் கொடூரமானவர்களாக இருந்தார்கள். மிருகங்களோடு உறவுகொள்வது, இரத்த பந்தங்களோடு உறவுகொள்வது, பிள்ளைகளைப் பலி கொடுப்பது போன்ற கீழ்த்தரமான விஷயங்களைச் செய்துவந்தார்கள். தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள அந்த ஜனங்களுக்கு நூற்றுக்கணக்கான வருஷங்கள் கடவுள் வாய்ப்பு கொடுத்தார். அதற்குப் பிறகு, “உங்களிடமிருந்து நான் துரத்திவிடுகிற ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து தங்களை அசுத்தமாக்கிக்கொண்டார்கள்” என்று கடவுள் சொன்னார்.—லேவியராகமம் 18:21-25; எரேமியா 7:31.

“அவர்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கிறார்.”—உபாகமம் 9:5.

இன்று நடக்கும் போரில் கடவுள் யார் பக்கமாவது இருக்கிறாரா?

நீங்கள் இதைக் கவனித்திருப்பீர்கள்

 

நிறைய போர்களில், கடவுள் தங்கள் பக்கம் இருப்பதாக இரண்டு தரப்பு மதத் தலைவர்களும் சொல்லிக்கொள்கிறார்கள். “நடந்து முடிந்த எல்லா போர்களுக்கும் மதத்துக்கும் எப்போதும் சம்பந்தம் இருந்திருக்கிறது” என்று காஸஸ் ஆஃப் வார் என்ற ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது.

பைபிள் என்ன சொல்கிறது

 

எதிரிகளோடு சண்டை போட கிறிஸ்தவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ‘கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள். நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் இருங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் தன் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்.—ரோமர் 12:18, 19.

தன்னைப் பின்பற்றியவர்களை இயேசு போருக்கு அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.” (மத்தேயு 5:44, 45) தங்கள் நாட்டில் இருப்பவர்கள் ஒருவேளை போருக்குப் போனாலும், கிறிஸ்தவர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும், “உலகத்தின் பாகமாக” இருக்கக் கூடாது. (யோவான் 15:19) உலகம் முழுவதும் இருக்கிற தன்னுடைய வணக்கத்தார், எதிரிகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்றும், இந்த உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் கடவுள் எதிர்பார்க்கிறார். அப்படியிருக்கும்போது, இன்று நடக்கும் போரில் அவர் யார் பக்கமாவது இருக்க முடியுமா?

“என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல. என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள். ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல.”—யோவான் 18:36.

போர் என்றாவது முடிவுக்கு வருமா?

மக்கள் என்ன சொல்கிறார்கள்

 

போரைத் தவிர்க்கவே முடியாது. “போர் என்றென்றும் இருக்கும்” என்று வார் அண்ட் பவர் இன் தி டுவென்டிஃபர்ஸ்ட் சென்ச்சுரி என்ற ஒரு ஆங்கில புத்தகம் சொல்கிறது. “இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் என்றென்றும் சமாதானம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது.”

பைபிள் என்ன சொல்கிறது

 

போர் முடிவுக்கு வரும், போர் செய்ய வேண்டும் என்ற ஆசையும் யாருக்கும் இருக்காது. பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஒரு உண்மையான அரசாங்கம், அதாவது கடவுளுடைய அரசாங்கம், பூமியில் இருக்கும் எல்லா போர்க் கருவிகளையும் நீக்கிவிடும். எப்படிச் சமாதானமாக வாழலாம் என்பதைப் பற்றியும் அது மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். “தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களை [கடவுள்] சரிசெய்வார். அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—மீகா 4:3.

கடவுளுடைய அரசாங்கத்தில், தங்களுடைய சொந்த நலனுக்காகப் போட்டிபோடும் தேசிய அரசாங்கங்களோ, கலவரத்தில் ஈடுபட தூண்டும் நியாயமற்ற கொள்கைகளோ, இன வேற்றுமையைத் தூண்டும் தப்பெண்ணமோ இருக்கவே இருக்காது. முடிவாக, போரும் இல்லாமல் போய்விடும். “யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது. ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—ஏசாயா 11:9.

“அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:9.