வயதானோரைக் கவனித்துக்கொள்வது எப்படி?
“சிறுபிள்ளைகளே, சொல்லினாலும் நாவினாலும் மட்டுமல்ல, செயலினாலும் சத்தியத்தினாலும் அன்பு காட்டுவோமாக.”—1 யோ. 3:18.
1, 2. (அ) அநேக குடும்பத்தார் என்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள், என்ன கேள்விகள் எழும்புகின்றன? (ஆ) சூழ்நிலைகள் மாறும்போது பெற்றோரும் குடும்பத்தாரும் அதற்கு எப்படித் தயாராகலாம்?
முன்பு சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்த உங்கள் பெற்றோர் இப்போது வீட்டோடு முடங்கிவிட்டதைப் பார்ப்பது எவ்வளவு வேதனையானது! ஒருவேளை, அம்மாவோ அப்பாவோ கீழே விழுந்ததில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படலாம், மனநிலை பாதிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைந்து திரியலாம், மோசமான வியாதியால் பாதிக்கப்படலாம். வயதான பெற்றோரும்கூட தங்களுடைய உடல்நிலை மோசமடைந்ததை நினைத்து... எல்லா வேலைகளுக்கும் மற்றவர்களை எதிர்பார்த்திருப்பதை நினைத்து... கவலைப்படலாம். (யோபு 14:1) ஆகவே, வயதான பெற்றோருக்கு எப்படி உதவுவது, அவர்களை எப்படிக் கவனித்துக்கொள்வது போன்ற கேள்விகள் எழும்பலாம்.
2 வயதானவர்களைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி ஒரு கட்டுரை இப்படிச் சொல்கிறது: “வயதாவதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது கஷ்டம்தான். ஆனாலும், வயதானவர்களைக் கவனித்துக்கொள்வது பற்றி குடும்பமாகக் கலந்துபேசி முன்கூட்டியே திட்டமிட்டால் என்ன பிரச்சினை வந்தாலும் அதை நன்கு சமாளிக்க முடியும்.” முதுமையின் பாதிப்புகள் தவிர்க்க முடியாதது என்பது நமக்குத் தெரிந்ததே. ஆகவே, குடும்பத்தார் முன்னதாகவே யோசித்துத் தயாராக இருப்பது ரொம்ப முக்கியம். இந்தச் சவால்களைச் சமாளிக்க குடும்பங்கள் எப்படி ஒத்துழைக்கலாம்?
‘தீங்குநாட்களுக்கு’ திட்டமிடுங்கள்
3. வயதானவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாதபோது, பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
3 வயதானவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாத ஒரு சமயம் வரும். அப்போது, அவர்களுக்கு உதவி தேவைப்படும். (பிரசங்கி 12:1-7-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட சமயத்தில், பெற்றோரும் பிள்ளைகளும் கலந்துபேசி நடைமுறையாக என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். என்ன உதவி தேவை, அதை எப்படிச் செய்யலாம், எல்லோரும் எப்படி ஒத்துழைக்கலாம் போன்ற விஷயங்களைக் கலந்துபேசுங்கள். எல்லோருமே, முக்கியமாக பெற்றோர் தங்களுடைய தேவைகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். சில வேலைகளை மட்டும் செய்துகொடுத்தால் போதுமா, மற்றவற்றை அவர்கள் தனியாகவே சமாளித்துக்கொள்வார்களா என்பதைப் பற்றியும் கலந்துபேசுங்கள். * குடும்பத்திலுள்ள ஒவ்வொருவராலும் எவ்விதங்களில் பெற்றோருக்கு உதவ முடியும் என்பதைப் பற்றி பேசுங்கள். (நீதி. 24:6) சிலரால் அருகிலிருந்தே பெற்றோரைக் கவனித்துக்கொள்ள முடியும், மற்றவர்களால் பணம் கொடுத்து உதவ முடியும். பிள்ளைகளின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் உதவியும் மாறுபடும். பொறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒருவர் மாற்றி ஒருவர் செய்ய வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும், பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எல்லோருக்கும் இருப்பதை ஒவ்வொரு பிள்ளையும் உணர்ந்திருக்க வேண்டும்.
4. பெற்றோரின் சூழ்நிலை மாறும்போது, பிள்ளைகள் என்ன செய்யலாம்?
