மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினார்
இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினார்
அன்னாள் தன் பிரச்சினைகளையெல்லாம் ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பயணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார். அது ஒரு மகிழ்ச்சியான சமயமாக இருந்திருக்க வேண்டும்; ஏனென்றால், அவருடைய கணவர் எல்க்கானா, சீலோவிலிருந்த கூடாரத்தில் யெகோவாவை வழிபடுவதற்காக வருடா வருடம் தன் குடும்பத்தாரை அழைத்துச் செல்வார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தம் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். (உபாகமம் 16:15) அன்னாள் சிறுவயதிலிருந்தே அதுபோன்ற பண்டிகைகளை மகிழ்ந்து கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமீப வருடங்களில், அந்த மகிழ்ச்சியெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது.
அன்னாள்மீது எல்க்கானா உயிரையே வைத்திருந்தார். என்றாலும், அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அவள் பெயர் பெனின்னாள்; அவள் ஏதாவது சொல்லி அன்னாளை நோகடிப்பதிலேயே குறியாய் இருந்ததாகத் தெரிகிறது. இந்த வருடாந்தர பண்டிகைகளின்போதும்கூட அன்னாளைச் சந்தோஷமாக இருக்க விடாமல் அவருக்கு இம்சை கொடுத்தாள்; எப்படியெல்லாம் இம்சை கொடுத்தாள்? அதைவிட முக்கியமாக, தன்னால் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையில், யெகோவாமீது விசுவாசம் வைத்திருந்தது அன்னாளுக்கு எப்படி உதவியது? உங்கள் வாழ்க்கையிலும்கூட, பல்வேறு பிரச்சினைகள் காரணமாகச் சந்தோஷம் வற்றிப்போயிருந்தால், அன்னாளின் கதையைப் படித்துப் பாருங்கள்; மனம் நெகிழ்ந்துபோவீர்கள்!
“ஏன் துக்கமாய் இருக்கிறாய்?”
அன்னாளை ஆட்டிப்படைத்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. முதல் பிரச்சினையையாவது அவரால் ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தது; ஆனால், இரண்டாவது பிரச்சினையைக் குறித்து அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவருடைய முதல் பிரச்சினை: எல்க்கானாவிற்கு இரண்டு தாரம் இருந்ததால், அந்தப் போட்டி மனைவி அவரை வெறுத்து ஒதுக்கினாள். இரண்டாவது பிரச்சினை: அன்னாள் மலடியாய் இருந்தார். பிள்ளைக்காக ஏங்கும் எந்தவொரு பெண்ணாலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது; அதுவும், அன்னாள் வாழ்ந்த சமுதாயத்தில், ஒரு பெண் மலடியாய் இருந்தால் அவள் அடைகிற வேதனைக்கு அளவே இருக்காது. குடும்பத்தின் பெயர் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுவதற்காக, தங்களுக்குக் குழந்தை இருக்க வேண்டுமென அந்தச் சமுதாயத்தில் எல்லாருமே எதிர்பார்த்தார்கள். அதனால், குழந்தை பாக்கியம் இல்லாததை மக்கள் பெருத்த அவமானமாகக் கருதினார்கள்.
பெனின்னாள் மட்டும் ஒரு முள்ளாக இருந்து அன்னாளைக் குத்திக்கொண்டே இருந்திராவிட்டால் அன்னாள் இதையெல்லாம் தாங்கியிருப்பாள். இரண்டு தாரங்கள் இருந்த குடும்பத்தில் என்றைக்குமே நிலைமை சுமுகமாக இருந்ததில்லை. எப்போதுமே போட்டியும் பொறாமையும் பகையும்தான் இருந்துவந்திருக்கின்றன. இந்தப் பலதார மணம், ஏதேன் தோட்டத்தில் யெகோவா ஆரம்பித்து வைத்த ஒருதார மணத்திற்கு நேர் எதிரானது. a (ஆதியாகமம் 2:24) பலதார மணத்தினால் விளையும் சோகங்களை பைபிள் நன்றாகவே சித்தரித்துக் காட்டுகிறது; இதற்கு எல்க்கானாவின் குடும்பம் ஓர் உதாரணம்.
