படைப்பு கடவுளைப் பறைசாற்றுகிறது
“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையை . . . பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள்.” —வெளி. 4:11.
1. நம்முடைய விசுவாசம் பலமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
அநேகர் கண்களால் பார்க்க முடிந்த காரியங்களை மட்டுமே நம்புவதாகச் சொல்கிறார்கள். ஆனால், “கடவுளை ஒருவனும் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 1:18) அப்படிப்பட்டவர்கள், யெகோவாமீது விசுவாசம் வைக்க நாம் என்ன செய்யலாம்? முதலாவதாக, ‘காணமுடியாத கடவுள்மீதுள்ள’ நம் விசுவாசத்தை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? (கொலோ. 1:15) யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மறைத்துப்போடும் போதனைகள் எவை என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, இவையெல்லாம் ‘கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிரான’ போதனைகள் என்பதை பைபிளிலிருந்து திறம்பட நிரூபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.—2 கொ. 10:4, 5.
2, 3. கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளாதபடி மக்களின் மனக்கண்களைக் குருடாக்கும் இரண்டு போதனைகள் யாவை?
2 கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளாதபடி மக்களின் மனக்கண்களைக் குருடாக்கும் ஒரு பொய் போதனை, பரிணாமக் கோட்பாடு. இந்தப் பிரபலமான போதனை பைபிளுக்கு முரணானது, மக்களின் நம்பிக்கையைக் குலைத்துப்போடுகிறது. உயிர் தானாகத் தோன்றியது என்றே இது கற்பிக்கிறது. இந்தப் போதனை உண்மையாக இருந்தால், நம்முடைய வாழ்க்கைக்கே அர்த்தம் இருக்காது.
3 மறுபட்சத்தில், கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகள், பைபிளிலுள்ள எல்லாவற்றையும் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். பூமியும் அதிலுள்ள உயிரினங்களும், ஏன், இந்த முழு பிரபஞ்சமும் சில ஆயிர வருடங்களுக்கு முன்புதான் தோன்றியது எனப் போதிக்கிறார்கள். கடவுள், எல்லாவற்றையும் 24-மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில் படைத்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் போதனைக்கு படைப்புக் கோட்பாடு என்று பெயர். இதை ஆதரிப்பவர்கள், தங்களுடைய நம்பிக்கையோடு ஒத்துப்போகாத எல்லா அறிவியல் ஆதாரங்களையும் ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இவர்கள் பைபிளை மதித்தாலும், மற்றவர்கள் பைபிளை நம்பாதவாறு செய்துவிடுகிறார்கள். எப்படி? இந்தக் கோட்பாடு, பைபிள் ஒரு நம்பகமான... திருத்தமான... புத்தகம் அல்ல என்பதுபோல் தோன்ற வைக்கிறது. இதை நம்புகிறவர்கள் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சிலரைப் போலவே இருக்கிறார்கள்; ஆம், அவர்களுக்கு பக்திவைராக்கியம் இருந்தது, “ஆனால், அது திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் அல்ல.” (ரோ. 10:2) ‘ஆழமாக வேரூன்றியிருக்கும்’ பரிணாமக் கோட்பாட்டையும் படைப்புக் கோட்பாட்டையும் தவறென நிரூபிக்க பைபிளை எப்படிப் பயன்படுத்தலாம்? * பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றால்தான் இதைச் செய்ய முடியும். அப்படிப்பட்ட அறிவைப் பெற நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
ஆதாரங்கள் மற்றும் தகுந்த விளக்கங்களின் அடிப்படையில் விசுவாசம்
4. நம் விசுவாசம் எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்?
4 அறிவைப் பொக்கிஷம்போல் மதிக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. (நீதி. 10:14) மனிதத் தத்துவங்கள், மத பாரம்பரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல, ஆதாரங்கள் மற்றும் தகுந்த விளக்கங்களின் அடிப்படையிலேயே நம்முடைய விசுவாசம் இருக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (எபிரெயர் 11:1-ஐ வாசியுங்கள்.) கடவுள்மீது பலமான விசுவாசம் வைக்க முதலில் யெகோவா இருக்கிறார் என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். (எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.) ஏதோவொரு விஷயம் பிடித்திருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக, ஆதாரங்களை ஆராய்ந்தும் நம்முடைய “சிந்திக்கும் திறனைப்” பயன்படுத்தியும் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டும்.—ரோ. 12:1.
5. கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான ஒரு காரணம் என்ன?
5 கடவுளைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்று நம்புவதற்கான ஒரு காரணத்தை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். யெகோவாவைப் பற்றி அவர் இப்படி எழுதினார்: “காணமுடியாத அவருடைய பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகிறது.” (ரோ. 1:20) கடவுள் இருப்பதைச் சந்தேகிக்கும் ஒருவருக்கு, பவுலின் இந்த வார்த்தைகளிலுள்ள உண்மையைப் புரியவைக்க நாம் என்ன செய்யலாம்? படைப்பாளரின் வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்தும் பின்வரும் ஆதாரங்களை எடுத்துக்காட்டலாம்.
படைப்பில் பளிச்சிடும் கடவுளின் வல்லமை
6, 7. யெகோவாவின் வல்லமை, என்ன இரண்டு பாதுகாப்பு வளையங்களில் பளிச்சிடுகிறது?
6 பூமியின் இரண்டு பாதுகாப்பு வளையங்களிலும் யெகோவாவின் வல்லமை பளிச்சிடுகிறது. ஒன்று, பூமியின் காற்றுமண்டலம்; மற்றொன்று, காந்தப்புலம். காற்றுமண்டலம், நாம் சுவாசிப்பதற்குக் காற்றைத் தருவதோடு நம்மைப் பாதுகாக்கும் ஒரு போர்வையாகவும் இருக்கிறது. எப்படி? எக்கச்சக்கமான விண்கற்கள் விண்வெளியில் படுவேகமாக போய்க்கொண்டிருக்கின்றன; அவை பூமியில் விழுந்தால் பெரும் நாசத்தை ஏற்படுத்தும். ஆனால், இது பெரும்பாலும் நடப்பதில்லை. ஏனென்றால், அவை காற்றுமண்டலத்தை எட்டியதும் எரிந்து பஸ்பமாகிவிடுகின்றன. இப்படி எரிந்து சாம்பலாகும் விண்கற்களே, இரவு வானில் நாம் பார்த்து ரசிக்கும் எரி நட்சத்திரம்.
7 பூமியின் காந்தப்புலமும்கூட நம்மைத் தீங்கிலிருந்து பாதுகாக்கிறது. பூமியின் மையக்கருவின் வெளிப்பாகம் பெரும்பாலும் உருகிய இரும்பால் ஆனது; இதிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த காந்தப்புலம் நம்மைச் சுற்றியும் இருக்கிறது, ஏன், அது விண்வெளிவரைகூட செல்கிறது. இது ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுவதால், சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான கதிர்வீச்சுகள் பூமியைத் தாக்கும்போது உயிரினங்கள் வெந்து கருகிப்போவதில்லை. அதற்குப் பதிலாக காந்தப்புலம் இந்தக் கதிர்வீச்சுகளை ஈர்த்துக்கொள்கிறது அல்லது அதை மீண்டும் விண்வெளிக்கே அனுப்பிவிடுகிறது. இந்தக் காந்தப்புலத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் வட மற்றும் தென் துருவங்களில் இது இரவு வானை பல வர்ணங்களால் அலங்கரிப்பதைப் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே யெகோவா “மகா வல்லமை” உள்ளவர்.—ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள்.
இயற்கையில் பளிச்சிடும் கடவுளின் ஞானம்
8, 9. யெகோவாவின் ஞானம், உயிரைக் காத்துப் பராமரிக்கிற சுழற்சிகளில் எப்படிப் பளிச்சிடுகிறது?
8 பூமியிலுள்ள ஜீவராசிகளைக் காத்துப் பராமரிக்கிற சுழற்சிகளில் யெகோவாவின் ஞானம் பளிச்சிடுகிறது. உதாரணத்திற்கு, ஜன நெருக்கடிமிக்க மதில் சூழ்ந்த நகரத்தில் நீங்கள் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரை நகரத்திற்குள் கொண்டு வரவும், நகரத்தின் கழிவு பொருட்களை வெளியேற்றவும் எந்தவொரு வழியும் இல்லை என வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது, அந்த நகரம் சீக்கிரத்திலேயே அசுத்தமாகிவிடும், அங்கு வாழவும் முடியாது. ஒரு விதத்தில் நம்முடைய பூமியும் அந்த மதில் சூழ்ந்த நகரத்தைப் போலவே இருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சுத்தமான தண்ணீர் இருக்கிறது, கழிவு பொருட்களையும் அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியாது. இருந்தாலும், காலங்காலமாக கோடிக்கணக்கான உயிரினங்களை பூமி காத்துப் பராமரிக்கிறது. எப்படி? உயிரினங்களுக்கு அத்தியாவசியமான பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலமே.
