Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்பிக்கைக்கு காரணமுண்டா?

நம்பிக்கைக்கு காரணமுண்டா?

நம்பிக்கைக்கு காரணமுண்டா?

“மண வாழ்க்கை இனிமேல் உருப்படவே உருப்படாது என்ற வைராக்கியத்தை மனசுக்குள் வளர்த்துக்கொள்வதே வேதனைமிக்க திருமண வாழ்க்கையில் இருக்கும் ஒரு பிரச்சினை. இப்படிப்பட்ட எண்ணம், மாற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஏனென்றால் முயற்சி எடுக்கும் எண்ணத்தையே இது முறித்துவிடுகிறது.”​—⁠டாக்டர் ஏரன் டி. பெக்.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு வேதனையில் துடிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். சிகிச்சைக்காக டாக்டரிடம் போகிறீர்கள். இப்படிப்பட்ட சமயத்தில் நீங்கள் கவலையோடு இருப்பது நியாயம்தான். ஏனென்றால், உங்களுடைய ஆரோக்கியம்​—⁠ஏன், உங்களுடைய உயிரே​—⁠ஆபத்தில் இருக்கலாம். ஆனால், அந்த டாக்டர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, இது சாதாரண ஒரு காயமல்ல, ஆனால் இதை நிச்சயம் குணமாக்கிவிடலாம் என்ற ஆறுதலான செய்தியை சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். உணவு விஷயத்திலும், உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தினால், நீங்கள் பூரண சுகம் பெறலாம் என டாக்டர் சொல்கிறார். அந்த வார்த்தைகளை கேட்டவுடன் நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. டாக்டருடைய ஆலோசனையை சந்தோஷத்துடன் ஏற்று அதை அப்படியே பின்பற்றுவீர்கள்!

இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கும் விஷயத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய திருமண வாழ்க்கையில் மனவேதனையை அனுபவிக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொருவருடைய மண வாழ்க்கையிலும் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கும் என்பது உண்மைதான். ஆகவே, உங்களுடைய உறவில் சிலசமயங்களில் ஏற்படும் சில பூசல்கள்தானே உங்களுடைய மண வாழ்க்கையில் அன்பு இல்லை என அர்த்தப்படுத்திவிடாது. ஆனால் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில்கூட மனவேதனையால் துடித்துக்கொண்டிருந்தால்? அப்படியானால், நீங்கள் கவலைப்படுவது நியாயம்தான், இது சாதாரண விஷயம் அல்ல. சொல்லப்போனால், தாம்பத்தியத்தின் தரம் உங்களுடைய வாழ்க்கையின்​—⁠உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையின்​—⁠கிட்டத்தட்ட எல்லா அம்சத்தையும் பாதிக்கலாம். உதாரணமாக, மண வாழ்க்கையில் ஏற்படும் வேதனையே மன உளைச்சல், வேலையில் திறமையின்மை, பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு கடவுளோடுள்ள உறவையும் பாதிக்கலாம் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.​—1 பேதுரு 3:7.

உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் பிரச்சினைகள் இருப்பதால் நிலைமை கைமீறி போய்விட்டது, இனி நம்பிக்கைக்கே இடமில்லை என அர்த்தப்படுத்துவதில்லை. மண வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, கண்டிப்பாக பிரச்சனைகள் வரும் என்பதை கணவனும் மனைவியும் எதிர்பார்ப்பது, பிரச்சினைகளுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வுகாண உழைப்பதற்கு உதவலாம். ஐஸிக் என்ற கணவர் இவ்வாறு கூறுகிறார்: “குடும்ப வாழ்க்கையில சந்தோஷம் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. வாழ்க்கைன்னா மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும் என்பது எனக்கு தெரியாமபோச்சு. எங்ககிட்ட ஏதோ குறை இருக்கு என நினைச்சேன்!”

