Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் அறிவுரையை நீங்கள் நம்பலாமா?

பைபிளின் அறிவுரையை நீங்கள் நம்பலாமா?

பைபிளின் அறிவுரையை நீங்கள் நம்பலாமா?

பழைய கார்களை விற்கும் ஒருவர் உங்களிடம் ஒரு காரை விற்க பார்க்கிறார் அல்லது தேர்தலில் நிற்கும் ஓர் அரசியல்வாதி வாக்குறுதி மேல் வாக்குறுதி அடுக்கிக்கொண்டே போகிறார். ‘இவர் சொல்வதை நம்பலாமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். மதிப்பில்லாத பொருள்களை வாங்குவதற்கும் பயனற்ற விஷயங்களைக் கேட்பதற்கும் உங்கள் பணத்தையோ நேரத்தையோ விரயம் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

அதேபோல் நீங்கள் இப்படியும் யோசிக்கலாம்: ‘பைபிளிலிருந்து நான் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது பிரயோஜனமான விஷயம் இருக்கிறதா? இந்தப் புத்தகத்தைக் கவனமாய்ப் படிப்பதற்கு நான் செலவிடும் நேரமும் எடுக்கும் முயற்சியும் பலனுள்ளதாய் இருக்குமா?’ இந்தக் கேள்விகளுக்கு பைபிளே பதிலளிக்கிறது: “ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11:19, பொது மொழிபெயர்ப்பு) ஆம், குறிப்பிட்ட ஓர் அறிவுரையின்படி செயல்பட்டதன் விளைவாக அதாவது, ‘ஞானத்தின்’ விளைவாகக் கிடைக்கும் பலன்கள் அந்த அறிவுரை பிரயோஜனமானதா இல்லையா என்பதை நிரூபிக்கும். பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்தவர்களின் அனுபவங்கள் கீழே உள்ளன. தனித்துவம் வாய்ந்த இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க அவர்களுடைய அனுபவங்கள் உங்களுக்கு உதவும்.

மரணம், மரணத்திற்குப் பின் வாழ்க்கை பற்றிய கேள்விகள்

அமெரிக்காவில் வசிக்கிற கேரன் என்பவருடைய தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நல்லவர்கள் இறந்த பிறகு பரலோகத்திற்குச் செல்வார்கள் என்று சிறுவயது முதல் கேரன் நம்பினார். இந்த நம்பிக்கை அவருக்கு ஆறுதலளிக்கவில்லை. ‘என் அம்மா இப்போது பரலோகத்தில் இருக்கிறார் என்றால் பார்க்கிறதற்கு எப்படி இருப்பார்? ஒருவேளை நான் அங்குச் சென்றால் என்னால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? நான் இறந்த பிறகு வேறு எங்காவது செல்வேனா?’ என்றெல்லாம் அவர் யோசித்தார்.

கேரன், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். இறந்தவர்கள் பரலோகத்தில் இல்லை, மாறாக அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோன்ற ஒரு நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. ஆனால், இறந்துபோன அவருடைய தாயை மீண்டும் பார்க்க முடியுமா?

பைபிளின் பின்வரும் தெளிவான பதில் அவருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தது: ‘இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் [கிறிஸ்துவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, . . . [அவர்கள்] எழுந்திருப்பார்கள்.’ (யோவான் 5:28, 29) பைபிள் பிறப்பதற்குக் காரணமாக இருந்த கடவுள், தம் மகனைக் கொண்டு இறந்தவர்களை இதே பூமியில் மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவார் என்பதை கேரன் கற்றுக்கொண்டார். “மரணத்தைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் பைபிள் கற்பிக்கும் விஷயங்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன” என்று அவர் சொன்னார்.

எப்படிப்பட்ட வணக்கம் சரியானது?

ருமேனியாவைச் சேர்ந்த ஆன்ஜெலா என்ற பெண் 14 வயதாக இருந்தபோது, ஒரு பெந்தெகொஸ்தே பாதிரி அவளுக்கு பரிசுத்த ஆவி வர வேண்டுமென ஜெபித்தார். அவள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள். என்றாலும், பெந்தெகொஸ்தே போதனைகள் பைபிளுக்கு முரணாக இருப்பதை அவளுடைய பெற்றோர் உணர்ந்தார்கள். அதனால், அந்தக் கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு குடும்பமாக யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள்.

ஆன்ஜெலாவுக்கு முதலில் ஆர்வமில்லை. என்றாலும், பெந்தேகோஸ்தே மதத்தின் பழக்கவழக்கங்களுக்கும் பைபிளின் போதனைகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைச் சீக்கிரத்தில் தெரிந்துகொண்டாள். உதாரணத்திற்கு, யோவான் 17:3-ஐ அவள் வாசித்தாள். அது சொல்கிறதாவது: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” ஒருவர் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்றால் முதலில் அவருக்குக் கடவுளைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதை ஆன்ஜெலா உணர்ந்தாள். “ஆனால், எனக்குத்தான் கடவுளைப்பற்றி ஒன்றும் தெரியாதே, அப்படியிருக்க எனக்கு எப்படிப் பரிசுத்த ஆவி கிடைத்திருக்கும்?” என்று அவள் கேட்டாள். “யெகோவா, தம்முடைய வார்த்தையின் மூலமாக மெய் வணக்கத்தை அடையாளங்காண எனக்கு உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று ஆன்ஜெலா கூறுகிறாள்.

வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவுரை

இந்தியாவைச் சேர்ந்த கேப்ரியல் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவேன். என்னை மட்டும் யாராவது சீண்டினால் அவ்வளவுதான், தொண்டை கிழிய கத்துவேன். கையில் கிடைப்பதை தூக்கி எறிவேன், கண்டபடி திட்டுவேன், ஏன், அடிக்கவும் தயங்கமாட்டேன். பைபிளைப் படித்தது என் கோபத்தை அடக்க உதவியது. இப்போதெல்லாம், யாராவது என் பொறுமையை சோதித்தாலும் சாந்தமாகவே இருக்கிறேன்.”

நீதிமொழிகள் 16:32 போன்ற வசனங்களை கேப்ரியல் வாசித்திருக்கிறார். அது சொல்வதாவது: “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” கோபத்தை மேற்கொண்ட தீரஜ் என்ற இன்னொரு நபர் இவ்வாறு சொல்கிறார்: “கோபம் என்பது பலவீனம், சாந்தமோ பலம் என்பதைப் புரிந்துகொள்ள இதே வசனம் எனக்கும் உதவியது.”

தென் ஆப்பிரிக்காவில் ஃபிலிப் என்பவர் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவராய் இருந்தார். அடிதடியில் இறங்குவது, திருடுவது, முரட்டுத்தனமாக பேசுவது ஆகியவையெல்லாம் அவருக்குச் சர்வ சாதாரணமாக இருந்தன. தான் செய்த குற்றங்களுக்காக அவர் சிறையிலும் இருந்திருக்கிறார். இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தாலும் கடவுளைத் தெரிந்துகொள்ள ஏங்கினார். யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு கடவுளைச் சேவிக்க வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொண்டார். தன்னைத் திருத்திக்கொள்ளவும் தீர்மானித்தார். தன்னுடைய கெட்ட பழக்கங்களையெல்லாம் நிறுத்தினார். ரவுடி கும்பலுடன் இருந்த தொடர்பையும் அறுத்துக்கொண்டார். இந்த மாற்றங்களைச் செய்வதற்கு எந்த பைபிள் சத்தியங்கள் அவரைத் தூண்டின?

யோவான் 6:44-⁠ல் பதிவாகியுள்ள இயேசுவின் வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் அவருக்குக் காட்டினார்கள். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்று அது சொல்வதை வாசித்துக்காட்டினார்கள். ஃபிலிப் இவ்வாறு சொல்கிறார்: “என்னிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருப்பதை யெகோவா கவனித்திருக்கிறார், அதனால்தான் ஐக்கியமாக இருக்கும் தம் அருமையான மக்களிடம் என்னை வழிநடத்தியிருக்கிறார்.” தவறு செய்தவர்கள் மனம் வருந்தியபோது யெகோவா எப்படி இரக்கம் காட்டினார் என்பதை பைபிளில் படித்தபோது அவர் மனம் உருகியது. “மனந்திரும்பி அவரிடம் வரும் அபூரண மனிதர்களிடம் யெகோவா நியாயமாக நடந்துகொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பதிவுகள் உதவியாக இருந்தன” என்று ஃபிலிப் சொல்கிறார்.​—2 சாமுவேல் 12:1-14; சங்கீதம் 51.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேட் என்ற இளம் நபர் குடிவெறியிலும், போதை மருந்துகளை அளவுக்குமீறி பயன்படுத்துவதிலும், சூதாட்டத்திலும், ஒழுக்கங்கெட்ட நடத்தையிலும் ஈடுபட்டார். இவை எதுவுமே அவருக்குச் சந்தோஷத்தை அளிக்கவில்லை. ஒரு நாள் அவர் யெகோவாவின் சாட்சிகளிடம் பேசினார். இலவசமாக பைபிளைக் கற்றுத்தர அவர்கள் முன்வந்தபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து வேட் என்ன கற்றுக்கொண்டார்?

“இயேசு மற்றவர்களிடம் நடந்துகொண்ட விதம் என்னை நெகிழ வைத்தது” என்கிறார் வேட். “குழந்தைகள் உட்பட அனைவரிடமும் அவர் பரிவுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் நடந்துகொண்டார். அவரைப்பற்றி அதிகதிகமாகக் கற்றுக்கொண்டபோது அவரைப்போலவே இருக்க வேண்டுமென்ற ஆசையும் அதிகரித்தது. என்னை நான் மாற்றிக்கொண்டு ஒரு நல்ல மனிதனாக வாழ்வது எப்படி என்பதை பைபிள் எனக்கு கற்பித்தது.” ஆனால், இதுவரை தான் செய்த தவறுகளைக் குறித்து வேட் மேலும் சொல்வதாவது: “நான் செய்த தவறுகளுக்கு மனம் வருந்தி என்னை நான் மாற்றிக்கொண்டால் கடவுள் என்னை மன்னிப்பார் என்று பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன். சொல்லப்போனால், பரதீஸாக மாறப்போகும் பூமியில் நான் என்றென்றும் வாழ முடியும். எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையையும் பெற்றேன்!” (மத்தேயு 5:5) வேட் தன்னுடைய கெட்ட பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஒரு நல்ல மனசாட்சியுடன் யெகோவாவை வணங்குகிறார்.

தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள விரும்பியவர்கள், மனம்திறந்து சொன்ன விஷயங்களை நாம் இதுவரை பார்த்தோம். தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வும் கேள்விகளுக்குப் பதிலும் பைபிளில் கிடைக்குமா என்று அவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதால் அதன் நடைமுறையான ஆலோசனைகளின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்கும் அவ்வாறே ஏற்படலாம்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் இவ்வாறு எழுதப்பட்டது: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”​—நீதிமொழிகள் 3:13-18.

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

பைபிளைப் படித்து திருந்திய ஒரு கைதி

பில் என்ற ஒருவர் கல்யாணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால், தன் முதல் திருமண நாளைக் கொண்டாடுவதற்குள் சிறைக்குச் சென்றுவிட்டார். அதுவும் பல வருடங்களுக்கு முன்பு செய்த தவறுக்காக.

தன் சுதந்திரத்தைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீண்டு வெளிவந்தபோது தன் சிறைவாசத்தை சிறந்த விதத்தில் கழிக்க வேண்டுமென அவர் தீர்மானித்தார். “என்னுடைய படுக்கையில் இருந்தவாறு பைபிளைப் படித்து தியானித்தேன்” என்கிறார் அவர். படித்ததோடு விட்டுவிடாமல் அவற்றைக் கடைபிடிக்கவும் செய்தார். பில் இவ்வாறு கூறுகிறார்: “சிறையில் என்னோடு இருந்தவர்களுடன் அன்பாக, சிநேகமாகப் பழகினேன். அவர்கள் செய்துவந்த தவறான காரியங்களிலிருந்து நான் விலகியிருக்க விரும்பியதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ‘பில் தன் நேரத்தை வித்தியாசமாகச் செலவிட ஆசைப்படுகிறான். கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் தெரிந்துகொள்வதிலேயே தன் சிறைவாசத்தைக் கழிக்க விரும்புகிறான். அவன் யாரையும் தொந்தரவு செய்யப் போவதில்லை’ என்று அவர்கள் என்னைப்பற்றி சொன்னார்கள்.

“சிறையில் எனக்கு நல்ல பெயர் இருந்ததால் வம்புச்சண்டைகளிலோ தேவையில்லாத மற்ற விஷயங்களிலோ கைதிகள் என்னை இழுக்கவில்லை. என்னால் ஒரு பிரச்சினையும் வராது என்பதை சிறை காவலர்கள் புரிந்துகொண்டார்கள். எனவே, கைதிகளோடு சேர்ந்து வேலை செய்வதற்குப் பதிலாக பெரும்பாலும் தனியாகவே வேலை செய்ய எனக்கு அனுமதி கிடைக்கச் செய்தார்கள். ஆம், என் வாழ்க்கையில் பைபிளின் நியமங்களைக் கடைப்பிடித்தது எனக்குப் பாதுகாப்பாக அமைந்தது.”

சிறையில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் பில் கலந்துகொண்டார். தான் கற்ற விஷயங்களை சிறையிலிருந்த மற்றவர்களிடம் உற்சாகமாகக் கூறினார். தன் சிறைவாசத்தின்போதே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் முழுக்காட்டுதலும் பெற்றார். தன் கடந்த காலத்தை நினைவுகூர்ந்து அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 50 வருடங்களை வீணாக்கிவிட்டேன். இனிமேலாவது திருந்தி வாழ வேண்டுமென நினைத்தேன். ஒரு சிறை கைதி திருந்தி வாழ்வதற்குச் சுலபமான ஒரே வழி, பைபிள் போதனைகளின்படி நடப்பதுதான் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். அதற்கு யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய மதம் மட்டுமே பைபிளை சரியாகப் போதிக்கிறது.”

பில் இனியும் சிறைப்பறவையாக இல்லை. அமெரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் அவர் இப்போது சுறுசுறுப்பாக சேவை செய்துவருகிறார். அவரும் அவருடைய மனைவியும் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதற்கு இசைவாக வாழ்கிறார்கள். ஏசாயா 48:17, 18-⁠ல் உள்ள உண்மையை அவர்கள் மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”

[பக்கம் 23-ன் படம்]

கேரன், அமெரிக்கா

[பக்கம் 23-ன் படம்]

ஆன்ஜெலா, ருமேனியா

[பக்கம் 24-ன் படம்]

தீரஜ், இந்தியா

[பக்கம் 24-ன் படம்]

கேப்ரியல், இந்தியா

[பக்கம் 24, 25-ன் படம்]

குடும்பத்துடன் ஃபிலிப், தென் ஆப்பிரிக்கா

[பக்கம் 24-ன் படம்]

வேட், ஆஸ்திரேலியா