பேட்டி | கியர்மோ பெராஸ்
அறுவைச் சிகிச்சை நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்
டாக்டர் கியர்மோ பெராஸ், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் தலைமை அறுவைச் சிகிச்சை மருத்துவராக வேலை செய்துவந்தார். சமீபத்தில் ஓய்வு பெற்றார். ‘மனிதன் குரங்கிலிருந்து வந்தான்’ (பரிணாமம்) என்று அவர் பல காலமாக நம்பி வந்தார். ஆனால், கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்று இப்போது நம்புகிறார். ஏன் இந்த மாற்றம்? இதைப் பற்றி விழித்தெழு! நிருபரிடம் அவரே மனம் திறக்கிறார்.
நீங்கள் ஏன் ஒருகாலத்தில் பரிணாமத்தை நம்பினீர்கள்?
என் பெற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்ததால் கடவுளைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அதில் நிறைய விஷயங்கள் எனக்கு குழப்பமாகவே இருந்தன. உதாரணத்திற்கு, கடவுள் நல்லவர் என்றும் அதேசமயத்தில் கெட்டவர்களை நரகத்தில் போட்டு எரிப்பார் என்றும் சொல்லிக்கொடுத்தார்கள். அதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் கல்லூரி பேராசிரியர்களோ, ‘மனிதனைக் கடவுள் படைக்கவில்லை, அவன் குரங்கிலிருந்துதான் வந்தான்’ என்றும் அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது என்றும் சொன்னார்கள். மனிதனைப் படைக்க கடவுள் பரிணாமத்தையே பயன்படுத்தினார் என்று சர்ச்சிலும் போதித்தார்கள். அதனால் பரிணாமத்தை நம்பினேன்.
ஏன் பைபிள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
என் மனைவி சுஸானா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். கடவுள் நம்மை நரகத்தில் வதைப்பதில்லை *என்றும் அவர் எதிர்காலத்தில் பூமியை ஓர் அழகிய தோட்டமாக மாற்றப்போகிறார் *என்றும் பைபிளிலிருந்து சில வசனங்களை அவர்கள் காட்டினார்கள். இந்த விஷயங்கள் எங்கள் மனதைத் தொட்டன! 1989-ல், நிக் என்ற யெகோவாவின் சாட்சியோடு நான் பைபிள் படிக்க ஆரம்பித்தேன். ஒருநாள், மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே” என்ற பைபிள் வசனத்தை காண்பித்தார். (எபிரெயர் 3:4) இந்த விஷயம் பைபிள் மீதுள்ள என் ஆர்வத்தை அதிகரித்தது.
மனித உடலைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சி, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள உதவியதா?
ஆம் உதவியது. உதாரணத்திற்கு, நம் உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் திறனோடு படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காயம் ஏற்பட்டால் நான்கு கட்டங்களாகச் செயல்பட்டு நம் உடல் தன்னையே குணமாக்கிக்கொள்கிறது. நான் வெறும் சிகிச்சைதான் கொடுக்கிறேன்; ஆனால் உடல்தான் உண்மையான டாக்டர்!
நமக்கு காயம் ஏற்படும்போது என்ன நடக்கிறது?
முதல் கட்டமாக, காயம் ஏற்பட்ட சில நொடிகளிலேயே இரத்தத்தை உறைய வைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இந்தச் செயல்பாடுகள் படு சிக்கலானவை. நம் இரத்த ஓட்ட மண்டலத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் சுமார் 1,00,000 கி.மீ நீளம் இருக்கும். அதில் எங்காவது கசிவு ஏற்படும்போது இரத்தக் குழாய்கள் உடனே அதை ‘அடைப்பது’ நம்மை வியக்க வைக்கிறது!
இரண்டாம் கட்டமாக என்ன நடக்கிறது?
சில மணிநேரங்களில் இரத்தம் உறைந்த பின் வீக்கம் ஏற்படுகிறது; இது படிப்படியாக நடக்கிறது. முதலில், இரத்தக் கசிவை குறைப்பதற்காக சுருங்கியிருந்த இரத்தக் குழாய்கள் இப்போது விரிய ஆரம்பிக்கின்றன. இது காயப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அடுத்ததாக, புரதம் (protein) நிறைந்த திரவம் அந்த இடத்தை நிரப்புகிறது; இதனால் வீக்கம் ஏற்படுகிறது. கிருமிகள் தொற்றாமல் இருக்க... நச்சுப் பொருள்களின் பாதிப்பைக் குறைக்க... சிதைந்துபோன திசுக்களை (tissues) நீக்க... இந்தத் திரவம் உதவுகிறது. ஒவ்வொரு படியிலும் லட்சக்கணக்கான மூலக்கூறுகளும் செல்களும் உருவாகின்றன. இவை அடுத்த கட்ட செயல்பாட்டிற்கு உதவுகின்றன.