அன்னாள்மீது எல்க்கானா அளவுகடந்த பாசம் வைத்திருந்தார். யூத பாரம்பரியத்தின்படி, எல்க்கானா முதலில் அன்னாளையே திருமணம் செய்திருந்தார்; சில வருடங்களுக்குப் பிறகுதான் பெனின்னாளைத் திருமணம் செய்துகொண்டார். என்னவாக இருந்தாலும் சரி, பெனின்னாளுக்கு அன்னாள்மீது பொறாமை இருந்தது உண்மை; அவரைக் கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்ப்பதே அவளது வாடிக்கை! குழந்தை பாக்கியம் இருந்ததாலேயே பெனின்னாள் அன்னாளைவிடத் தன்னை உயர்வாய்க் கருதினாள். ஒவ்வொரு பிள்ளையாகப் பிறக்கப் பிறக்க, அவளுக்குக் கர்வம் தலைக்கேறியது. அன்னாளின் பரிதாபமான சூழ்நிலையைப் பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல அதையே குத்திக்காட்டினாள். அன்னாள் ‘துக்கப்படும்படியாக பெனின்னாள் அவரை மிகவும் விசனப்படுத்தினாள்’ என பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 1:6) இதையெல்லாம் பெனின்னாள் வேண்டுமென்றே செய்தாள். அன்னாளை நோகடிக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய குறி; அதில் அவள் வெற்றியும் பெற்றாள்.
1 சாமுவேல் 1:4-8; ஈஸி டு ரீட் வர்ஷன்.
வருடா வருடம் சீலோவுக்குப் போகிற சந்தர்ப்பத்தை பெனின்னாள் வசமாகப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது. யெகோவாவுக்குப் பலி செலுத்தியவற்றிலிருந்து பெனின்னாளின் ‘எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும்’ எல்க்கானா பங்குபோட்டுக் கொடுத்தார். பிள்ளை இல்லாத அன்னாளுக்கோ, அவருக்குரிய பங்கு மட்டும்தான் கிடைத்தது. பெனின்னாளுக்குச் சொல்லவா வேண்டும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அன்னாளை வறுத்தெடுத்தாள்; அப்போது அன்னாள் துக்கம் தாளாமல் அழுதார், சாப்பிடவும் மறுத்தார். எல்க்கானாவுக்கு, தன் அருமை மனைவி படுகிற கஷ்டமெல்லாம் நன்றாகத் தெரிந்தது; அவர் சாப்பிடாமல் இருந்ததையும் கவனித்தார். அதனால், அவரிடம் ஆறுதலாகப் பேசினார். “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து மகன்களைவிட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்ககூடாதா” என்றார்.—அன்னாள் தனக்குப் பிள்ளை இல்லாததை நினைத்துக் கவலைப்பட்டதை எல்க்கானா புரிந்துகொண்டார்; அதற்காக அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். அவர் சொன்ன ஆறுதலான வார்த்தைகளெல்லாம் அன்னாளுக்கு அருமருந்தாய் இருந்தது. b ஆனால், பெனின்னாளின் விஷமத்தைப் பற்றி எல்க்கானா எதுவுமே குறிப்பிடவில்லை; அன்னாளும் அதைப் பற்றி அவரிடம் எதுவும் பேசிக்கொண்டதாக பைபிள் சொல்வதில்லை. ‘தேவையில்லாமல் பெனின்னாளைப் பற்றி கணவரிடம் சொல்லிப் பிரச்சினையை ஏன் விலைக்கு வாங்க வேண்டும்’ என்று அன்னாள் ஒருவேளை நினைத்திருக்கலாம். அப்படியே அவர் ஏதாவது சொல்லியிருந்தாலும், எல்க்கானா பிரச்சினையைத் தீர்த்திருப்பாரா? அன்னாளின் மீது பெனின்னாளுக்கு வெறுப்பு இன்னும் அதிகமாகியிருக்காதா? அவளுடைய பிள்ளைகளும் வேலைக்காரர்களும்கூட அன்னாளை இன்னும் அதிகமாய் வெறுத்திருக்க மாட்டார்களா? மொத்தத்தில், அன்னாள் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அந்நியமாகவே உணர்ந்திருப்பார்.
