Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேட்டி | செலின் க்ரானாலெரஸ்

சிறுநீரக நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி மனம் திறக்கிறார்

சிறுநீரக நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி மனம் திறக்கிறார்

டாக்டர் செலின் க்ரானாலெரஸ். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் சிறுநீரகச் சிகிச்சை நிபுணர். மருத்துவராகி 20 ஆண்டுகளுக்குப் பின்னரே, அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருப்பதை நம்ப ஆரம்பித்தார். இவரது வேலையையும் மதநம்பிக்கையையும் பற்றி விழித்தெழு! இவரைப் பேட்டி கண்டது.

உங்கள் பிள்ளைப் பருவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

என்னுடைய 9-வது வயதில் ஸ்பெயினிலிருந்து பிரான்சுக்குக் குடிமாறினோம். என் பெற்றோர் கத்தோலிக்க பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், 16-வது வயதில் எனக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லாமல்போனது. மதம் என்பது வாழ்க்கைக்குப் பிரயோஜனமில்லை என்று கருதினேன். கடவுள் இல்லாமல் உயிர் எப்படித் தோன்றியது என யாராவது கேட்டால், “இந்தக் கேள்விக்கு விஞ்ஞானிகளிடம் இப்போது பதில் இல்லை, ஆனாலும் ஒரு நாள் கண்டிப்பாகச் சொல்வார்கள்” என்பேன்.

ஏன் சிறுநீரக நோய்களைப் பற்றிப் படிக்க விரும்பினீர்கள்?

பிரான்சிலுள்ள மான்பெல்யாவில் ஒரு மருத்துவக் கல்லூரியில் படித்தேன். அங்கிருந்த பேராசிரியர் ஒருவர் நெஃப்ராலஜி என்றழைக்கப்படும் சிறுநீரக மருத்துவப் பிரிவில் வேலை செய்வது பற்றி என்னிடம் பேசினார். இந்த வேலையில், ஆராய்ச்சி செய்வது மட்டுமல்ல நோயாளிகள்மீது அக்கறை காண்பிப்பதும் உட்பட்டிருந்தது. இப்படியொரு வாய்ப்புக்காகத்தான் ஆவலோடு காத்திருந்தேன். 1990-ல், எலும்புகளில் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிற எரித்ரோபாய்ட்டினின் (EPO) பயன்பாட்டைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆராய்ச்சித் துறையில் அப்போது அது ஒரு புதிய அம்சமாக இருந்தது.

கடவுளைப் பற்றிச் சிந்திக்க எது உங்களைத் தூண்டியது?

1979-ஆம் ஆண்டு என் கணவர் ஃப்லோரேயல், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். எனக்கோ அதில் ஆர்வம் இருக்கவில்லை. பிள்ளைப் பருவத்திலிருந்தே மதம் என்றால் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், என் கணவரும், என் இரண்டு மகன்களும், மகளும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். சீக்கிரத்திலேயே, எங்களுக்கு நிறைய யெகோவாவின் சாட்சிகள் நண்பர்களானார்கள். அவர்களில் ஒருவரான பாட்ரிஷியா, ஜெபம் செய்யும்படி என்னை உற்சாகப்படுத்தினார். “உங்கள் ஜெபத்தைக் கேட்க கடவுள் என்ற ஒருவர் பரலோகத்தில் இல்லை என்றால் உங்களுக்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை, ஆனால், அப்படி ஒருவர் இருந்தால், அதன் பலனை நீங்களே பார்ப்பீர்கள்” என்றார். வருடங்கள் உருண்டோடின; வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி என் மனதில் கேள்வி எழ ஆரம்பித்த சமயத்தில் பாட்ரிஷியாவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. பதில் கிடைக்க உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தேன்.

எந்தச் சம்பவம் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி உங்களைச் சிந்திக்க வைத்தது?

நியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல் என்னை அதிர வைத்தது. இந்தச் சமுதாயத்தில் ஏன் இந்தளவு தீமை இருக்கிறது என்ற கேள்வி என் மனதைக் குடைய ஆரம்பித்தது. ‘மதத் தீவிரவாதிகளால் இந்த உலகமே ஆபத்தான இடமாகிவருகிறது. ஆனால் நான், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் எந்தப் பயமும் இல்லாமல் சமாதானமான சூழலில் இருக்கிறேன். அவர்கள் மதத் தீவிரவாதிகள் அல்ல, பைபிளின்படியே நடக்கிறார்கள். அதனால், பைபிள் என்னதான் சொல்கிறது என்று படித்துப் பார்க்கலாமா’ என்றெல்லாம் எனக்குள் யோசிக்க ஆரம்பித்தேன். அதன்பின், நானாகவே பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு மருத்துவராக இருப்பதால் படைப்பாளரை நம்புவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்ததா?

