யாருடைய கைவண்ணம்?
முதலை வாய்
உலகத்திலேயே முதலைதான் அதிக வலிமையுடன் கடிக்கும் பிராணி என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவுக்கு அருகில் வாழும் உப்புநீர் முதலைகளால் (Saltwater Crocodile) சிங்கம், புலியைவிட மூன்று மடங்கு அதிக வலிமையுடன் கடிக்க முடியும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனிதர்களின் விரல் நுனிகளில் இருக்கும் தொடு உணர்வைவிட முதலையின் வாயிலும் தாடையிலும் இருக்கும் தொடு உணர்வு மிக அதிகமாக இருக்கிறது. பார்ப்பதற்கு கரடுமுரடாக இருக்கும் முதலையின் தோலில் இந்தளவுக்கு தொடு உணர்வு இருப்பது எப்படி?
முதலையின் தாடையில் ஆயிரக்கணக்கான புலன் உறுப்புகள் (Sense Organs) இருக்கின்றன. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த டங்கன் லிச் சொல்கிறார்: “[தாடையில் இருக்கும்] ஒவ்வொரு நரம்பு முனையும் மண்டை ஓட்டில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாக வருகிறது.” இதனால், தாடையில் இருக்கும் நரம்புகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது, தொடு உணர்வும் அதிகமாகிறது. சில இடங்களில் தொடு உணர்வு அந்தளவு அதிகமாக இருப்பதால் அதை கருவிகளால்கூட அளக்க முடிவதில்லை. தன் வாயில் இருப்பது உணவா அல்லது தேவையற்ற பொருளா என்பதை தெரிந்துக்கொள்ள இந்த தொடு உணர்வுதான் முதலைக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, தாய் முதலை தன் குஞ்சுகளை வாயில் தூக்கி செல்லும்போது அதை நசுக்கிவிடாமல் இருக்கவும் இது உதவுகிறது. முதலையின் தாடையில் இருக்கும் வலிமையும் தொடு உணர்வும் நம்மை வியக்கவைக்கிறது!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது எப்படி தோன்றியிருக்கும்? பரிணாமத்தினாலா, படைப்பினாலா? ▪ (g15-E 07)