பெனின்னாளின் புத்தி எவ்வளவு மட்டமானதென்று எல்க்கானாவுக்குப் புரிந்திருந்ததோ இல்லையோ, யெகோவாவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அன்னாளுக்கும் பெனின்னாளுக்கும் இடையில் என்ன நடந்ததென்பதை பைபிள் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இந்த உதாரணத்தின் மூலம், பகைமையினாலும் பொறாமையினாலும் தூண்டப்பட்டு ஒருவர் செய்யும் தவறு அவருக்கு அற்பமாகத் தோன்றினாலும் பைபிள் அவரைக் கடுமையாக எச்சரிக்கிறது. மறுபட்சத்தில், அன்னாளைப் போன்று அப்பாவியாகவும் அமைதியை விரும்புகிறவராகவும் இருப்பவர்கள் ஆறுதல் அடையலாம்; ஏனென்றால், சர்வலோக நியாயாதிபதி தமக்கே உரிய நேரத்தில், தமக்கே உரிய விதத்தில் அநியாயத்தைச் சரிசெய்வார். (உபாகமம் 32:4) அன்னாளும்கூட அதை அறிந்துதான் யெகோவாவின் உதவியை நாடினார்.
“அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை”
இருள் பிரியாத அதிகாலை நேரம்; எல்க்கானாவின் வீடே அமர்க்களப்பட்டிருந்தது. பிள்ளைகள் உட்பட எல்லாரும் பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பெரிய குடும்பத்தார், எப்பிராயீம் மலைத் தேசத்தில் அமைந்திருந்த சீலோவிற்குச் செல்ல 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. c நடந்தே செல்ல வேண்டுமென்றால், அங்கு போய்ச் சேர ஓரிரு நாட்கள் எடுக்கும். தனக்குப் போட்டியாக இருப்பவள் எப்படியெல்லாம் நடந்துகொள்வாள் என்பதை அன்னாள் நன்றாகவே அறிந்திருந்தார். என்றாலும், அதை நினைத்து அவர் வீட்டிலேயே இருந்துவிடவில்லை. இந்த விஷயத்தில் இன்றுள்ள யெகோவாவின் வணக்கத்தாருக்கு அவர் ஓர் ஒப்பற்ற முன்னுதாரணமாய்த் திகழ்கிறார். மற்றவர்களுடைய தப்புத்தவறுகள், கடவுளுக்கு நாம் செய்கிற சேவைக்கு முட்டுக்கட்டையாய் இருக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், இன்று நாம் சகித்திருக்க உதவும் ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோம்.
வளைந்து நெளிந்து செல்கிற மலைப்பாதையில் எல்க்கானாவின் குடும்பத்தார் ஒரு நாள் முழுவதும் கால் கடுக்க நடந்தபின் ஒருவழியாக சீலோவுக்கு அருகில் வந்துவிட்டார்கள். அந்த ஊர், உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட ஒரு மலையில் அமைந்திருந்தது. ஊரை நெருங்க நெருங்க, தான் யெகோவாவிடம் ஜெபத்தில் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென அன்னாள் தீவிரமாகச் சிந்தித்திருக்கலாம். அங்கு போய்ச்சேர்ந்த பின் அந்தக் குடும்பத்தார் சாப்பிட ஆரம்பித்தார்கள். அன்னாளோ தன்னால் முடிந்தமட்டும் சீக்கிரமாகவே அங்கிருந்து கிளம்பி யெகோவாவின் கூடாரத்திற்குச் சென்றார். வாசலுக்குப் பக்கத்திலேயே தலைமைக் குரு ஏலி அமர்ந்திருந்தார். அன்னாளின் கவனமோ யெகோவாவிடம் தன் மனக் குமுறல்களைக் கொட்டுவதிலேயே இருந்தது. ஏனென்றால், தன் மனப்புண்ணை யெகோவா ஆற்றுவார் என அவர் நம்பினார். ஆம், அவரது அவல நிலையை எந்த மனிதரும் புரிந்துகொள்ளாவிட்டாலும் அவருடைய பரலோகத் தகப்பன் நிச்சயம் புரிந்துகொள்வார். துக்கம் தொண்டையை அடைக்க, வார்த்தை வராமல், அழ ஆரம்பித்தார்.
அவர் விக்கி விம்மி அழுதுகொண்டே, தன் மனதின் ஆதங்கத்தையெல்லாம் யெகோவாவிடம் கொட்டினார். தன் வேதனைகளை மனதிற்குள்ளேயே வார்த்தைகளால் 1 சாமுவேல் 1:9-11.
