ஞானம் பொதிந்த நாவு
ஞானம் பொதிந்த நாவு
‘அப்படி நான் பேசியிருக்கக் கூடாது!’ என நீங்கள் எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? உண்மையிலேயே, நம்முடைய நாவை அடக்க நாம் எல்லாருமே படாத பாடுபடுகிறோம். எப்படிப்பட்ட மிருகமாய் இருந்தாலும் அதை நம்மால் அடக்கிவிட முடியும்; ‘ஆனால், நாவை யாராலும் அடக்க முடியாது’ என்கிறது பைபிள். (யாக்கோபு 3:7, 8) அதற்காக... எப்படியோ போகட்டும் என்று நம் நாக்கை அதன் போக்கிலேயே விட்டுவிட முடியுமா? அப்படி விட்டுவிட முடியாது! அது சின்னஞ்சிறிய உறுப்பாக இருந்தாலும் சக்திவாய்ந்த உறுப்பு; எனவே, அதை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிற பைபிள் நியமங்கள் சிலவற்றை இப்போது சிந்திப்போம்.
● “மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.” (நீதிமொழிகள் 10:19, பொது மொழிபெயர்ப்பு) உண்மைதான், நாம் அதிகமாகப் பேசும்போது, யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடுவோம், வேண்டாத வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம்; அதாவது, மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்தில் பேசிவிடுவோம். சொல்லப்போனால், அடக்கி வைக்கப்படாத நாக்கு காட்டுத்தீ போன்றது; ஒருவரைப் பற்றிய வீண் பேச்சை, கேடு விளைவிக்கும் அவதூறை அது மளமளவென்று பரப்பிவிடுகிறது. (யாக்கோபு 3:5, 6) என்றாலும், ‘நம் நாவை அடக்கி’ வைத்தோமென்றால், அதாவது, ஒரு முறைக்குப் பல முறை யோசித்துப் பேசினோமென்றால், அதனால் வரும் பின்விளைவுகளையும் மனதில் வைத்துப் பேசுவோம். இப்படிச் செய்தோமென்றால் விவேகமுள்ளவர் என்று பெயரெடுப்போம்; மற்றவர்களின் மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்போம்.
● “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) மற்றவர்கள் பேசுவதை நாம் காதுகொடுத்துக் கேட்டோமென்றால் அது அவர்களுக்குச் சந்தோஷமாக இருக்கும்; ஏனென்றால் நாம் அவர்கள்மீது அக்கறை காட்டுகிறோம் என்பதை மட்டுமல்ல, அவர்கள்மீது மரியாதை வைத்திருக்கிறோம் என்பதையும் அது காட்டும். மறுபட்சத்தில், யாராவது நம் மனதைப் புண்படுத்தும் விதத்தில்... வேண்டுமென்றே நம் கோபத்தைக் கிளறும் விதத்தில்... எதையாவது சொன்னால்? அந்தச் சந்தர்ப்பத்தில்தான், நாம் ‘கோபிப்பதற்குத் தாமதிக்க’ வேண்டும்; அதாவது, சட்டென்று கோபப்பட்டு அவர்களைப் போலவே பேசிவிடக் கூடாது. யாருக்குத் தெரியும்..? அந்த நபர் ஒருவேளை ஏதாவதொரு ‘டென்ஷனில்’ இருந்திருக்கலாம்; தான் அப்படிப் பேசியதற்காகப் பின்பு நம்மிடம் மன்னிப்பும் கேட்கலாம். ஆனால், சட்டென்று கோபப்படுகிற பலவீனம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், சுயக்கட்டுப்பாடு என்ற குணத்தை வளர்த்துக்கொள்ளக் கடவுளிடம் உதவி கேளுங்கள். நீங்கள் உள்ளப்பூர்வமாக வேண்டிக்கொள்ளும்போது அவர் நிச்சயம் உதவுவார்.—லூக்கா 11:13.
● “இனிய [“சாந்தமான,” NW] நாவு எலும்பையும் நொறுக்கும்.” (நீதிமொழிகள் 25:15) சாந்தகுணம் பலவீனத்திற்கு அடையாளம் என்பது ஒரு பொதுவான கருத்து; ஆனால், அது பலத்திற்கே அடையாளம்! உதாரணமாக, கோபத்தாலோ தப்பெண்ணத்தாலோ சிலர் கறாராகவும் உறுதியாகவும் நம்மை எதிர்க்கலாம்; எலும்பு எப்படி உறுதியாக இருக்கிறதோ அதைப் போன்று! ஆனால், நாம் சாந்தமாய்ப் பேசினோமென்றால் அப்படிப்பட்டவரைக்கூட இளக வைத்துவிடலாம். ஆம், சாந்தகுணத்தை வெளிக்காட்டுவது ஒரு சவால்தான், அதுவும் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையில்! ஆகவே, பைபிள் நியதிகளின்படி நடப்பதால் வரும் நன்மைகளைப் பற்றியும் நடக்காததால் வரும் தீமைகளைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்.
பைபிள் நியதிகள் ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானமாகும்.’ (யாக்கோபு 3:17) அந்த ஞானத்தைப் பயன்படுத்தி நாம் பேசினோமென்றால்... அது கண்ணியமானதாக, இனிமையானதாக, மற்றவர்களைப் பலப்படுத்துவதாக இருக்கும். ஆம், ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களைப்போல’ சமயத்திற்கு ஏற்றதாக இருக்கும்!—நீதிமொழிகள் 25:11. (g10-E 11)