அட்டைப்படக் கட்டுரை
மனநோய் பற்றிய உண்மைகள்
க்ளாடியா-வுக்கு பைபோலார் டிஸாடர் என்ற மனநோயும் அதிர்ச்சியால் வரும் மன அழுத்த நோயும் இருக்குனு டாக்டர் சொன்னார். இதைக் கேட்டதும் க்ளாடியாவுக்கு எப்படி இருந்திருக்கும்? “என்னால அதை தாங்கிக்கவே முடியல. மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்கனு ரொம்ப கவலப்பட்டேன்”னு க்ளாடியா சொல்றாங்க.
க்ளாடியாவின் கணவர் மார்க் என்ன சொல்றார்னு பாருங்க: “எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, அப்படியே இடிஞ்சி போய் உக்காந்திடாம, அவளுக்கு உதவி செய்றதுதான் முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன்.”
உங்களுக்கு மனநோய் இருக்குனு டாக்டர் சொன்னா, உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க குடும்பத்தில இருக்கிற யாருக்காவது மனநோய் வந்தா நீங்க என்ன செய்வீங்க? கவலைப்படாதீங்க, மனநோயை குணப்படுத்த முடியும். முதல்ல, மனநோய்னா என்னனு நாம தெரிஞ்சிக்கலாம். * (அடிக்குறிப்பை பாருங்க.)
சில உண்மைகள்
“உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால பாதிக்கப்படுறாங்க. உலகத்தில இருக்கிற, 25 சதவீத மக்களுக்கு வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனநோய் வருது. நிறைய பேர் மனச்சோர்வால (Depression) கஷ்டப்படுறாங்க. மனச்சிதைவும் (Schizophrenia) பைபோலார் டிஸாடரும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். . . . நிறைய பேர் மனநோயால பாதிக்கப்பட்டாலும், அந்த நோயை பத்தி வெளில சொல்றதில்ல, சிகிச்சையும் எடுக்கிறதில்ல. மக்களும் மனநோய் வந்தவங்களை ஒதுக்கி வைச்சிடுறாங்க.”—உலக சுகாதார அமைப்பு (WHO).
மனநோய் இருக்கிறது தெரிஞ்சா, மத்தவங்க கேவலமா நினைப்பாங்களேனு, நிறைய பேர் சிகிச்சை எடுத்துக்க தயங்குறாங்க.—உலக சுகாதார அமைப்பு.
நிறைய விதமான மனநோயை குணப்படுத்த முடியும். இருந்தாலும், நிறைய பேர் அதுக்கு சிகிச்சை எடுக்கிறதில்லை. அமெரிக்காவுல, மனநோயால பாதிக்கப்பட்ட 60 சதவீத பெரியவங்களும் 50 சதவீத இளைஞர்களும் (8-15 வயசு) சிகிச்சை எடுத்துக்கிறதில்லை.—நேஷ்னல் அலயன்ஸ் ஆன் மென்டல் இல்னஸ்.
மனநோய் என்றால் என்ன?
மனநோய் இருக்கிறவங்களால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது, சரியா யோசிக்க முடியாது; மத்தவங்களோட சகஜமா பழக முடியாது. தினம் தினம் வாழக்கையை ஓட்டுறதே அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.
கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனம் இருக்கிறதுனாலயோ ஒருத்தருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது
மனநோய் இருக்கிற எல்லாருக்கும், ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு அந்த அறிகுறிகள் அதிகமா தெரியும், சிலருக்கு அந்தளவுக்கு தெரியாது; சிலர் ரொம்ப நாள் கஷ்டப்படுவாங்க, சிலருக்கு கொஞ்ச நாள்லயே சரியாயிடும். அவங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பொறுத்தும் அவங்களோட சூழ்நிலையை பொறுத்தும் அந்த அறிகுறிகள் மாறும். ஆண்-பெண், சின்னவங்க-பெரியவங்க, படிச்சவங்க-படிக்காதவங்க, ஜாதி-மதம்னு வித்தியாசம் இல்லாம யாருக்கு வேணாலும் மனநோய் வரலாம். ஒருத்தர்கிட்ட கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனங்கள் இருக்கிறதுனாலயோ அவருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது. மனநோயால பாதிக்கப்பட்டவங்க சரியான சிகிச்சை எடுக்கும்போது எல்லார் மாதிரியும் சந்தோஷமா வாழ முடியும்.
சிகிச்சை எடுக்க தயங்காதீங்க
மனநோய்க்கு சிகிச்சை எடுக்கிறது ரொம்ப முக்கியம். சிகிச்சை எடுக்கிறதுக்கு முன்னாடி, நல்ல மனநல ஆலோசகர்கிட்டயோ மனநல மருத்துவர்கிட்டயோ ஆலோசனை கேளுங்க.