வடித்தபோது அவருடைய உதடுகள் அசைந்தன. இப்படி நெடுநேரம் தன் தகப்பனிடம் பேசிக்கொண்டிருந்தார். தனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டுமென்று மட்டும் அவர் கேட்கவில்லை. ஏனென்றால், கடவுளிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவதில் மாத்திரமே அவர் குறியாய் இருக்காமல், தன்னால் முடிந்ததை அவருக்குக் கொடுக்கவும் ஆசைப்பட்டார். ஆகவே, கடவுளிடம் அவர் ஒரு பொருத்தனை செய்தார்; தனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தால்... அந்தக் குழந்தையை யெகோவாவின் சேவைக்கென்றே அர்ப்பணிப்பதாகச் சொன்னார்.—ஜெபம் செய்கிற விஷயத்தில், கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்குமே அன்னாள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஓர் அன்பான பெற்றோரை நம்பிப் பிள்ளை தன் மனதிலுள்ள கவலைகளைச் சொல்வது போலவே எந்தவிதத் தயக்கமுமின்றி தமது மக்கள் தங்களுடைய மனப் பாரத்தையெல்லாம் தம்மிடம் இறக்கி வைக்கும்படி யெகோவா கனிவோடு அழைக்கிறார். (சங்கீதம் 62:8; 1 தெசலோனிக்கேயர் 5:17) ஜெபத்தைக் குறித்த பின்வரும் ஆறுதலான வார்த்தைகளை எழுதுவதற்கு அப்போஸ்தலன் பேதுரு கடவுளால் தூண்டப்பட்டார்: “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
என்றாலும், யெகோவா நம்மைப் புரிந்துகொள்கிற அளவுக்கு மனிதர்கள் நம்மைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அன்னாள் அழுது ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார். அது தலைமைக் குரு ஏலியின் குரல்; அன்னாள் ஜெபம் செய்வதை அவர் நீண்ட நேரம் கவனித்துக்கொண்டிருந்தார். ‘நீ எவ்வளவு நேரம் குடிபோதையில் இருப்பாய்? உன் போதை தெளிந்த பின் வா’ என்றார். அன்னாளின் உதடுகள் அசைந்ததையும், உடல் குலுங்கியதையும், முகம் சோகத்தில் இருண்டிருந்ததையும் பார்த்த ஏலி, என்ன நடந்ததென்று கேட்டுத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக அன்னாள் குடித்து வெறித்திருக்க வேண்டுமென்று அவராகவே முடிவு செய்துவிட்டார்.—1 சாமுவேல் 1:12-14, NW.
ஏற்கெனவே நொந்து நூலாகியிருந்த அன்னாளுக்கு இந்த அபாண்டமான குற்றச்சாட்டைக் கேட்டபோது எப்படி இருந்திருக்கும்! அதுவும், பொறுப்பிலிருந்த ஒருவர் இப்படிக் கேட்கிறார் என்றால்!! இந்த விஷயத்திலும்கூட அன்னாள் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஒரு மனிதனின் குறைபாடு, தான் யெகோவாவுக்குச் செய்கிற சேவையில் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை. தன்னுடைய சூழ்நிலையை ஏலியிடம் மரியாதையோடு எடுத்துச்சொன்னார். அதைக் கேட்ட ஏலி மனம் வருந்தி, “சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக [அதாவது, அருள்புரிவாராக]” என்று மென்மையான குரலில் சொன்னார்.—1 சாமுவேல் 1:15-17.
யெகோவாவின் கூடாரத்திற்குச் சென்று, அவரிடம் தன் மனப்பாரத்தையெல்லாம் இறக்கி வைத்த பின் அன்னாள் எப்படி உணர்ந்தார்? “பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை” என வசனம் சொல்கிறது. (1 சாமுவேல் 1:18) “அவர் முகம் வாடியிருக்கவில்லை” என பொது மொழிபெயர்ப்பு பைபிள் குறிப்பிடுகிறது. அன்னாள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். சொல்லப்போனால், தன் மனதிலிருந்த பாரமான சுமையை, பரம சுமைதாங்கியான அவருடைய பரலோகத் தகப்பன்மீது இறக்கி வைத்துவிட்டார். (சங்கீதம் 55:22) யெகோவாவினால் தாங்க முடியாத சுமையென ஏதாவது இருக்கிறதா? அன்றும் இல்லை! இன்றும் இல்லை!! என்றும் இல்லை!!!
