Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விஞ்ஞானம் கடவுளுக்குச் சமாதி கட்டிவிட்டதா?

விஞ்ஞானம் கடவுளுக்குச் சமாதி கட்டிவிட்டதா?

விஞ்ஞானம் கடவுளுக்குச் சமாதி கட்டிவிட்டதா?

ஆன்டனி ஃப்ளூ என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தத்துவஞானி. 50 வருடங்களாகத் தன் சகாக்களால் ஒரு நாத்திகராகப் போற்றப்பட்டார். அவர் “இறையியல் மோசடி” என்ற தலைப்பில் ஒரு தத்துவப் பிரசுரத்தை 1950-ல் வெளியிட்டார். அது, “[20-ஆம்] நூற்றாண்டில் மிக அதிகமாய் மறுபதிப்பு செய்யப்பட்ட பிரசுரமாக இருந்தது.” “ஆத்திகத்தின் நம்பர்-ஒன் விமர்சகர்” என 1986-ல் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், 2004-ல் தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டதாக அறிவித்தார்; இது அநேகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஃப்ளூ தன் கொள்கையை மாற்றிக்கொண்டதற்குக் காரணம்? ஒரே வார்த்தையில் சொன்னால்: விஞ்ஞானம்! அதாவது, இந்தப் பிரபஞ்சமும் இயற்கைச் சட்டங்களும், ஏன் உயிரும்கூட... தற்செயலாய்த் தோன்றியிருக்க முடியாது என்ற தீர்க்கமான முடிவுக்கு அவர் வந்தார். இந்த முடிவு நியாயமானதா?

இயற்கைச் சட்டங்கள் எவ்வாறு தோன்றின?

இயற்பியல் வல்லுநரும் எழுத்தாளருமான பால் டேவிஸ்... மின்னல், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு விஞ்ஞானம் அழகாக விளக்கம் அளிக்கிறதெனக் குறிப்பிடுகிறார்; “ஆனால், ‘இயற்கைச் சட்டங்கள் ஏன் தோன்றின?’ என்பதைப் போன்ற ஏராளமான கேள்விகளுக்கு, . . . அது தெளிவான விளக்கம் அளிப்பதில்லை” என்று சொல்கிறார். அவர் மேலும் சொல்கையில்... “இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் பதில்காண முடிவதில்லை. இதுபோன்ற முக்கியமான பல கேள்விகள் நாகரிகத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை நம் மனதில் தொக்கி நிற்கின்றன; நம்மை விரக்தி அடையச் செய்கின்றன” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

2007-ல் ஃப்ளூ இவ்வாறு எழுதினார்: “முக்கியமான விஷயம்... இயற்கையில் ஓர் ஒழுங்கு காணப்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த ஒழுங்கு அனைத்தும் கணிதப்படி துல்லியமானதாக... நூற்றுக்கு நூறு உண்மையானதாக... ஒன்றோடொன்று தொடர்புடையதாக... இருக்கின்றன என்பதுதான்! இதை ஐன்ஸ்டீன், ‘அறிவுக்கூர்மையின் மறு வடிவம்’ எனக் குறிப்பிட்டார். இயற்கையில் இப்படிப்பட்ட ஓர் ஒழுங்கு எப்படி வந்தது என்பதுதான் இப்போது நாம் கேட்க வேண்டிய கேள்வி. நியூட்டன்... ஐன்ஸ்டீன்... ஹெய்சன்பெர்க்... எனப் பல விஞ்ஞானிகளின் மனதைக் குடைந்த கேள்வியும் இதுதான்; இதற்கு அவர்கள் பதிலும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தப் பதில்: கடவுளின் புத்திக்கூர்மை.”

சொல்லப்போனால், புத்திக்கூர்மையுள்ள காரணக் கர்த்தா ஒருவர் இருக்கிறார் என நம்புவது... விஞ்ஞானத்திற்கு முரணாய் இருப்பதாக மதிப்புக்குரிய விஞ்ஞானிகள் பலரும் கருதுவதில்லை. மறுபட்சத்தில், ‘இந்தப் பிரபஞ்சமும் இயற்கைச் சட்டங்களும், ஏன் உயிரும்கூட... தற்செயலாய் வந்தன’ என்று சொல்வதைத்தான் பகுத்தறிவுக்கு ஒத்து வராத விஷயமாய் அவர்கள் கருதுகிறார்கள். வடிவமைப்பு... அதிலும் அதிநுட்பமான வடிவமைப்பு... இருக்கிறதென்றால், அதை வடிவமைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை அன்றாட வாழ்க்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

நீங்கள் எதை நம்புவீர்கள்?