9 உதாரணத்திற்கு, ஆக்ஸிஜன் சுழற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான உயிரினங்கள் ஆக்ஸிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன. ஆனாலும், போதுமானளவு ஆக்ஸிஜன் எப்போதும் இருந்து வருகிறது. எப்படி? ஒளிச்சேர்க்கை மூலம் இது சாத்தியமாகிறது. அதாவது கார்பன்-டை-ஆக்ஸைடு, தண்ணீர், சூரிய ஒளி, ஊட்டச் சத்துகள் ஆகியவற்றை தாவரங்கள் எடுத்துக்கொண்டு, கார்போஹைட்ரேட்டுகளையும் ஆக்ஸிஜனையும் உண்டாக்குகின்றன. இந்த ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம். இப்படித்தான் ஆக்ஸிஜன் சுழற்சி நடைபெறுகிறது. ஆம், யெகோவா தாம் படைத்த தாவரங்களைப் பயன்படுத்தி “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும்” கொடுக்கிறார். (அப். 17:25) அவருடைய ஞானம் வியக்க வைக்கிறது, அல்லவா?
10, 11. மோனார்க் வண்ணத்துப்பூச்சியும் தும்பியும் யெகோவாவின் ஞானத்தை எப்படிப் பறைசாற்றுகின்றன?
10 பூமியில் வாழும் ஏராளமான உயிரினங்களின் வடிவமைப்பிலும் யெகோவாவின் ஞானம் மிளிருகிறது. சுமார் 20 லட்சம்முதல் 10 கோடிவரையில் பல்வகை உயிரினங்கள் இந்தப் பூமியில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. (சங்கீதம் 104:24-ஐ வாசியுங்கள்.) அவற்றில் சில உயிரினங்களின் வடிவமைப்பில் கடவுளுடைய ஞானம் எப்படித் தெளிவாகத் தெரிகிறதென இப்போது பார்க்கலாம்.
11 உதாரணத்திற்கு, மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் மூளையைக் கவனியுங்கள். அதன் மூளை ஒரு குண்டூசியின் தலை அளவே இருக்கும். இவ்வளவு சிறிய மூளையை உடைய அந்த வண்ணத்துப்பூச்சி, கனடாவிலிருந்து மெக்சிகோவிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு சுமார் 3,000 கி.மீ. தூரம் பயணிக்கிறது. அதன் இடப்பெயர்ச்சிக்குச் சூரியனே வழிகாட்டி. ஆனால், சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதால் எப்படி இந்த வண்ணத்துப்பூச்சியால் சரியான திசையைக் கண்டுபிடிக்க முடிகிறது? சூரியன் எப்படி நகர்ந்தாலும், இந்த வண்ணத்துப்பூச்சி சரியான திசையில் பறப்பதற்கேற்ப யெகோவா அதன் சின்னஞ்சிறிய மூளையை வடிவமைத்திருக்கிறார். அடுத்து, தும்பியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அதன் கண்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 30,000 லென்சுகள் இருக்கின்றன. எல்லா லென்சுகளிலிருந்தும் வரும் சமிக்கைகளை அதன் சிறிய மூளையால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, அதைச்சுற்றி நடக்கும் மிகச்சிறிய அசைவுகளையும்கூட அதனால் எளிதில் கவனிக்க முடிகிறது.
12, 13. நம் உடலிலுள்ள செல்களை யெகோவா வடிவமைத்திருக்கும் விதம் நம்மை எப்படி வியப்பில் ஆழ்த்துகிறது?
12 உயிரினங்களின் செல்களை யெகோவா வடிவமைத்திருக்கும் விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. உதாரணத்திற்கு, நம்முடைய உடலில் சுமார் 1,00,00,000 கோடி செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் சின்னஞ்சிறிய கயிறுபோன்ற அமைப்புடைய டிஎன்ஏ (டிஆக்ஸி ரைபோ நியுக்லிக் அமிலம்) உள்ளது. அதில் நம் முழு உடலும் உருவாவதற்குத் தேவையான தகவல்கள் பதிவாகியுள்ளன.