மனப்பாரத்தால் நாம் நொந்து நைந்துபோயிருந்தோம் என்றால், அன்னாளைப் போல் செய்யலாம்; ஆம், ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ நம் கவலைகளை மனம் திறந்து கொட்டலாம். (சங்கீதம் 65:2) நம்பிக்கையோடு அப்படிச் செய்தோமென்றால், நம் சோகமெல்லாம் விடைபெற்று, “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம்” நம் மனதில் குடிகொள்ளும்.—பிலிப்பியர் 4:6, 7.
“எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை”
அடுத்த நாள் காலை, அன்னாள் தன் கணவர் எல்க்கானாவுடன் கூடாரத்திற்குத் திரும்பிச் சென்றார். தான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட விஷயத்தையும் தன் எண்ணாகமம் 30:10-15) கடவுள் பக்தியுள்ள எல்க்கானாவோ அப்படியெல்லாம் செய்யவில்லை. மாறாக, வீடுதிரும்பும் முன் கூடாரத்திற்குச் சென்று அன்னாளோடு சேர்ந்து யெகோவாவை வழிபட்டார்.
பொருத்தனையையும் பற்றி ஒருவேளை அவரிடம் சொல்லியிருப்பார்; ஏனென்றால், மோசேயின் திருச்சட்டப்படி, கணவனின் அனுமதியின்றி மனைவி ஏதாவது ஒரு பொருத்தனை செய்திருந்தால் அதை ரத்து செய்யக் கணவனுக்கு உரிமை இருந்தது. (அது சரி, அன்னாளை இனி வெறுப்பேற்றிப் பிரயோஜனம் இல்லை என்பதை பெனின்னாள் எப்போது உணர்ந்தாள்? அதைப் பற்றியெல்லாம் பைபிள் சொல்வதில்லை; இருந்தாலும், “அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை” என்பதை வைத்துப் பார்த்தால், அதன் பிறகு அன்னாள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாய் இருந்தார் எனத் தெரிகிறது. நடந்தது எதுவாயிருந்தாலும் சரி, அன்னாளிடம் தன் பாச்சா பலிக்கவில்லை என்பதை பெனின்னாள் சீக்கிரத்திலேயே உணர்ந்தாள். அதற்குப் பின்பு அவளைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை.
மாதங்கள் ஏற ஏற, அன்னாளின் உள்ளத்தில் மலர்ந்த மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் அளவே இல்லை. அதற்குக் காரணம்? அவர் கர்ப்பமாகியிருந்தார்! ஒருபுறம் அவர் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறந்தாலும், யெகோவாவுக்குச் செய்த பொருத்தனையைத் துளியும் மறக்கவில்லை. அவருக்கு ஆண்குழந்தை பிறந்தபோது அதற்கு சாமுவேல் என்று பெயர் வைத்தார்; மூலமொழியில் அதன் அர்த்தம், “கடவுளுடைய பெயர்” என்பதாகும்; அன்னாளைப் போல, கடவுளிடம் வேண்டிக்கொள்வதையே இந்தப் பெயர் அர்த்தப்படுத்துகிறது. குழந்தை பிறந்த வருடத்தில் எல்க்கானாவுடன் அன்னாள் கூடாரத்திற்குப் போகவில்லை. பிள்ளை பால் மறக்கும் வரை மூன்று வருடம் வீட்டிலேயே இருந்தார். பின்பு தன் அருமை மகனைப் பிரியும் நாள் வந்தபோது ஒருவழியாகத் தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.