விஞ்ஞானம்தான் தங்களுடைய நம்பிக்கைக்கு அச்சாரம் என இந்தப் புதுவகை நாத்திகர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்; என்றாலும், உண்மை இதுவே: ஆத்திகமும் சரி நாத்திகமும் சரி, இரண்டுமே முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைந்தவை என்று சொல்லிவிட முடியாது. இரண்டிலுமே நம்பிக்கை உட்பட்டுள்ளது: நாத்திகர்கள்... எல்லாமே குறிக்கோளின்றி குருட்டாம்போக்கில் வந்ததென நம்புகிறார்கள்; ஆத்திகர்களோ... புத்திக்கூர்மையுள்ள காரணக் கர்த்தா இருக்கிறாரென நம்புகிறார்கள். இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதத் துறைப் பேராசிரியராக இருக்கிற ஜான் லெனாக்ஸ் எழுதும்போது, “மத நம்பிக்கை அனைத்துமே குருட்டு நம்பிக்கைதான்” என்ற கொள்கையைப் புதுவகை நாத்திகர்கள் பரப்பி வருகிறார்கள் என்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, “அது தவறு என்பதை நாம் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். ஆகவே, கேள்வி என்னவென்றால்: எந்த நம்பிக்கை சரியென்று நிரூபிக்கப்பட முடியும்? நாத்திகர்களின் நம்பிக்கையா, ஆத்திகர்களின் நம்பிக்கையா? ஓர் உதாரணமாக, உயிர் எப்படித் தோன்றியது என்ற விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.

உயிரின் தோற்றத்தைப் பற்றி முரண்பட்ட பல கோட்பாடுகள் இருந்தாலும், அது ஒரு மர்மம் என்றே பரிணாமவாதிகள் சொல்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எக்கச்சக்கமான கிரகங்கள் இருப்பதால்... அவற்றில் ஏதோவொன்றில் உயிர் தோன்றியிருக்க வேண்டும் என்பதாக ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்ற முன்னணி நாத்திகர் விவரிக்கிறார். ஆனால் பிரசித்திபெற்ற விஞ்ஞானிகள் பலருக்கு அவருடைய இந்தக் கருத்தில் முழுமையான உடன்பாடு இல்லை. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் பாரோ சொன்னபோது... “உயிரும் மனதும் பரிணமித்தது” என்ற கொள்கையை, “எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இடிக்கத்தான் செய்கிறது.” “சிக்கலான, பாதகமான ஒரு சூழலில் உயிர் எந்த விதத்திலும் பரிணமிக்க வாய்ப்பில்லை; அப்படியிருக்க... கொஞ்சம் கார்பனும் கொஞ்சம் காலமும் இருந்தால் போதும், எது வேண்டுமானாலும் உருவாகிவிடும் என்று நினைப்பது ஆணவத்தையே எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

உயிர் என்பது ஒரு ரசாயனக் கலவை அல்ல என்பதையும் நாம் மனதில் வைக்க வேண்டும். மாறாக, அதிநுணுக்கமான வடிவிலுள்ள தகவல்களை, அதாவது டிஎன்ஏ-வில் பதிவாகியுள்ள தகவல்களை அது அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, உயிரின் தோற்றத்தைப் பற்றி நாம் பேசும்போது, உயிரியல் தகவல்களின் தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறோம். நமக்குத் தெரிந்தவரையில், தகவல்களின் ஒரே ஊற்றுமூலமாய் இருப்பது எது? சுருக்கமாகச் சொன்னால், புத்திக்கூர்மை! ஆகவே, கம்ப்யூட்டர் புரோகிராம்... அல்ஜீப்ரா சூத்திரம்... தகவல் களஞ்சியம்... ஏன், ‘கேக்’ தயாரிப்பதற்கான செய்முறை... போன்ற சிக்கலான தகவல்கள் குருட்டாம்போக்கில் வந்துவிடுமா? நிச்சயமாக வராது! அதுவும்... அதிநுட்பமான அமைப்பிலும் அபாரமான செயல்திறனிலும் டிஎன்ஏ-வோடு ஒப்பிடும்போது இவையெல்லாம் ஒன்றுமேயில்லை! அப்படியிருக்க, டிஎன்ஏ எப்படிக் குருட்டாம்போக்கில் வந்திருக்கும்?