4 உங்கள் பெற்றோரின் சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ள முயற்சி எடுங்கள். அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருக்கிற வியாதி அவர்களுடைய உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைக்கும்போது, அடுத்து என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி யோசியுங்கள். (நீதி. 1:5) வயதானவர்களுக்கு உதவும் அரசாங்க அமைப்புகளைத் தொடர்புகொள்ளுங்கள். முதியோருக்கான சமுதாய நலத் திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் விசாரித்துப் பாருங்கள். பெற்றோரின் சூழ்நிலையைப் பார்க்கும்போது உங்களுக்கு கவலையாக, குழப்பமாக, அல்லது அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், உங்களுடைய உணர்ச்சிகளை நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக, யெகோவாவிடம் உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டுங்கள். அப்போது, அவர் மனநிம்மதி அளிப்பதோடு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தையும் கொடுப்பார்.—சங். 55:22; நீதி. 24:10; பிலி. 4:6, 7.
5. பெற்றோரைப் பராமரிப்பது பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது ஏன் நல்லது?
5 பெற்றோரை எப்படிப் பராமரிப்பது என்பதை பெற்றோரும் பிள்ளைகளும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதாவது, பெற்றோர் மகனுடன் அல்லது மகளுடன் இருப்பார்களா... முதியோர் காப்பகத்தில் இருப்பார்களா... அல்லது வேறு ஏதாவது வாய்ப்புகள் இருக்கிறதா... என்பதைப் பற்றி தீர்மானிக்கலாம். முதுமையின் ‘வருத்தத்தையும் சஞ்சலத்தையும்’ எதிர்பார்த்து முன்னதாகவே திட்டமிடலாம். (சங். 90:10) இப்படித் திட்டமிடாத குடும்பங்கள், பிரச்சினைகள் வரும்போது அவசரப்பட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருக்கும். “தீர்மானம் எடுப்பதற்கு அது சரியான நேரம் அல்ல” என்பதாக ஒரு நிபுணர் சொல்கிறார். அவசரப்பட்டு தீர்மானம் எடுக்கும்போது, குடும்பத்தில் உள்ளவர்கள் குழப்பமடைந்து, ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாத நிலை ஏற்படலாம். ஆகவே, முன்கூட்டியே திட்டமிடுவது மாறிவரும் சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும்.—நீதி. 20:18.
6. பெற்றோர் எங்கு வாழ்வது என்பதைப் பற்றி பிள்ளைகளும் பெற்றோரும் கலந்துபேசுவதால் என்ன பலன்?
6 பெற்றோர் தற்சமயம் எங்கு வாழ்வது, எதிர்காலத்தில் எங்கு வாழ வேண்டியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசுவது உங்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். ஆனாலும், அப்படிக் கலந்துபேசியது பலனளித்திருப்பதாக அநேகர் சொல்கிறார்கள். எல்லோரும் அவரவர் கருத்துகளை அன்போடு சொல்லும்போதும் மற்றவர்கள் அவற்றை மரியாதையோடு கேட்கும்போதும் பிரச்சினைகள் வருவதற்கு முன்பே நடைமுறையான தீர்வுகளைக் காண்பது எளிதாக இருக்கும். வயதான பெற்றோர், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தனியாக வாழ விரும்பலாம். ஆனாலும், எதிர்காலத்தில் என்ன உதவி தேவைப்படலாம் என்பதைப் பற்றி பிள்ளைகளிடம் சொல்லும்போது அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க முடியும்.
7, 8. என்ன விஷயங்களை பெற்றோரும் பிள்ளைகளும் கலந்துபேச வேண்டும், ஏன்?
7 பெற்றோரே, உங்கள் எண்ணங்களை, பணத் தேவைகளை, விருப்பங்களை பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அப்போதுதான், உங்களால் தீர்மானம் எடுக்க முடியாதபோது உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பிள்ளைகளால் தீர்மானம் எடுக்க முடியும். அவர்கள் உங்களுடைய ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து உங்கள் விருப்பப்படி வாழ்வதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். (எபே. 6:2-4) உதாரணத்திற்கு, பிள்ளைகள் யாருடனாவது சேர்ந்து வாழ நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது வேறு ஏதாவது நினைக்கிறீர்களா என்பதை மனந்திறந்து சொல்லுங்கள். அதே சமயத்தில், பிள்ளைகளுக்கும் சில விருப்பங்களும் எண்ணங்களும் இருக்கலாம். பிள்ளைகளாக இருந்தாலும் சரி பெற்றோராக இருந்தாலும் சரி, சூழ்நிலைக்கேற்ப தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதற்கு காலம் எடுக்கும்.
