Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் இந்தளவு வேதனை?

ஏன் இந்தளவு வேதனை?

ஏன் இந்தளவு வேதனை... அவற்றை நீக்க மனிதன் எடுத்த முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன... என்பதையெல்லாம் புரிந்துகொள்ள அவற்றின் உண்மையான காரணங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். காரணங்கள் வேறுபட்டாலும், புரிந்துகொள்ள கடினமாக இருந்தாலும், அவற்றைக் கண்டுபிடிக்க கடவுளுடைய வார்த்தையான பைபிள் நமக்குப் பேருதவி செய்கிறது. அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். ஏன் இந்தளவு வேதனை என்பதற்கு ஐந்து முக்கியமான காரணங்களை நாம் இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். வேதனைகளுக்கான உண்மைக் காரணங்களை நன்கு புரிந்துகொள்ள பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது என்பதற்குக் கூர்ந்த கவனம் செலுத்தும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.—2 தீமோத்தேயு 3:16.

கெட்ட ஆட்சியின் கெட்ட விளைவுகள்

“துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்” என்கிறது பைபிள்.—நீதிமொழிகள் 29:2.

மனித சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால்... சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றியும், அந்த ஆட்சியின்கீழ் மக்கள் அனுபவித்த கடும் வேதனைகளைப் பற்றியும்தான் பக்கத்திற்குப் பக்கம் பார்ப்போம். ஆனால், எல்லா ஆட்சியாளர்களும் அப்படி இல்லை. சிலர் ஆட்சிக்கு வந்ததும் தங்கள் குடிமக்களுக்கு நன்மை செய்ய விரும்பினார்கள். ஆனால், உள்நாட்டுக் கலவரங்கள்... பதவிக்கான போட்டா போட்டிகள்... காரணமாக அவர்களுடைய முயற்சிகள் தவிடுபொடியாயின. வேறு சிலர், அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களைச் சுரண்டி தங்கள் கஜானாக்களை நிரப்பினார்கள். “தோல்வியடைந்த முயற்சிகளும், நிறைவேறாத ஆசைகளுமே மனிதனுடைய சோக சரித்திரம்” என்று அமெரிக்க உள்நாட்டு (முன்னாள்) செயலர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டார்.

பைபிள் இப்படிக் குறிப்பிடுகிறது: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) வாழ்க்கைப் பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானமும் தொலைநோக்குப் பார்வையும் அபூரண மனிதர்களுக்கு இல்லை. அப்படியிருக்கும்போது, தங்கள் சொந்த வாழ்க்கையைச் சரியாக நடத்த முடியாத ஆட்சியாளர்கள் எப்படித் தங்கள் குடிமக்களைச் சரியாக வழிநடத்த முடியும்? இப்போது உங்களுக்குப் புரிகிறதா... மனித ஆட்சியாளர்களால் வேதனைக்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்று? ஆம், கெட்ட ஆட்சியே வேதனைகளுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது!

பொய் மதத்தின் தீய செல்வாக்கு

‘நீங்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ என்று இயேசு சொன்னார்.—யோவான் 13:35.

அன்பு... ஐக்கியம்... இவற்றைப் பற்றித்தான் உலகெங்குமுள்ள மதத்தலைவர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். ஆனால், பாரபட்ச மனப்பான்மையைத் தகர்த்தெறியும் அளவுக்கு தங்கள் மதத்தினரிடையே அன்பை வளர்க்க அவர்களால் முடியவில்லை. மதம் என்பது மக்களுக்கு இடையேயும் தேசங்களுக்கு இடையேயும் அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக, பிரிவினையையும் மதவெறியையும் சண்டை சச்சரவையுமே பெரும்பாலும் வளர்த்துவிடுகிறது. இறையியலாளர் ஹான்ஸ் கூங் என்பவர் கிறிஸ்தவமும் உலக மதங்களும் என்ற தன் ஆங்கில புத்தகத்தின் முடிவில் இவ்வாறு எழுதினார்: “இதுவரை நடந்த அரசியல் போராட்டங்களிலேயே மிகவும் வெறித்தனமான, படு பயங்கரமான போராட்டங்கள் மதத்தின் செல்வாக்கினாலும் தூண்டுதலினாலும் அங்கீகாரத்தினாலும்தான் அரங்கேறியிருக்கின்றன.”

இது ஒருபுறமிருக்க, திருமணத்திற்கு முன்னர் உறவுகொள்வதையும், மணத்துணை அல்லாத ஒருவருடன் உறவுகொள்வதையும், ஒரே பாலினரோடு உறவுகொள்வதையும் மத குருமார்கள் அநேகர் வெளிப்படையாக அங்கீகரித்திருக்கிறார்கள். விளைவு? ஏகப்பட்ட நோய்கள், கருக்கலைப்புகள், தேவையற்ற கருத்தரிப்புகள், குலைந்துபோன குடும்பங்கள், சொல்ல முடியாத சோகங்கள், வலிகள்.

