வாசகரின் கேள்வி
கடவுளை யார் படைத்தது?
ஒரு அப்பா தன் ஏழு வயது மகனோடு இப்படிப் பேசுவதைக் கற்பனை செய்து பாருங்கள். “ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கடவுள் இந்த உலகத்தையும் அதுல இருக்கிற மரம், செடி, கொடி எல்லாத்தையும் படைச்சாரு. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் படைச்சாரு.” அவருடைய மகன் சற்று யோசித்துவிட்டு, “அப்படின்னா, கடவுளை யார் படைச்சது?” என்று கேட்கிறான்.
“கடவுளை யாருமே படைக்கல. அவருக்கு ஒரு ஆரம்பமே இல்லை” என்கிறார் அப்பா. தற்சமயத்திற்கு, அந்தப் பதிலைக் கேட்டு பிள்ளை திருப்தி அடைந்தாலும், அவன் வளர வளர அந்தக் கேள்வி அவனுடைய மனதை குடைந்துகொண்டேதான் இருக்கிறது. ‘கடவுளுக்கு ஆரம்பமே இல்லையா, அது எப்படி முடியும்? எல்லாத்துக்குமே ஒரு ஆரம்பம் இருக்கே. இந்தப் பிரபஞ்சத்துக்குக்கூட ஒரு ஆரம்பம் இருக்கே. அப்படின்னா கடவுளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கணுமே. அவரு எப்படி வந்தாரு?’ என்று யோசிக்கிறான்.
இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அந்த அப்பா கொடுத்த பதிலைத்தான் பைபிளும் கொடுக்கிறது. மோசே என்ற ஒருவர் எழுதினார்: “ஆண்டவரே, . . . பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (சங்கீதம் 90:1, 2) தீர்க்கதரிசியான ஏசாயாவும் இப்படிச் சொன்னார்: ‘உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்.’ (ஏசாயா 40:28, பொது மொழிபெயர்ப்பு) அவரைப் போலவே யூதாவும் தன் கடிதத்தில், கடவுள் ‘என்றென்றைக்கும்’ வாழ்வதாகச் சொன்னார்.—யூதா 25, ஈஸி டு ரீட் வர்ஷன்.
கடவுளை “நித்திய ராஜா” என்று இயேசுவின் சீடரான பவுலும் சொன்னார். (1 தீமோத்தேயு 1:17) அப்படியென்றால் கடவுள் என்றென்றுமாக இருந்திருக்கிறார். அவருக்கு ஆரம்பமே இல்லை. அதேசமயம் அவருக்கு முடிவும் இல்லை! (வெளிப்படுத்துதல் 1:8) அவர் என்றென்றும் வாழ்வதால் அவரை சர்வ சக்தியுள்ள கடவுள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது? யெகோவா தேவனோடு ஒப்பிடும்போது, நாம் சொற்ப காலம்தான் உயிர்வாழ்கிறோம். அதனால் நேரத்தையும் காலத்தையும் யெகோவா பார்ப்பதுபோல் நம்மால் பார்க்க முடியாது. அவர் என்றென்றும் வாழ்வதால் ஆயிரம் வருடங்கள் அவருக்கு ஒரேவொரு நாள் போல் இருக்கிறது. (2 பேதுரு 3:8) இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு வெட்டுக்கிளி 50 நாட்களே வாழும். மக்கள் 70 அல்லது 80 வருடங்கள் வாழ்வதை அதனால் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயம் முடியாது! எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்கு முன் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. நாம் சிந்திக்கும் விதத்தை கடவுள் சிந்திக்கும் விதத்தோடு ஒப்பிடவே முடியாது. (ஏசாயா 40:22; 55:8, 9) அப்படியென்றால் நம்மால் யெகோவாவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது!
கடவுள் என்றென்றும் வாழ்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அதுதான் உண்மை! ஏனென்றால், கடவுளை ஒருவர் படைத்திருந்தால் அவர்தான் படைப்பாளராக இருக்க வேண்டும். ஆனால் யெகோவாதான் ‘எல்லாவற்றையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) அதுமட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததென்று நமக்குத் தெரியும். (ஆதியாகமம் 1:1, 2) அவையெல்லாம் எப்படித் தோன்றியிருக்கும்? நிச்சயம் அவற்றை ஒருவர் படைத்திருக்க வேண்டும்; அவையெல்லாம் தோன்றுவதற்கு முன் அதைப் படைத்த ஒருவர் இருந்திருக்க வேண்டும். முதல் படைப்பான அவருடைய மகனும், தேவதூதர்களும் படைக்கப்படுவதற்கு முன்பே கடவுள் வாழ்ந்திருக்க வேண்டும். (யோபு 38:4, 7; கொலோசெயர் 1:15) அப்படியென்றால், அவர் ஆரம்பத்தில் தனியாக இருந்திருக்கிறார். அவருக்கு முன் யாரும், எதுவும் இருந்ததில்லை; யாரும் அவரைப் படைக்கவும் இல்லை.
நாம் உயிர் வாழ்வதையும் இந்தப் பிரபஞ்சம் அருமையாகச் செயல்படுவதையும் பார்க்கும்போது நிச்சயம் இதையெல்லாம் படைத்த ஒருவர் இருக்கிறார், அவர் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது பளிச்செனத் தெரிகிறது. எனவே, நம்முடைய பிரபஞ்சத்தை இயங்க வைப்பவர், அவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை உண்டுபண்ணினவர், என்றென்றுமாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அவர் மட்டுமே எல்லோருக்கும் உயிர் கொடுத்திருக்க முடியும்.—யோபு 33:4.▪ (w14-E 08/01)