8 நன்கு திட்டமிடுவதும் கலந்துபேசுவதும் நிறைய பிரச்சினைகளைத் தவிர்க்க நமக்கு உதவும். (நீதி. 15:22) மருத்துவ பராமரிப்பு பற்றியும் உங்கள் தீர்மானங்கள் பற்றியும் குடும்பத்தாரோடு பேசுங்கள். யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பயன்படுத்தும் உடல்நலப் பராமரிப்பு அட்டையில்(HealthCareProxy) அல்லது உடல்நலப் பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையில்(AdvanceHealthCareDirective) உள்ள விஷயங்களைக் குடும்பமாகக் கலந்துபேசுங்கள். என்னென்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் எதை ஏற்றுக்கொள்வது எதை மறுப்பது என்று தீர்மானம் எடுக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த விஷயங்கள், ஒருவருடைய உடல்நலப் பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். சட்டம் அனுமதித்தால், சிகிச்சை சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்காக தீர்மானம் எடுக்க நம்பகமான யாரையாவது நியமிக்கலாம். (சில நாடுகளில் உடல்நலப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.) சம்பந்தப்பட்ட எல்லோரும் இந்த ஆவணத்தின் நகல்களைத் தங்களோடு வைத்திருப்பது நல்லது. வயதானவர்கள் சிலர், உயிலோடும் பிற ஆவணங்களோடும் (காப்பீடு, வங்கி, அரசாங்க அலுவலகங்கள் சம்பந்தப்பட்டவை) இந்த அட்டையின் நகலை வைத்திருக்கிறார்கள்.
சூழ்நிலைகள் மாறும்போது சமாளிப்பது எப்படி?
9, 10. பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி எப்போது அதிகமாகத் தேவைப்படும்?
9 வயதானவர்கள் தங்கள் விருப்பப்படி இருக்கவே விரும்புவார்கள். யாருடைய உதவியுமின்றி அவர்களாகவே சமைக்க... சுத்தம் செய்ய... மருந்து மாத்திரைகளைச் சாப்பிட... மற்றவர்களிடம் தொடர்புகொள்ள... முடியுமென்றால், பிள்ளைகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், நாளடைவில் பெற்றோர் நடமாட முடியாமல், கடைகளுக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படலாம் அல்லது ஞாபகமறதியால் அவதிப்படலாம். அப்போது, பிள்ளைகள் அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கும்.
10 வயதானவர்கள் குழப்பத்தினால், மனஉளைச்சலால் பாதிக்கப்படலாம். அவர்களுக்கு காது கேட்காமல் போகலாம், கண் பார்வை மங்கலாம், ஞாபகமறதி ஏற்படலாம், அல்லது கழிப்பறையை உபயோகிக்க கஷ்டப்படலாம். இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே டாக்டரை அணுகுவது பலனளிக்கும். ஆகவே, அவர்களை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச்செல்ல பிள்ளைகள் முன்வர வேண்டும். போகப் போக, பெற்றோர் தாங்களாகவே செய்துவந்த வேலைகளையும் பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களுடைய சார்பில் பேசுவது... எழுத்து வேலைகளில் அவர்களுக்கு உதவுவது... வெளி வேலைகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்வது... இவையெல்லாம் பெற்றோரைச் சிறந்த விதத்தில் கவனித்துக்கொள்வதில் அடங்கும்.—நீதி. 3:27.
11. பெற்றோரின் உடல்நலப் பிரச்சினைகள் நீடிக்குமென தெரிந்தால் அவர்களுக்கு எப்படி உதவலாம்?
11 உங்கள் பெற்றோரின் உடல்நலப் பிரச்சினைகள் நீடிக்குமென தெரிந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வதிலும் தங்க வைப்பதிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அவை சிறிய மாற்றங்களாக இருந்தால், ஒத்துப்போவது பெற்றோருக்குச் சுலபமாக இருக்கும். ஒருவேளை, நீங்கள் பெற்றோரிடமிருந்து கொஞ்சம் தூரத்தில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ஒரு யெகோவாவின் சாட்சியோ பக்கத்துவீட்டுக்காரரோ உங்கள் பெற்றோரைத் தவறாமல் போய்ப் பார்த்து அவர்களுடைய உடல்நலனைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தால் போதுமா? சமைப்பதற்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கும் மட்டுமே உதவ ஏற்பாடு செய்தால் போதுமா? அவர்கள் தானாக நடமாடுவதற்கும் குளிப்பதற்கும் மற்ற வேலைகளைச் செய்வதற்கும் வசதியாக வீட்டில் ஏதாவது மாற்றங்களைச் செய்தால் போதுமா? பொதுவாக, வீட்டில் உதவிக்கு யாராவது இருந்தால், வயதானவர்கள் தாங்களாகவே எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களாகவே எதையும் செய்ய முடியாத ஒரு கட்டம் வரும்போது, அவர்களைக் கவனித்துக்கொள்ள நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். எப்படியானாலும் சரி, வயதானவர்களுக்கு உதவ உள்ளூரில் என்னென்ன ஏற்பாடுகள் இருக்கின்றன என்பதை விசாரியுங்கள். *—நீதிமொழிகள் 21:5-ஐ வாசியுங்கள்.