பாவ இயல்பு, சுயநல ஆசைகள்

“ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது.”—யாக்கோபு 1:14, 15.

நம்முடைய பாவ இயல்பின் காரணமாக நாம் எல்லோருமே பல தவறுகள் செய்துவிடுகிறோம்; எனவே, ‘நமது உடல் விரும்பியவற்றை’ செய்யாமல் இருப்பதற்கு நாம் போராட வேண்டியிருக்கிறது. (எபேசியர் 2:3) அதுவும், கெட்ட ஆசைக்குத் தீனிபோடுகிற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்ப்படும்போது ரொம்பவே போராட வேண்டியிருக்கிறது. அப்படியொரு கெட்ட ஆசைக்கு நாம் அடிபணிந்தால், விளைவு விபரீதமாக இருக்கும்.

“காம வேட்கை, கட்டுக்கடங்கா ஆசை, சுயநல விருப்பம், பேராசை, பதவி வெறி... இவையெல்லாம்தான் ஏகப்பட்ட வேதனைகளுக்குக் காரணம்” என்று பி.டி. மேத்தா என்ற நூலாசிரியர் எழுதினார். மதுபானம், போதைப்பொருள், சூதாட்டம், பாலுறவு போன்றவற்றுக்கு அடிமைகளாக ஆனதுதான் சமுதாயத்திலுள்ள “பெரிய மனிதர்களை” நாசமாக்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் பெருமளவு வேதனை உண்டாக்கியிருக்கிறது. மனிதனின் பாவ இயல்பை வைத்துப் பார்க்கும்போது, “இதுவரை படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்ற பைபிளின் கூற்று உண்மை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.—ரோமர் 8:22.

பேய்களின் சக்தி

சாத்தானை “இந்த உலகத்தின் கடவுள்” எனவும், பேய்கள் என்றழைக்கப்படுகிற சக்திவாய்ந்த பொல்லாத தூதர்கள் அவனோடு கூட்டுச் சேர்ந்திருக்கின்றன எனவும் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது.—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:9.

மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும் மோசம்போக்குவதிலும் சாத்தானைப் போலவே பேய்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அப்போஸ்தலன் பவுல் இதை ஆமோதிக்கும் விதத்தில் இப்படிச் சொன்னார்: “மனிதர்களோடு அல்ல, நிர்வாகங்களோடும், அதிகாரங்களோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்திலுள்ள பொல்லாத தூதர் கூட்டத்தோடும் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.”—எபேசியர் 6:12.

மக்களைத் துன்புறுத்துவதில் பேய்கள் கிளர்ச்சி அடைகின்றன, என்றாலும், அவற்றின் முக்கியக் குறிக்கோள் அது அல்ல. மிக உன்னதமான கடவுளான யெகோவாவிடமிருந்து மக்களைத் திசைதிருப்ப வேண்டுமென்பதுதான் அவற்றின் ஆசை. (சங்கீதம் 83:17) மக்களை மோசம்போக்குவதற்கும் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் ஜோதிடம், மாயமந்திரம், பில்லிசூனியம், குறிசொல்லுதல் போன்றவற்றை அவை பயன்படுத்துகின்றன. அதனால்தான், நாம் அந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாதபடி யெகோவா நமக்கு எச்சரிப்பு விடுக்கிறார்; எச்சரிப்புக்குச் செவிசாய்க்கிற எல்லோருக்கும் பாதுகாப்பு தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.—யாக்கோபு 4:7.

நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், பைபிள் இப்படி முன்னறிவித்தது: “கடைசி நாட்களில் சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள்.”

நாம் வாழும் இந்தக் காலத்தை எது கடினமாக்குகிறது என்பதைக் குறிப்பிடும்போது, “மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, . . . பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆக, நாம் இன்று பார்க்கிற எல்லா வேதனைகளுக்கும் முக்கியக் காரணம், நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதே.—2 தீமோத்தேயு 3:1-4.

நாம் இப்போது சிந்தித்த எல்லாக் காரணங்களையும் வைத்துப் பார்க்கும்போது, மனிதர்களுக்கு நல்லெண்ணம் இருந்தாலும் அவர்களால் ஏன் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லவா? அப்படியானால், உதவிக்காக நாம் யாரை நாட வேண்டும்? நம்முடைய படைப்பாளரின் உதவியை நாட வேண்டும்; ‘பிசாசின் [மற்றும் அவனுடைய கூட்டாளிகளின்] செயல்களை ஒழிக்கப்போவதாக’ அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (1 யோவான் 3:8) வேதனைகளுக்குக் காரணமான எல்லாவற்றையும் கடவுள் எப்படித் தகர்த்தெறியப்போகிறார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (w13-E 09/01)