எல்லாமே தற்செயலாகத்தான் வந்தன! —விஞ்ஞானம் ஒத்துக்கொள்கிறதா?

“இந்தப் பிரபஞ்சமே மர்மம் நிறைந்தது; அதில் எப்படியோ உயிர் வந்துவிட்டது”; “அப்படி வந்திருக்காவிட்டால்... அதைப் பற்றிப் பேச நாம் இங்கே இருந்திருக்க மாட்டோம். இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளவையும் ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கலாம், சார்ந்திராமலும் இருக்கலாம்; ஆனால், அதில் ஒரு வடிவமைப்பு இல்லை, ஒரு குறிக்கோள் இல்லை, ஒரு அர்த்தமே இல்லை; அப்படியே இருந்தாலும் அது நமக்கு அர்த்தமற்றதாகவே இருக்கிறது!” என்றெல்லாம் நாத்திகர்கள் சொல்கிறார்கள்... என்கிறார் பால் டேவிஸ். “இப்படியெல்லாம் சொல்வது... அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. எப்படி? தங்களுடைய கொள்கையை ஆதரிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது; அதாவது, அதுபற்றிய சர்ச்சையிலிருந்து நழுவிவிடுவது ரொம்பவே எளிதாகிவிடுகிறது!” என்றும் டேவிஸ் குறிப்பிடுகிறார்.

மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான மைக்கல் டென்டன்... பரிணாமம்: சர்ச்சையிலுள்ள ஒரு கோட்பாடு (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில், பரிணாமக் கோட்பாடு “ஒரு முக்கியமான . . . விஞ்ஞானக் கோட்பாடாக இருப்பதற்குப் பதிலாக... அந்தக் காலத்து ஜோதிடர்களின் கற்பனை போலவே இருக்கிறது” என்று முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டார். டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை, நம் நாளிலுள்ள பிரபலமான கட்டுக்கதைகளில் ஒன்று என்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆம், எல்லாமே தற்செயலாக வந்தன என்று சொல்வது புனைகதை போன்றுதான் இருக்கிறது. இப்படிக் கற்பனைசெய்து பாருங்கள்: தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர், கிட்டத்தட்ட சதுர வடிவத்திலுள்ள ஒரு சொரசொரப்பான கல்லைப் பார்க்கிறார். அந்தக் கல் தற்செயலாய் வந்திருக்கலாமென அவர் நினைக்கிறார்; அது அவருக்கு நியாயமாகவும் தெரியலாம். ஆனால், அதன்பிறகு வேறொரு கல்லைப் பார்க்கிறார். அந்தக் கல், கனகச்சிதமாகச் செதுக்கப்பட்ட மார்பளவு மனிதச் சிலை! அந்தக் கல் தற்செயலாக வந்ததென்று அவர் நினைப்பாரா? நிச்சயமாக நினைக்க மாட்டார். ‘யாரோ ஒருவர் இதைச் செதுக்கியிருக்க வேண்டும்!’ என்றுதான் அவருடைய பகுத்தறிவு சொல்லும்! பைபிளும் அவ்வாறே சொல்கிறது. “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே” என்று அது சொல்கிறது. (எபிரெயர் 3:4) இந்தக் கூற்றை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

“பிரபஞ்சத்தைப் பற்றி எந்தளவு அதிகமாய்த் தெரிந்துகொள்கிறோமோ... அந்தளவு, படைப்பாளரான கடவுள் ஒருவர் இருக்கிறார்... அவர் இந்தப் பிரபஞ்சத்தை ஒரு நோக்கத்தோடு வடிவமைத்தார்... என்று நாம் நம்புவோம்! அதோடு, நம் வாழ்க்கையின் நோக்கமென்ன என்ற கேள்விக்கு அதை மிகச் சிறந்த பதிலாக எடுத்துக்கொள்வோம்!!” என்று லெனாக்ஸ் குறிப்பிடுகிறார்.

வருத்தகரமாக... கடவுள் நம்பிக்கையை மக்கள் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒரு காரணம், கடவுளுடைய பெயரில் செய்யப்படுகிற அட்டூழியங்களே! அதனால், ‘மதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டால் மனிதன் முன்னேறிவிடுவான்’ என்ற முடிவுக்குச் சிலர் வந்திருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (g10-E 11)