மூன்றாம் கட்டமாக என்ன நடக்கிறது?
ஓரிரு நாட்களில் காயத்தை சரிசெய்யும் பொருள்களை நம் உடல் உற்பத்தி செய்கிறது. இதுதான் மூன்றாம் கட்டத்தின் ஆரம்பம். இரண்டு வாரங்களில் இவை அதிகமாக உற்பத்தியாகிறது. ‘ஃபைபர்களை’ (நார் போல படர்ந்திருக்கும்) உருவாக்கும் செல்கள், அடிபட்ட இடத்திற்கு சென்று அங்கு அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. அதோடு சிறிய இரத்தக் குழாய்களும் அங்கு உருவாகின்றன. காயம் சரியாகும் சமயத்தில் அவை தேவையில்லாத பொருள்களை நீக்கி, சத்துப் பொருள்களை அதிகமாகத் தருகின்றன. அதேசமயத்தில் காயத்தை மூடுவதற்கான செல்களும் உருவாகின்றன.
காயம் எப்போது முழுமையாகக் குணமாகும்?
இதில் கடைசி கட்டம்தான் ‘ரீமாடலிங்’ (பழைய நிலைக்கு திரும்புதல்). இதற்கு பல மாதங்கள் எடுக்கும். உதாரணத்திற்கு, உடைந்த எலும்புகள் வலுவடைந்து பழைய நிலைக்குத் திரும்பும். மென்மையான திசுக்கள் நீங்கி கடினமான பொருள்களால் காயம் மூடப்படும். மொத்தத்தில், காயத்தை சரிசெய்ய உடல் ஒருங்கிணைந்து செயல்படுவது அதிசயத்திலும் அதிசயம்!
யாருக்காவது சிகிச்சை அளித்தது உங்களை வியக்க வைத்ததா?
உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்வதைப் பார்த்து நான் மலைத்துப்போனேன்
கார் விபத்தில் அடிபட்ட பதினாறு வயது பெண்ணுக்கு நான் சிகிச்சை அளித்தேன். கல்லீரல் வெட்டுப்பட்டு, உடலுக்குள் இரத்த கசிவும் ஏற்பட்டதால் அவளுடைய உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. இது மாதிரியான சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தால், கல்லீரலில் அறுவைச் சிகிச்சை செய்திருப்போம் அல்லது அதை முழுமையாக நீக்கியிருப்போம். ஆனால், உடலுக்குத் தன்னைத்தான் சரிசெய்துகொள்ளும் திறன் இருப்பதால் இன்று மருத்துவர்கள் பழைய சிகிச்சை முறைகளை அளிப்பதில்லை. அதனால்தான் நான் அந்தப் பெண்ணுக்கு கிருமிகள் தொற்றாமல் இருக்க, கசிவைக் கட்டுப்படுத்த, இரத்தச் சோகையை (anemia) குணப்படுத்த, வலியைப் பொறுத்துக்கொள்ள மட்டுமே சிகிச்சை கொடுத்தேன். சில வாரங்களுக்குப் பிறகு, அவளுடைய கல்லீரல் தானாகவே குணமாகியிருந்தது! உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்வதைப் பார்த்து நான் மலைத்துப்போனேன்!! கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்பதில் இப்போது எனக்குச் சந்தேகமே இல்லை.
உங்களுக்கு ஏன் யெகோவாவின் சாட்சிகளைப் பிடித்தது?
அவர்கள் அன்பாகப் பழகினார்கள், என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள். தங்கள் மதநம்பிக்கையைப் பற்றி தைரியமாக மற்றவர்களிடம் பேசினார்கள், கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.
யெகோவாவின் சாட்சியாக ஆனது, ஒரு மருத்துவராக உங்களுக்கு எப்படி உதவியது?
தினம்தினம் நோயாளிகளின் வேதனையை பார்ப்பதால் மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் ஒருவித மனச்சோர்வு (compassion fatigue) உண்டாகும். இதை என்னால் சமாளிக்க முடிந்தது. நம்மைப் படைத்த கடவுள் வேதனையையும் * நோயையும் * நீக்கிவிடுவார் என்பதை என்னிடம் வரும் நோயாளிகளிடம் நம்பிக்கையோடு சொல்ல முடிந்தது. ▪ (g14-E 05)