சரியான சிகிச்சை எடுத்தாதான் நல்ல பலன் கிடைக்கும். மனநல ஆலோசகர்கிட்ட தயங்காம எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. அப்பதான், உங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பத்தி புரிஞ்சிக்க முடியும். நீங்க தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறதுக்கும் உங்க பிரச்சினைகளை சரிசெய்றதுக்கும் அவர் உங்களுக்கு உதவி செய்வார். மருத்துவரையோ ஆலோசகரையோ பார்க்க போகும்போது, ஒரு நண்பரோ குடும்பத்தில இருக்கிற ஒருத்தரோ கூடவே இருந்து உதவி செய்றது ரொம்ப முக்கியம்.
மனநோய் வந்த நிறைய பேர் அதை சமாளிச்சிருக்காங்க. அதுக்கு காரணம், அவங்களுக்கு வந்த மனநோயை பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டாங்க, தொடர்ந்து சிகிச்சை எடுத்தாங்க. மனநோயால பாதிக்கப்பட்ட க்ளாடியாவின் கணவர் மார்க்கும் இதைதான் சொல்றார்: “நாங்க டாக்டர்கிட்ட போறதுக்கு முன்னாடி மனநோய்னா என்னனே எங்களுக்கு தெரியாது. ஆனா, இப்போ அந்த நோயை பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டோம். அதனால, நாங்க தேவையில்லாம கவலைப்படுறது இல்லை; பிரச்சினையை எப்படி கொஞ்சம் கொஞ்சமா சமாளிக்கிறதுனும் கத்துக்கிட்டோம். டாக்டர்கள், பிரெண்ட்ஸ், வீட்ல இருக்கிறவங்கனு எல்லாரும் எங்களுக்கு உதவி செஞ்சாங்க.”
சிகிச்சை எடுக்கிறதுக்கு முன்னாடி, நல்ல மனநல ஆலோசகர்கிட்டயோ மனநல மருத்துவர்கிட்டயோ ஆலோசனை கேளுங்க
க்ளாடியா சொல்றாங்க: “இந்த நோயை பத்தி தெரிஞ்சவுடனே, என் வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி இருந்தது. என் கணவரும் ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனா, போகப்போக எல்லாத்தையும் சமாளிச்சேன். டாக்டர்கள் சொன்னதை எல்லாம் செஞ்சேன். மத்தவங்களோட சகஜமா பழகினேன். தேவையில்லாத விஷயங்களை யோசிச்சு டென்ஷன் ஆகாம இருந்தேன்.”
கடவுள் உங்களுக்கு உதவுவார்
வெறுமனே, பைபிள் படிக்கிறதாலயோ பிரார்த்தனை பண்றதாலயோ வியாதி எல்லாம் பறந்து போயிடும்னு நினைக்காதீங்க. பைபிளும் அப்படி சொல்லலை. ஆனா, பைபிள் படிச்சா உங்களுக்கு ஆறுதலும் தெம்பும் கிடைக்கும். உலகத்துல இருக்கிற நிறைய பேர் பைபிளை படிச்சதுனால சந்தோஷமா வாழ்றாங்க. நாம மனசு ஒடஞ்சு போய் இருக்கும்போது கடவுள் நமக்கு ஆறுதலா இருப்பார்னு பைபிள் சொல்லுது.—சங்கீதம் 34:18.
என்னென்ன நோய் வந்தா என்னென்ன செய்யனும்னு பைபிள் சொல்றதில்லை. ஆனா, தாங்க முடியாத பிரச்சினைகள் வரும்போது அதை எப்படி சமாளிக்கிறதுனு பைபிள்ல இருக்கு. எதிர்காலத்தில, நோயே இல்லாத காலம் வரப்போகுது. பைபிள் அதை பத்தி என்ன சொல்லுதுனு பாருங்க: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 35:5, 6. (g14-E 12)
^ பாரா. 5 மனசு சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் “மனநோய்”னு இந்தக் கட்டுரையில சொல்லியிருக்கோம்.
^ பாரா. 32 எந்த சிகிச்சை எடுத்தா நல்லதுனு இந்தப் பத்திரிகை சொல்றதில்லை. யெகோவாவின் சாட்சிகள் எந்த சிகிச்சை எடுத்துக்கிட்டாலும் அது பைபிள் சொல்ற விஷயங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கானு நல்லா யோசிச்சு பார்க்கனும்.
^ பாரா. 40 மே 2014 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில “Stress