13 டிஎன்ஏ-யில் எவ்வளவு தகவல்கள் அடங்கியிருக்கின்றன? ஒரு கிராம் டிஎன்ஏ-வை ஒரு சிடி-யுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஓர் அகராதியில் இருக்கும் எல்லா தகவல்களையும் பிளாஸ்டிக்காலான ஒரு சிறிய சிடி-யில் உள்ளடக்க முடியுமென்பது எப்பேர்ப்பட்ட வியக்க வைக்கும் விஷயம்! ஆனால், ஒரேவொரு கிராம் டிஎன்ஏ-யில் ஒரு லட்சம் கோடி சிடி-யிலுள்ள தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு தேக்கரண்டி அளவு உலர்ந்த டிஎன்ஏ-யில், இன்று உயிர் வாழ்கிற மக்களின் எண்ணிக்கையைப் போல 350 மடங்கு அதிகமான மனிதர்களை உருவாக்குவதற்குத் தேவையான தகவல்கள் இருக்கின்றன!
14. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும்போது யெகோவாவைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?
14 யெகோவா, மனித உடலை உருவாக்குவதற்குத் தேவையான தகவல்களை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதுபோல் தாவீது ராஜா சொன்னார். “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என்று அவர் சொன்னார். (சங். 139:16) தன்னுடைய உடல் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து தாவீது வியந்துபோய் யெகோவாவைப் புகழ்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மனித உடலைப் பற்றிய விஞ்ஞானிகளின் சமீப கால ஆராய்ச்சிகள் நம்மை இன்னும் மலைக்க வைக்கின்றன. “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என்று சங்கீதக்காரனைப் போல நாமும் யெகோவாவைப் புகழத் தூண்டப்படுகிறோம். (சங். 139:14) கடவுள் இருக்கிறார் என்பதைப் படைப்பு பறைசாற்றும்போது மக்களால் அதை எப்படி உணராமல் இருக்க முடியும்?
கடவுளை மகிமைப்படுத்த பிறருக்கு உதவுங்கள்
15, 16. (அ) யெகோவாவின் படைப்பைப் பற்றி மக்கள் கற்றுக்கொள்ள நம்முடைய பிரசுரங்கள் எப்படி உதவியிருக்கின்றன? (ஆ) “இது யாருடைய கைவண்ணம்?” என்ற தலைப்பில் வந்த கட்டுரைகளில் உங்கள் மனதைக் கவர்ந்தது எது?
15 படைப்பின் மூலம் கடவுளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள, விழித்தெழு! பத்திரிகை லட்சக்கணக்கான மக்களுக்குப் பல வருடங்களாகவே கைகொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, 2006, செப்டம்பர் இதழ் “படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. பரிணாமக் கோட்பாட்டையும் படைப்புக் கோட்பாட்டையும் ஆதரிப்போரின் அறிவுக்கண்களைத் திறப்பதே அதன் நோக்கமாக இருந்தது. அந்தச் சிறப்பிதழைப் பற்றி அமெரிக்க கிளை அலுவலகத்திற்கு ஒரு சகோதரி இப்படி எழுதினார்: “இந்தப் பத்திரிகையின் விசேஷ வினியோகிப்பு ரொம்ப நன்றாக இருந்தது. மாணவர்களுக்குக் கொடுப்பதற்காக ஒரு உயிரியல் ஆசிரியை 20 பத்திரிகைகளைக் கேட்டார்.” ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நான் 1940-லிருந்தே ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன். எனக்கு இப்போது 75 வயதாகப் போகிறது; ஆனால் இதுவரை அனுபவிக்காத சந்தோஷத்தை இந்த மாத விழித்தெழு! சிறப்பிதழை ஊழியத்தில் கொடுத்தபோது அனுபவித்தேன்.”