இல்லை. நம் உடலின் படுசிக்கலான வடிவமைப்பு படைப்பாளர்மீது எனக்கிருந்த மரியாதையைக் கூட்டியது. உதாரணத்திற்கு, இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை சிறுநீரகம் கட்டுப்படுத்துகிற விதம் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

இந்த அதிசய செயல்பாடு . . . கடவுளுடைய நேர்த்தியான கைவண்ணம் என்பது எனக்கு உதித்தது

சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனைச் சுமந்து செல்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அதிக இரத்த இழப்பு ஏற்படும்போது அல்லது உயரமான இடத்திற்குச் போகும்போது நம் உடம்பு ஆக்சிஜனை இழந்துவிடும். சிறுநீரகங்களில் ஆக்சிஜன் சென்சர்கள் உள்ளன. இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதை இந்த சென்சர்கள் உணரும்போது சிறுநீரகம் EPO-வை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும்; இப்படி, இரத்தத்தில் EPO-வின் அளவு பல ஆயிரங்கள் அதிகரிக்கும். இந்த EPO, எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கும்; இந்த உற்பத்தி இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். எவ்வளவு அற்புதமாகச் செயல்படுகிறது இல்லையா? ஆனால், இந்த அதிசய செயல்பாட்டைப் பற்றி பத்து வருடங்கள் ஆராய்ச்சி செய்த பிறகே இது கடவுளுடைய நேர்த்தியான கைவண்ணம் என்பது எனக்கு உதித்தது.

பைபிளைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?

நான் நிறைய சரித்திர புத்தகங்களையும் புகழ்பெற்ற நாவல்களையும் படித்திருக்கிறேன், ஆனால் பைபிள் முற்றிலும் வித்தியாசமான புத்தகம் என்பதைப் படித்தவுடனே கண்டுகொண்டேன். அதன் ஆலோசனைகள் அன்றாட வாழ்க்கைக்கு ரொம்பவே பிரயோஜனமாக இருப்பதால் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்திலிருந்தே அது வந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. இயேசுவின் சுபாவமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் நிஜமாக வாழ்ந்த ஒரு நபர், நம்மைப் போன்ற உணர்ச்சிகள் உடையவர், நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தவர் என்பதையெல்லாம் புரிந்துகொண்டேன். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை வாசிக்க எனக்கு விருப்பம் இல்லாததால், எனக்குள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலைப் பெற கலைக்களஞ்சியங்களிலும் மற்ற புத்தகங்களிலும் ஆராய்ச்சி செய்தேன்.

என்ன ஆராய்ச்சி செய்தீர்கள்?

நிறைய சரித்திரப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தேன் . . . பைபிள் தீர்க்கதரிசனம் உரிய நேரத்தில் நிறைவேறியிருப்பது ஊர்ஜிதமானது

நிறைய விஷயங்களை! முக்கியமாக, இயேசு ஞானஸ்நானம் பெற்ற வருடத்தைப் பற்றி பைபிள் முன்னுரைத்த விஷயம் என் ஆர்வத்தைத் தூண்டியது. பெர்சிய ராஜாவான அர்தசஷ்டாவின் 20-ஆம் வருஷ ஆட்சி காலத்திலிருந்து இயேசு மேசியாவாக வெளிப்படும் நாள்வரை எவ்வளவு காலம் எடுக்கும் என்று பைபிள் துல்லியமாகச் சொல்கிறது. * ஆராய்ச்சி செய்வது என் இரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம் என்பதால், அர்தசஷ்டாவின் ஆட்சி காலத்தையும் இயேசுவின் ஊழியக் காலத்தையும் பல சரித்திரப் புத்தகங்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தேன். பைபிளிலுள்ள இந்தத் தீர்க்கதரிசனம் உரிய நேரத்தில் நிறைவேறியிருப்பது ஊர்ஜிதமானது; பைபிள் கடவுளால் அருளப்பட்டது என்பதில் முழு நம்பிக்கை ஏற்பட்டது.  ◼ (g13-E 09)

^ யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் பக்கங்கள் 197-199-ஐ பாருங்கள்.