உங்களுடைய மண வாழ்க்கை அன்பற்று சீரழிந்த நிலைக்கு சென்றுவிட்டாலும் அதை மணம் வீசச் செய்ய முடியும். உண்மைதான், உறவில் விரிசல் ஏற்படும்போது​—⁠அதுவும் பிரச்சினைகள் வருஷக்கணக்காக குமுறிக் கொண்டிருக்கும்போது​—⁠உணர்ச்சிக் காயங்கள் ஆழமானதாக இருக்கும். இருந்தாலும், நம்பிக்கைக்கு பலமான காரணம் உள்ளது. உள்ளான தூண்டுதலே முக்கிய அம்சமாகும். இருவருக்கிடையே மிக மோசமான பிரச்சினைகள் இருந்தாலும், அதை சரிப்படுத்துவதன் அவசியத்தை இருவருமே உணருகையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். a

ஆகவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சுமூகமான உறவை வைத்துக்கொள்வதற்கு நான் எந்தளவுக்கு ஆசைப்படுகிறேன்?’ உங்களுடைய தாம்பத்தியத்தை சீர்ப்படுத்த நீங்களும் உங்கள் துணையும் மனப்பூர்வமாக முயற்சி செய்கிறீர்களா? முன்னால் குறிப்பிடப்பட்ட டாக்டர் பெக் இவ்வாறு கூறுகிறார்: “குறைகளை சரிசெய்து நிறைகளை வலுப்படுத்த இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்கும்போது, ஊசலாடும் உறவு எப்படி உறுதியடைகிறது என்பதை நானும் அடிக்கடி பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு.” ஆனால், ஒன்று சேர்ந்து உழைக்க உங்களுடைய துணைவர் முன்வரவில்லை என்றால்? அல்லது அவர் பிரச்சினையே இல்லாததுபோல் கண்டுகொள்ளாதிருந்தால்? நீங்கள் ஒருவர் மட்டுமே அதற்காக பாடுபடுவது வீணானதா? இல்லவே இல்லை. “நீங்கள் சில மாற்றங்களைச் செய்தால், அதுவே உங்கள் துணையும் மாற்றங்களைச் செய்வதற்குத் தூண்டலாம்​—⁠பெரும்பாலும் அப்படித்தான் தூண்டியிருக்கிறது” என டாக்டர் பெக் கூறுகிறார்.

உங்களுடைய விஷயத்தில் இது சாத்தியமல்ல என அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணமே உங்கள் மண வாழ்வில் மண்ணை தூவலாம்! ஆகவே, சரிப்படுத்துவதற்கு உங்களில் ஒருவர் முன்வர வேண்டும். அது நீங்களாக இருக்கக் கூடாதா? நீங்கள் மாத்திரம் களத்தில் இறங்கிவிட்டால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கட்டுவதற்கு உங்களோடு சேர்ந்து உழைப்பதால் வரும் நன்மையை அவரும் காணலாம்.

அப்படியானால், தனியாகவோ அல்லது இருவராகவோ உங்கள் திருமண பந்தத்தைப் பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் சக்திவாய்ந்த புத்தகம் பைபிளே. எப்படி என்பதை நாம் காணலாம்.

(g01 1/8)

[அடிக்குறிப்பு]

a குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில், பிரச்சினைகள் கட்டுக்கடங்காமல் போகையில் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ தகுந்த காரணங்கள் இருக்கலாம். (1 கொரிந்தியர் 7:10, 11) மேலும், வேசித்தனத்தின் நிமித்தம் மணவிலக்கு செய்துகொள்ள பைபிள் அனுமதிக்கிறது. (மத்தேயு 19:9) துணை அவிசுவாசியாக இருந்தால் மணவிலக்கு செய்துகொள்வதா வேண்டாமா என்பது ஒருவருடைய தனிப்பட்ட தீர்மானம். மற்றவர்கள் அத்தீர்மானத்தில் தலையிட்டு அதை மாற்ற முயற்சி செய்யக்கூடாது.​—⁠உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 158-61-ஐக் காண்க.