16 “இது யாருடைய கைவண்ணம்?” என்ற கட்டுரை 2008-லிருந்து அநேக விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவருகின்றன. படைப்பு எவ்வளவு வியப்பூட்டுவதாக இருக்கிறது என்பதையும், நம்முடைய தலைசிறந்த படைப்பாளரின் கைவண்ணத்தை மனிதர்கள் எப்படி காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதையும் இந்தச் சிறிய கட்டுரைகள் விளக்குகின்றன. 2010-ல், உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிற்றேடையும் பெற்றோம். அதிலுள்ள வண்ணப் படங்களும், வரைபடங்களும் யெகோவாவின் கைவண்ணத்தை நாம் போற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் உள்ள கேள்விகள், படித்த விஷயங்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க உதவுகின்றன. வீட்டுக்கு வீடு ஊழியத்தில், பொது ஊழியத்தில், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் பயன்படுத்துவதற்கு இது மிகச் சிறந்த சிற்றேடு.
17, 18. (அ) கடவுள் இருக்கிறார் என்பதைப் பிள்ளைகள் நம்பிக்கையோடு விளக்குவதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்? (ஆ) உங்கள் குடும்ப வழிபாட்டில் இந்தச் சிற்றேடுகளை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
17 பெற்றோரே, இந்தச் சிற்றேடை குடும்ப வழிபாட்டில் உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வாசித்திருக்கிறீர்களா? இப்படிச் செய்யும்போது பிள்ளைகளுக்குக் கடவுள்மீது இருக்கும் விசுவாசத்தை உங்களால் அதிகரிக்க முடியும். ஒருவேளை, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் உங்களுக்கு இருக்கலாம். பரிணாமக் கோட்பாட்டைக் கற்றுத்தருகிறவர்கள் பிள்ளைகளையே குறி வைக்கிறார்கள். விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மட்டுமல்ல, இயற்கை பற்றிய டிவி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும்கூட பரிணாமக் கோட்பாடு உண்மை என்ற கருத்தைப் பரப்புகின்றன. 2010-ல் வெளியான உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேடைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட கருத்துக்கள் தவறு என்பதை நிரூபிக்க உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம். உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிற்றேடைப் போலவே இந்தச் சிற்றேடும் இளைஞர்களுடைய “சிந்திக்கும் திறனை” கூர்மையாக்க உதவும். (நீதி. 2:10, 11, NW) பள்ளியில் கற்றுத்தரப்படுவது சரிதானா என்பதை உறுதிசெய்ய இந்தச் சிற்றேடு அவர்களுக்குக் கற்றுத்தருகிறது.
18 சில சமயங்களில், விஞ்ஞானிகள் புதைபடிவங்களைக் கண்டுபிடித்திருப்பதாகவும், அவை பரிணாமக் கோட்பாட்டை ஆதரிப்பதாகவும் செய்தி அறிக்கைகள் வெளிவருகின்றன. அல்லது, சோதனைக் கூடத்தில் விஞ்ஞானிகள் உயிரை உருவாக்கியிருப்பதாகவும் அறிக்கைகள் வரலாம். இந்த அறிக்கைகள் எல்லாம் உண்மைதானா என்பதை மாணவர்கள் தாங்களாகவே முடிவு செய்துகொள்ளும் விதத்தில் உயிரின் தோற்றம் சிற்றேடு எழுதப்பட்டிருக்கிறது. பெற்றோரே, படைப்பாளர் இருக்கிறார் என்பதைப் பிள்ளைகள் நம்பிக்கையோடு விளக்குவதற்கு இந்தச் சிற்றேடைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.—1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.
19. நம் எல்லோருக்கும் என்ன பாக்கியம் இருக்கிறது?
19 படைப்பைப் பற்றி விளக்கும் ஏராளமான பிரசுரங்களை யெகோவாவின் அமைப்பு வெளியிடுகிறது; அவற்றைப் படிக்கும்போது கடவுளுடைய அருமையான பண்புகளைப் பற்றி நம்மால் இன்னும் நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த எல்லா அத்தாட்சிகளும் யெகோவாவைப் போற்றிப் புகழ நம்மைத் தூண்டுகின்றன. (சங். 19:1, 2) ஆம், சர்வத்தையும் படைத்த யெகோவாவுக்கு மகிமையும் கனமும் செலுத்த நாம் பாக்கியம் பெற்றிருக்கிறோம். அதைப் பெற அவர் முற்றிலும் தகுதியானவர்.—1 தீ. 1:17.
^ படைப்புக் கோட்பாட்டை நம்புகிறவர்களிடம் நியாயங்காட்டிப் பேசுவதற்கு உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிற்றேட்டில் பக்கங்கள் 24-28-ஐப் பாருங்கள்.