சிலர் சவாலை எப்படிச் சமாளிக்கிறார்கள்?
12, 13. தொலைதூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?
12 அன்பான பிள்ளைகள், தங்களுடைய பெற்றோர் செளகரியமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறியும்போது பிள்ளைகள் நிம்மதியாக உணர்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக, அநேக பிள்ளைகளால் தங்கள் பெற்றோரின் பக்கத்தில் இருக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், விடுமுறையின்போது பெற்றோரின் வீட்டுக்கு வந்து அவர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். பெற்றோரால் செய்ய முடியாத வீட்டு வேலைகளைச் செய்துகொடுக்கிறார்கள். அதோடு, முடிந்தவரை தினமும் அவர்களுக்கு ஃபோன் செய்யலாம், கடிதம் எழுதலாம், ஈ-மெயில் அனுப்பலாம். இப்படிச் செய்வதன் மூலம் பெற்றோரை நேசிப்பதைச் செயலில் காட்டலாம்.—நீதி. 23:24, 25.
13 சூழ்நிலை எப்படியிருந்தாலும், பெற்றோரின் அன்றாடத் தேவைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் தொலைதூரத்தில் வசிக்கிறீர்கள் என்றால் அவர்களுடைய சபையில் இருக்கும் மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அதோடு, உங்கள் பெற்றோருக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (நீதிமொழிகள் 11:14-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டாலும்கூட, “தகப்பனையும் . . . தாயையும் கனம்பண்ண” வேண்டும். (யாத். 20:12; நீதி. 23:22) பெற்றோரைக் கவனிக்கும் விஷயத்தில், எல்லாக் குடும்பங்களும் ஒரே விதமாக தீர்மானம் எடுப்பதில்லை. சிலர், பெற்றோரைத் தங்களுடன் வைத்துக்கொள்கிறார்கள்; இன்னும் சிலர், தங்கள் அருகிலேயே வசிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளோடும் அவர்களுடைய குடும்பங்களோடும் இருப்பதற்கு விரும்பமாட்டார்கள்; தனியாக வாழவே விரும்புவார்கள். பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என நினைப்பார்கள். சிலருக்கு வசதி இருப்பதால், தங்களைப் பார்த்துக்கொள்வதற்கு வீட்டிலேயே வேலைக்காரர்களை வைத்துக்கொள்கிறார்கள்.—பிர. 7:12.
14. பெற்றோரை அதிகமாகக் கவனித்துக்கொள்ளும் பிள்ளைக்கு என்ன பிரச்சினை ஏற்படலாம்?
14 அநேக குடும்பங்களில், பெற்றோருக்கு அருகே வசிக்கும் மகனோ மகளோதான் அவர்களை அதிகமாகக் கவனித்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. அப்போது, அந்த மகனோ மகளோ தங்களுடைய தேவைகளையும் பெற்றோரின் தேவைகளையும் சமநிலையோடு கவனித்துக்கொள்ள வேண்டும். பெற்றோரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ள அந்தப் பிள்ளைக்கு நேரமும் சக்தியும் இல்லாமல் போகலாம், சூழ்நிலைகளும் மாறலாம். அப்போது, சில மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை, பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
15. பெற்றோரை அதிகமாக கவனித்துக்கொள்ளும் பிள்ளை என்ன செய்யலாம்?