தன் செல்லத்தை விட்டுப் பிரிவது அன்னாளுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. ‘கூடாரத்திலிருந்த பெண்கள் என் குழந்தையைப் பார்த்துக்கொள்வார்கள்; அதனால் சீலோவில் அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது’ என்று நினைத்து அன்னாள் தன் மனதைத் தேற்றியிருக்கலாம். என்றாலும், பிஞ்சுக் குழந்தையாயிற்றே! அந்த வயதில் பிள்ளையை விட்டுப் பிரிய எந்தத் தாய்க்குத்தான் மனம் வரும்? அப்படியிருந்தாலும், அவனை அன்னாளும் எல்க்கானாவும் வேண்டாவெறுப்போடு அல்லாமல் நன்றிப்பெருக்கோடு அங்கே கொண்டுசென்றார்கள். கடவுளுடைய வீட்டில் பலிகளைச் செலுத்திய பின்பு அன்னாள் செய்திருந்த பொருத்தனையை ஏலிக்கு ஞாபகப்படுத்தி, சாமுவேலை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
அப்பொழுது அன்னாள் ஒரு ஜெபம் செய்தார்; அதைக் கடவுள் மிகவும் மதிப்பு வாய்ந்ததாய்க் கருதியதால் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அது 1 சாமுவேல் 2:1-10-ல் காணப்படுகிறது; கடவுள்மீது அன்னாளுக்கு இருந்த விசுவாசத்தின் ஆழத்தை அந்த ஜெபத்தின் ஒவ்வொரு வரியும் எதிரொலிக்கிறது. தமது வல்லமையை அதிஅற்புதமான விதத்தில் யெகோவா பயன்படுத்தியதற்காக அன்னாள் அவரைப் போற்றிப் புகழ்ந்தார்; ஆம், ஆணவமிக்க ஆட்களை அடிபணியச் செய்யவும், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தவும், உயிரை எடுக்கவும் உயிரைக் காக்கவும் அவருக்கு இருக்கிற ஒப்பற்ற சக்தியைக் குறித்து அவரைப் புகழ்ந்தார். ஈடிணையற்ற அவரது பரிசுத்தத்தன்மை, அவரது நியாயத்தன்மை, அவரது உண்மைத்தன்மை ஆகியவற்றை நினைத்து அவரைப் போற்றினார். ஆகவே, “எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை” என அன்னாள் சொன்னதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவரை அண்டி வருகிற ஏழை எளியோருக்கு அவர் முற்றிலும் நம்பத்தக்கவராகவும், என்றும் மாறாதவராகவும், பலத்த கோட்டையாகவும் இருக்கிறார்.
யெகோவாமீது பக்தியும் விசுவாசமும் நிறைந்த ஒரு தாய் கிடைத்ததற்கு சிறுவன் சாமுவேல் உண்மையிலேயே பாக்கியம் பெற்றவன். தன்னோடுகூட அம்மா இல்லை என்ற குறை சாமுவேலுக்கு இருந்தபோதிலும், அம்மா தன்னைச் சுத்தமாக மறந்துவிட்டதாய் சாமுவேல் உணரவில்லை. ஏனென்றால், அன்னாள் வருடா வருடம் சீலோவுக்குப் போகும்போது, கூடார சேவைக்காக, சாமுவேலுக்கு ஒரு சிறிய மேலங்கியைக் கொண்டுசெல்வார். அன்னாள் அந்த அங்கியைத் தைத்தபோது தன் அன்பையும் அக்கறையையும் சேர்த்தே தைத்திருந்தார் எனச் சொல்லலாம். (1 சாமுவேல் 2:19) அதை அவனுக்குப் போட்டு அழகுபார்த்ததைச் சற்று கற்பனை செய்து பாருங்களேன்: அந்த அங்கியைப் போட்டுவிட்டு, அதை எல்லாப் பக்கத்திலும் சரிசெய்து, கொஞ்சம் தள்ளி நின்று ஆசை ஆசையாய்ப் பார்த்து, ரசித்து, பின்னர் அவனைக் கொஞ்சி, உற்சாகப்படுத்தும் வகையில் நாலு வார்த்தை பேசியிருப்பார். அப்படிப்பட்ட தாய் சாமுவேலுக்குக் கிடைத்தது ஒரு பெரிய ஆசீர்வாதம்; அவர் வளர்ந்தபின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் இஸ்ரவேல் தேசத்திற்கே கடவுள் தந்த பரிசாகத் திகழ்ந்தார்.
அன்னாளையும் யெகோவா மறந்துவிடவில்லை. இன்னும் ஐந்து பிள்ளைகளைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்தார். (1 சாமுவேல் 2:21) ஆனால், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம் என்னவென்றால், அவருக்கும் அவருடைய பரலோகத் தகப்பன் யெகோவாவுக்கும் இடையே இருந்த பந்தம்தான். ஆண்டுகள் செல்லச் செல்ல, அந்தப் பந்தம் இன்னும் பலமானது. அன்னாளின் விசுவாசத்தை நீங்கள் பின்பற்றுகையில், உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற பந்தம் பன்மடங்கு பலப்படுவதாக! (w10-E 07/01)
[அடிக்குறிப்புகள்]
a சிறிது காலத்திற்கு, மக்கள் பலதார மணம் செய்துகொள்ள யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதைப் பற்றி, ஆகஸ்ட் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 28-ஐக் காண்க.
