Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சுவடுகள்

“சோதனை நேரத்தில்” நிலைத்திருந்தார்கள்

“சோதனை நேரத்தில்” நிலைத்திருந்தார்கள்

1914-ல் முதல் உலகப் போர் வெடித்த சமயத்தில், ஒரு முக்கியமான விஷயம் உலகின் கவனத்திற்கு வந்தது. பைபிள் மாணாக்கர்கள் போரில் ஈடுபடமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வந்தது. (ஏசா. 2:2-4; யோவா. 18:36; எபே. 6:12) பிரிட்டனில் இருந்த கடவுளுடைய ஊழியர்கள் இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளித்தார்கள்?

ஹென்றி ஹட்சன்

1916-ஆம் வருடம், பிரிட்டன் அரசு ராணுவ சேவை சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, 18 முதல் 40 வயதுவரையுள்ள மணமாகாத ஆண்கள் ராணுவத்தில் சேர வேண்டும். அதே சட்டம் ஒரு விதிவிலக்கையும் அளித்தது. அதாவது, “மதம் சார்ந்த அல்லது தார்மீகக் காரணங்கள்” இருந்தால் மட்டும் அவர்கள் போரில் ஈடுபட வேண்டியதில்லை. யாருக்கு, எந்த அளவுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அந்த அரசாங்கம் விசாரணை மன்றங்களை அமைத்தது.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகும் சில பைபிள் மாணாக்கர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. சுமார் 40 பேர் ராணுவ சிறையில் தள்ளப்பட்டார்கள், 8 பேர் பிரான்சிலுள்ள போர்முனைக்கு அனுப்பப்பட்டார்கள். பிரிட்டனிலுள்ள சகோதரர்கள், இந்த அநீதியை எதிர்த்து பிரதமர் ஹெர்பர்ட் ஆஸ்க்வித்துக்கு மனு எழுதினர்; 5,500 பேரின் கையொப்பம் அடங்கிய பட்டியலையும் அதோடு இணைத்திருந்தனர்.

பிரான்சுக்கு அனுப்பப்பட்ட எட்டு பேரும் போரில் ஈடுபட மறுத்துவிட்டதால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. கொல்லப்படுவதற்காக துப்பாக்கி ஏந்திய படைவீரர்கள் முன் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுடைய மரண தண்டனை பத்து வருட கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறை தண்டனையை அனுபவிக்க அவர்கள் பிரிட்டனுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்கள்.

ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் ஸ்காட்

போர் நீண்டுகொண்டே போனபோது திருமணமான ஆண்களும் ராணுவத்தில் சேர வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில், மாதிரி வழக்கு ஒன்று நடத்தப்பட்டது (இது, ஒரு வழக்கை மாதிரியாக வைத்து அதே போன்ற சூழ்நிலைகள் வரும்போது இதே தீர்மானம் வழங்குவதற்காக நடத்தப்படும் வழக்கு). மருத்துவரும் பைபிள் மாணாக்கருமான ஹென்றி ஹட்சனுக்கு விரோதமாக அந்த வழக்கு நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 3, 1916-ல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது, அபராதம் விதித்தது, ராணுவ சேவைக்கு அனுப்பியது. அதே சமயத்தில், மற்றொரு மாதிரி வழக்கு ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்க்கில் நடைபெற்றது. அதில் குற்றவாளியாக நின்றது 25-வயது கால்பார்ட்டரான ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் ஸ்காட். அவர் நிரபராதி என தீர்க்கப்பட்டார். ஆனால், அரசு அந்த வழக்கை மேல்முறையீடு செய்தது, பிறகு பின்வாங்கிவிட்டது. ஏனென்றால், அவர்களுக்கு லண்டனில் மற்றொரு மாதிரி வழக்கு கிடைத்துவிட்டது. இந்த வழக்கில் ஹெர்பெர்ட் கிப்ஸ் என்ற சகோதரர் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டார். குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டார், அபராதம் விதிக்கப்பட்டார், ராணுவச் சேவைக்கு அனுப்பப்பட்டார்.

செப்டம்பர் 1916-க்குள் மொத்தம் 264 சகோதரர்கள் விதிவிலக்கு அளிக்கும்படி மனுதாக்குதல் செய்திருந்தார்கள். அதில், 5 பேருக்கு விலக்களிக்கப்பட்டது; 154 பேர் கல் உடைப்பது, சாலை அமைப்பது போன்ற தேசிய சமூக நல வேலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்; 23 பேர் ராணுவத்தில் போர்சாரா வேலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்; 82 பேர் ராணுவத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அங்கு போடப்பட்ட சட்டங்களுக்கு கீழ்ப்படியாத சிலர் விசாரணை செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதற்கு, பொதுமக்கள் மறுப்பு குரல் எழுப்பியதால் ராணுவம்சாரா வேலை செய்வோருக்கான முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

ப்ரைஸ் ஹீயூஸ்

எட்கர் க்ளேயும் ப்ரைஸ் ஹியூஸும் வேல்ஸில் அணை கட்டும் வேலையைச் செய்தார்கள். ப்ரைஸ் ஹீயூஸ் பின்னர் பிரிட்டனில் கிளை அலுவலகக் கண்காணியாகச் சேவை செய்தார். பிரான்சிலிருந்து திரும்பி வந்த எட்டு பேரில் ஒருவரான ஹெர்பர்ட் சீனியர், யார்க்‍ஷயரிலுள்ள வேக்ஃபீல்ட் சிறைச்சாலையில் தள்ளப்பட்டார். மற்றவர்களோ, படுமோசமான டார்ட்முர் சிறையில் தள்ளப்பட்டார்கள். அங்கே, மிகவும் கடினமான வேலையைச் செய்தார்கள். ராணுவ சேவையை மறுத்த பைபிள் மாணாக்கர்களே அந்தச் சிறையில் அதிகமாக இருந்தார்கள்.

ராணுவம்சாரா வேலையைச் செய்ய ஒப்புக்கொண்ட பைபிள் மாணாக்கர் ஃபிராங்க் ப்ளாட்டை போர்முனைக்குச் செல்லும்படி உத்தரவிட்டார்கள். அவர் அதை மறுத்ததால் நீண்டநேரம், கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். ராணுவ சேவை பட்டியல் வெளிவந்த பிறகு, சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஆட்கன்சன் பாஜட் போரில் ஈடுபட மறுத்தார். அதனால், அவரும் ராணுவ அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டார்.

ஹெர்பர்ட் சீனியர்

போரில் ஏன் ஈடுபடக் கூடாது என அப்போது இந்தச் சகோதரர்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும், யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். வரவிருக்கும் “சோதனை நேரத்தில்” நிலைத்திருக்க இந்தச் சகோதரர்கள் நமக்குமுன் சிறந்த முன்மாதிரிகளாக மின்னுகிறார்கள். (வெளி. 3:10)—பிரிட்டனின் வரலாற்றுச் சுவடுகள்.