15 வயதான பெற்றோரை எப்போதும் பக்கத்திலிருந்து கவனித்துக்கொள்ளும் பிள்ளை, தன்னுடைய சக்தியை எல்லாம் இழந்துவிட்டதுபோல் உணரலாம். (பிர. 4:6) அன்பான பிள்ளைகள் பெற்றோருக்காக தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யவே விரும்புவார்கள். அப்படிச் செய்யும்போது, சில சமயங்களில் அவர்கள் திணறிப்போகலாம். ஆகவே, எல்லாவற்றையும் தாங்களே செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களின் உதவியை நாட வேண்டும். அவ்வப்போது மற்றவர்கள் உதவும்போது, பெற்றோரை முதியோர் காப்பகத்தில் சேர்க்க வேண்டியிருக்காது.
16, 17. வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதில் பிள்ளைகளுக்கு என்ன சவால்கள் இருக்கின்றன? அவர்கள் அதை எப்படிச் சமாளிக்கலாம்? (“அன்பான கவனிப்பு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
16 அன்பான பெற்றோர் வயதாகி கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது பிள்ளைகளுக்கு வேதனையாக இருக்கும். அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் ஏற்படலாம். உதாரணத்திற்கு அவர்கள் சோகமடையலாம், வருத்தப்படலாம், விரக்தியடையலாம், மனக்கசப்படையலாம், குற்றவுணர்ச்சியில்கூட அவதிப்படலாம். சில சமயங்களில், வயதான அம்மாவோ அப்பாவோ நோகடிக்கும் விதத்தில் பேசலாம் அல்லது நன்றியில்லாத விதத்தில் நடந்துகொள்ளலாம். அப்போது, சீக்கிரத்தில் கோபமடையாதீர்கள். மனநல நிபுணர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “எந்தவொரு உணர்ச்சியையும் சிறந்த விதத்தில் சமாளிக்க, அந்த உணர்ச்சிகள் உங்களுக்கு இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருப்பதற்காக உங்களையே குற்றப்படுத்திக்கொள்ள கூடாது.” உங்களுடைய உணர்ச்சிகளைப் பற்றி மணத்துணையிடம், குடும்பத்திலுள்ள வேறொருவரிடம், அல்லது நம்பகமான நண்பரிடம் பேசுங்கள். அப்படிப் பேசுவது, உங்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் புரிந்துகொண்டு சமநிலையுடன் நடந்துகொள்ள உதவும்.
17 பெற்றோரை வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்போது, அவர்களை முதியோர் காப்பகத்தில் சேர்க்க குடும்பத்தார் தீர்மானிக்கலாம். ஒரு சகோதரி, முதியோர் காப்பகத்தில் இருக்கும் தன்னுடைய அம்மாவை முடிந்தவரை தினமும் போய்ப் பார்க்கிறார். “24 மணிநேரமும் கூடவே இருந்து அம்மாவ பார்த்துக்க முடியல. அவங்கள முதியோர் காப்பகத்துல சேர்க்கலாம்ணு முடிவு எடுத்தது மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. ஆனா, அம்மா உயிரோடிருந்த கடைசி மாசங்கள்ல அவங்கள அங்க சேர்க்கிறதுதான் நல்ல யோசனையா இருந்துச்சு; அம்மாவும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க” என்று அவர் சொல்கிறார்.
18. பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்ளும் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பலன் என்ன?
18 வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கு உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் கஷ்டங்கள் இருக்கும் என்பது உண்மைதான். அவர்களைக் கவனித்துக்கொள்வது சம்பந்தமாக திட்டவட்டமான வழிமுறைகள் ஏதும் கிடையாது. இருந்தாலும், ஞானமாகத் திட்டமிட்டால்... குடும்பத்தாரோடு நன்கு ஒத்துழைத்தால்... மனந்திறந்து பேசினால்... எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவிடம் இருதயப்பூர்வமாக ஜெபம் செய்தால்... உங்கள் அன்பான பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து அவர்களைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படிச் செய்யும்போது அவர்களைக் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறோம் என்ற திருப்தி கிடைக்கும். (1 கொரிந்தியர் 13:4-8-ஐ வாசியுங்கள்.) மிக முக்கியமாக, மனநிம்மதியையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.—பிலி. 4:7.
^ பாரா. 3 உள்ளூர் கலாச்சாரத்தின்படி, பெற்றோர் தனியாக வாழலாம். அல்லது, பிள்ளைகளுடன் சேர்ந்தோ கூட்டுக் குடும்பமாகவோ வாழலாம்.
^ பாரா. 11 உங்களுடைய பெற்றோர் தனியாக வசித்தால், அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களிடமும் ஒரு சாவி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், ஏதாவது அவசர நிலை ஏற்படும்போது அவர்களால் வீட்டிற்குள் சென்று உதவ முடியும்.