b யெகோவா “அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்” என பைபிள் சொன்னாலும், பணிவுக்கும் நேர்மைக்கும் சொந்தக்காரியாய் இருந்த அன்னாளை அவர் வெறுத்ததாக எந்தப் பதிவும் இல்லை. (1 சாமுவேல் 1:5) கடவுள் அனுமதித்த ஒரு காரியத்தைக்கூட, அவர் செய்ததாகவே பைபிள் சில சமயங்களில் குறிப்பிடுகிறது.
c எல்க்கானாவின் சொந்த ஊரான ராமா, இயேசுவின் காலத்தில் அரிமத்தியா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை வைத்துத்தான் இந்தத் தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.
[பக்கம் 27-ன் பெட்டி]
குறிப்பிடத்தக்க இரு ஜெபங்கள்
அன்னாள் செய்த இரண்டு ஜெபங்களும் 1 சாமுவேல் 1:11 மற்றும் 2:1-10-ல் பதிவாகியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க அநேக அம்சங்கள் அடங்கியுள்ளன; ஓரிரு அம்சங்களை இப்போது காண்போம்:
◼ முதல் ஜெபத்தை, ‘சேனைகளின் யெகோவாவே’ என்று அன்னாள் ஆரம்பித்தார். அவரே இந்தப் பட்டப்பெயரை முதன்முதலில் உபயோகித்ததாக பைபிள் பதிவு காட்டுகிறது. இந்தப் பட்டப்பெயர் பைபிள் முழுக்க 285 இடங்களில் காணப்படுகிறது; ஆவிக்குமாரர்கள் அடங்கிய பெரும் சேனைக்கு யெகோவாவே தலைவர் என்பதை இந்தச் சொற்றொடர் அர்த்தப்படுத்துகிறது.
◼ இரண்டாவது ஜெபத்தை, அன்னாள் தனக்குக் குழந்தை பிறந்தபோது செய்யவில்லை; சீலோவில் யெகோவாவின் சேவைக்கு சாமுவேலை அர்ப்பணித்தபோது செய்தார். ஆகவே, தன்னோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த பெனின்னாளின் வாய் அடைபட்டுப்போனதால் அன்னாள் அகமகிழவில்லை; மாறாக, தான் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலேயே அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
◼ பாரம் சுமக்கிற... தன் கொம்புகளை வலிமை வாய்ந்த விதத்தில் உபயோகிக்கிற... காளை மாட்டை மனதில் வைத்தே, ‘என் கொம்பு யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது’ என்று அன்னாள் உணர்ச்சிபொங்க சொல்லியிருப்பார். வேறு வார்த்தைகளில், ‘யெகோவாவே, என்னை வலுப்படுத்தும்’ என்றே அன்னாள் சொன்னார்.—1 சாமுவேல் 2:1.
◼ கடவுளால் ‘அபிஷேகம்பண்ணப்பட்டவர்’ பற்றி அன்னாள் சொன்ன வார்த்தைகள் தீர்க்கதரிசன அர்த்தமுடையவை. இந்தப் பதம் “மேசியா” என்றும் பைபிளில் குறிப்பிடப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் கடவுளால் அபிஷேகம்பண்ணப்படும் அரசரைக் குறிப்பதற்கு இந்த வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அன்னாள்தான்.—1 சாமுவேல் 2:10.
◼ சுமார் 1,000 வருடங்களுக்குப் பிறகு, இயேசுவின் தாய் மரியாள் யெகோவாவைத் துதித்தபோது, அன்னாளுக்கு இருந்த உணர்வுகளில் சிலவற்றைத் தன்னுடைய சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.—லூக்கா 1:46-55.
[பக்கம் 26-ன் படம்]
குழந்தை பாக்கியம் இல்லாததை நினைத்து அன்னாள் மிகவும் வேதனைப்பட்டார்; பெனின்னாளோ வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல அன்னாளைக் கொடுமைப்படுத்தினாள்
[பக்கம் 26, 27-ன் படம்]
ஏலி தப்புக்கணக்குப் போட்டபோதிலும் அன்னாள் அதைப் பெரிதுபடுத்தவில்லை
[பக்கம் 27-ன் படம்]
அன்னாளைப் போல் மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டுவீர்களா?