“சோர்ந்து போயிடாம நம்பிக்கையா இருக்கீங்க!”
“சோர்ந்து போயிடாம நம்பிக்கையா இருக்கீங்க!”
● காமீலா எட்டு வயது சிறுமி. ஆனால், அவளுடைய உயரமோ 75 சென்டிமீட்டர்தான்! அவளுடைய சின்னஞ்சிறு உடலில் இரத்தச் சோகை, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு, வளர்ச்சிக் குறைபாடு என ஏகப்பட்ட பிரச்சினைகள். அவளுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள். அர்ஜென்டினாவிலுள்ள அவர்களுடைய ஊரில் ஒரு மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கிற்கு காமீலாவின் பெற்றோர் அவளையும் அழைத்துச் சென்றார்கள். அந்த அரங்கத்தில் 500 பேர் கூடிவந்திருந்தார்கள். காமீலாவும் அவளுடைய பெற்றோரும் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
ஒரு மருத்துவர் பேசியபோது, ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ஓர் உதாரணமாக காமீலாவைச் சுட்டிக்காட்டினார். அவளுடைய வயது, உடல்நிலை என எதைப் பற்றியும் அறியாததால், “உங்க குழந்தைக்கு என்ன வயசு?” என்று கேட்டார்.
“எட்டு வயசு” என்றார் காமீலாவின் அம்மா மாரீசா.
“என்ன சொன்னீங்க, எட்டு மாசமா..?” இது மருத்துவர்.
“இல்லையில்ல, எட்டு வயசு!” என்று மாரீசா தெளிவாகச் சொன்னார்.
அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த மருத்துவர் காமீலாவையும் அவளுடைய அம்மாவையும் மேடைக்கு அழைத்தார். சில கேள்விகளைக் கேட்டார். காமீலாவிற்கு மருத்துவர்கள் என்னென்ன பரிசோதனை செய்தார்கள், என்னென்ன சிகிச்சை கொடுத்தார்கள் என்பதையெல்லாம் மாரீசா விளக்கிச் சொன்னார். இதைக் கேட்ட மருத்துவர்: “சில அம்மாமார்கள் அவங்க குழந்தைக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடறாங்க. ஆனா, நீங்க உங்க குழந்தைக்கு ஏழு வருஷமா வைத்தியம் பார்த்து வந்திருக்கீங்க, அவளுக்காக உங்களால முடிஞ்சதெல்லாம் செஞ்சிருக்கீங்க; பெரிசா ஒன்னும் பலன் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போயிடாம நம்பிக்கையா இருக்கீங்க! எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது?”
அக்கறையுடன் அவர் கேட்ட கேள்விக்கு மாரீசா பதில் சொன்னார். வரப்போகிற நீதியுள்ள புதிய உலகில் எந்த வித நோய்களும் இருக்காது... ஒரு துன்பமும் இருக்காது... ஏன் மரணமும்கூட இருக்காது... என்று பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்ட நம்பிக்கையைப் பற்றி விளக்கினார். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4) யெகோவாவின் சாட்சிகளுக்கு உலகம் முழுவதும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்றும் சாட்சிகள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பே வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகளையும் துன்பங்களையும் சகிக்க அவர்களுக்கு உதவுகிறது என்றும் அவர் விளக்கினார்.—யோவான் 13:35.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பெண்மணி நேராக மாரீசாவிடம் வந்து, அவர் சொன்னவற்றைப் பற்றி இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லச் சொன்னார். இப்படிப்பட்ட விஷயங்களில் அந்தப் பெண்ணுக்கு அதிக ஆர்வம் இருந்ததால், வீட்டிலேயே நடத்தப்படுகிற இலவச பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்; பைபிளைப் பற்றியும் மனிதர்களுக்குக் கடவுள் வைத்திருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிற ஆட்களுக்கு அவ்வாறு படிப்பு நடத்துகிறார்கள். (g10-E 11)
[பக்கம் 32-ன் படம்]
எட்டு வயது காமீலா, அம்மா மாரீசாவுடன்