நீதி வழுவாத நீதிபதி
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
நீதி வழுவாத நீதிபதி
மனித நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதில் தில்லுமுல்லு செய்கிறார்கள் அல்லது கடுமையான தீர்ப்புகளை வழங்குகிறார்கள். ஆனால், கடவுளாகிய யெகோவா அப்படிப்பட்டவர் அல்ல; அவர் “நியாயத்தை விரும்புகிறவர்.” (சங்கீதம் 37:28) அவர் பொறுமையுள்ளவர், அதே சமயத்தில் எதையும் கண்டும் காணாமல் விட்டுவிடுபவர் அல்ல. அவர் நீதி வழுவாதவர். எண்ணாகமம் 20-ஆம் அதிகாரத்திலுள்ள பதிவில் நாம் பார்க்கிற வாக்குவாதத்தையும் கலகத்தையும் அவர் எப்படிக் கையாண்டார் எனக் கவனிக்கலாம்.
இஸ்ரவேலருடைய வனாந்தரப் பயணம் முடிவுக்கு வரவிருந்த சமயத்தில், அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் போனது. a அப்போது அந்த ஜனங்கள், “நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன” என்று சொல்லி மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். (வசனம் 4) அந்த வனாந்தரம் ‘அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத கெட்ட இடம்’ என்று புலம்பினார்கள்; அத்தி, திராட்சை, மாதுளை ஆகிய பழங்களையே சில வருடங்களுக்கு முன் இஸ்ரவேல் வேவுகாரர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து கொண்டுவந்திருந்தார்கள். (வசனம் 5; எண்ணாகமம் 13:23) சொல்லப்போனால், தங்களுடைய முந்தின சந்ததியினர் கால்பதிக்க மறுத்த வளமான தேசத்தைப் போல் அந்த வனாந்தரம் இல்லாதிருந்ததால்தான் மோசேயையும் ஆரோனையும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். அந்தச் சந்ததியினர் முறுமுறுத்ததால் அத்தேசத்தில் கால்பதிக்கவில்லை.
முறுமுறுத்த அவர்கள் செத்து தொலையட்டும் என்று யெகோவா விட்டுவிடவில்லை. மாறாக, மூன்று காரியங்களைச் செய்யும்படி மோசேயிடம் சொன்னார்: தன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு, மக்களைக் கூடிவரச்செய்து, ‘அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசு; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்’ என்று சொன்னார். (வசனம் 8) மோசே, முதல் இரண்டு காரியங்களுக்குக் கீழ்ப்படிந்தார், ஆனால் மூன்றாவது காரியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. யெகோவாமேல் விசுவாசம் வைத்து கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதிலாக, மக்களைப் பார்த்து கோபத்துடன், “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ” என்றார். (வசனம் 10; சங்கீதம் 106:32, 33) அதன் பிறகு, கன்மலையை இரண்டு முறை அடித்தார், “உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது.”—வசனம் 11.
இவ்விதத்தில் மோசேயும் ஆரோனும் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்கள். ‘நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனீர்கள்’ என்று அவர்களிடம் கடவுள் சொன்னார். (எண்ணாகமம் 20:24) இவ்வாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கடவுளுடைய வாக்குக்கு எதிராகச் செயல்பட்டதால், மக்களைப் பார்த்து கலகக்காரர்கள் என்று சொன்ன இவர்களே கடைசியில் கலகக்காரர்களாகிவிட்டார்கள். கடவுள் கொடுத்தத் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக இருந்தது. ஆம், மோசேயும் ஆரோனும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல மாட்டார்கள். அவருடைய தீர்ப்பு மிகவும் கடுமையானதாக இருந்ததா? இல்லை, ஏனெனில் அதற்கு நிறைய காரணங்கள் இருந்தன.
முதலாவதாக, கடவுள் மோசேயிடம் மக்களைப் பார்த்துப் பேசும்படியும் சொல்லவில்லை, அவர்களைக் கலகக்காரர்கள் என முத்திரை குத்தும்படியும் சொல்லவில்லை. இரண்டாவதாக, மோசேயும் ஆரோனும் கடவுளுக்கு மகிமை சேர்க்கவில்லை. ‘நீங்கள் என்னைப் பரிசுத்தம் பண்ணவில்லை’ என்று கடவுள் சொன்னார். (வசனம் 12) ‘நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோம்’ என்று சொன்னதன் மூலம் அற்புதமாய்த் தண்ணீரை வழங்கியது கடவுள் அல்ல, தானும் ஆரோனுமே என்பதுபோல் மோசே பேசினார். மூன்றாவதாக, முன்பு கலகம் செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையே இவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்தக் கலகக்காரர்கள் கானானுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை; அவ்வாறே மோசேக்கும் ஆரோனுக்கும் நடந்தது. (எண்ணாகமம் 14:22, 23) நான்காவதாக, மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலரின் தலைவர்களாக இருந்தார்கள். அதிகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பவர்களிடம் அதிகம் கேட்கப்படும்.—லூக்கா 12:48.
யெகோவா நீதி வழுவாதவர். அவர் நீதியை விரும்புவதால், தீர்ப்பு வழங்குவதில் தவறு செய்யவோ நீதிகேடு செய்யவோ அவரால் முடியாது. அப்படிப்பட்ட ஒரு நீதிபதி நம் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் தகுந்தவர், அல்லவா? (w09 09/01)
[அடிக்குறிப்பு]
a இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்த பிறகு, கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்திருந்த தேசத்தில் நுழைவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், அத்தேசத்தை வேவுபார்க்கச் சென்ற பத்துபேர் திரும்பி வந்து சொன்ன தவறான செய்தியைக் கேட்ட மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அதனால், அவர்கள் அந்த வனாந்தரத்திலேயே 40 வருடங்கள் கழிக்கும்படி யெகோவா தீர்ப்பளித்தார்; அந்தக் கலகக்கார சந்ததியார் அனைவரும் செத்து மடிவதற்கு அது போதுமான காலமாய் இருந்தது.