Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளை எப்படி கண்டிப்பது?

பிள்ளைகளை எப்படி கண்டிப்பது?

“எனக்கு பயங்கர டென்ஷனா இருந்தது. போற வர்ற வண்டியோட சத்தத்தை கேக்கும் போதெல்லாம் ஜார்டன்தான் வந்துட்டானான்னு பாத்தேன். வீட்டுக்கு இந்த நேரத்துக்குள்ள வரணும்னு சொல்லியும் ஜார்டன் வரல. இதோட மூனாவது தடவ இப்படி செய்றான். அவன் எங்க இருக்கான், அவனுக்கு ஏதாவது ஆச்சா, ஏதாவது பிரச்சனையான்னு நான் இங்க தவிச்சுகிட்டு இருக்கேன். அத பத்தி அவனுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? நான் இருந்த கோபத்துல, அவன் வீட்டுக்குள்ள வந்தவுடனே, கன்னாபின்னான்னு திட்டலாம்னு இருந்தேன்.”—ஜார்ஜ்.

“திடீர்னு என்னோட பொண்ணு சத்தமா கத்துனா; எனக்கு பகீர்னு இருந்துச்சு. அவ அப்படியே தலைய புடிச்சு அழுதுகிட்டு இருந்தா. என்னென்னு பாத்தா, அவளோட தம்பி அவள நல்லா அடிச்சுட்டான்.”—நிக்கோல்.

“எங்க ஆறு வயசு மகள் நட்டாலி, அப்பாவி போல முகத்தை வெச்சுகிட்டு, ‘நான் ஒன்னும் மோதிரத்த திருடல; அத நான்தான் கண்டுபிடிச்சேன்’னு சொன்னா. அவ மறுபடியும் மறுபடியும் பொய் சொல்றான்னு எங்களுக்கு நல்லா தெரியும். அவ பொய் சொல்றத நெனச்சா எங்களால தாங்கவே முடியல; எங்களுக்கு அழுகையா வந்துது.”—ஸ்டீப்ஃன்.

பெற்றோராக நீங்களும் இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உங்கள் பிள்ளையைக் கண்டிப்பதா வேண்டாமா, அப்படிக் கண்டித்தால் எப்படிக் கண்டிக்க வேண்டும் போன்ற கேள்விகள் உங்கள் மனதில் வந்திருக்கிறதா?

கண்டிப்பு என்றால் என்ன?

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் “கண்டிப்பு” என்ற வார்த்தை, தண்டிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவது கிடையாது. கண்டிப்பது என்பது அறிவுறுத்துவது, கற்பிப்பது, புத்தி சொல்வது, திருத்துவது போன்றவற்றை அர்த்தப்படுத்துகிறது; மோசமாக அல்லது கொடூரமாக நடத்துவதைக் குறிப்பதில்லை.—நீதிமொழிகள் 4:1, 2.

பிள்ளைகளைக் கண்டிக்கும் விஷயத்தைத் தோட்டக்கலைக்கு ஒப்பிடலாம். செடி நன்றாக வளர்வதற்காகத் தோட்டக்காரர் மண்ணைப் பண்படுத்துவார், செடிக்குத் தண்ணீர் ஊற்றுவார், உரம் போடுவார், களைகளைப் பிடுங்குவார், பூச்சிகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்பார். செடி செழிப்பாக வளர, தோட்டக்காரர் இப்படிப் பல விதங்களில் அதைப் பராமரிப்பார். அதேபோல், பெற்றோரும் பிள்ளைகள்மீது பல விதங்களில் அக்கறை காட்டுகிறார்கள். செடி நன்றாக வளர்வதற்கு அதிலுள்ள தேவையில்லாத இலைகளை வெட்ட வேண்டியிருக்கும். அதேபோல் பிள்ளைகள் நல்ல விதத்தில் வளர அவர்களிடம் இருக்கும் கெட்ட பண்புகளை சிறு வயதிலேயே கிள்ளி எறிய வேண்டியிருக்கும். செடியில் தேவையில்லாத இலைகளை வெட்டும்போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த செடி பாழாகிவிடும். அதேபோல், பிள்ளைகளைக் கண்டிக்கும் விஷயத்தில் பெற்றோர் கவனமாகவும், அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில், பெற்றோருக்கு யெகோவா சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார் (பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா). தம்மை வணங்குபவர்களை அவர் சிறந்த விதத்தில் கண்டித்துத் திருத்துகிறார்; அதனால்தான் அவரை வணங்குபவர்கள் ‘கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புகிறார்கள்.’ (நீதிமொழிகள் 12:1, பொது மொழிபெயர்ப்பு) தங்களுக்குக் கொடுக்கப்படும் ‘புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, அதை விட்டுவிடாமல்’ இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 4:13) யெகோவாவைப் போலவே நீங்களும் உங்கள் பிள்ளையைக் கண்டித்தால், அவர்கள் அதை  மனதார ஏற்றுக்கொள்வார்கள். யெகோவா எப்படிக் கண்டித்துத் திருத்துகிறார்? கண்டிக்கும்போது அவர் (1) அன்பாக இருக்கிறார், (2) நியாயமாக நடந்துகொள்கிறார், (3) சொன்னபடி செய்கிறார்.

அன்பாக இருங்கள்

கடவுள் தம்மை வணங்குபவர்களைக் கண்டிப்பதற்கான முக்கிய காரணம், அன்புதான். “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல [கண்டிப்பதுபோல], கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 3:12) யெகோவா ‘இரக்கமும் தயவும் உள்ள தேவன், அவர் எளிதில் கோபம் கொள்ள மாட்டார்’ என்றும் சொல்கிறது. (யாத்திராகமம் 34:6, ஈஸி டு ரீட் வர்ஷன்) அதனால்தான், அவர் ஒருபோதும் மோசமாகவோ கொடூரமாகவோ நடந்துகொள்வதில்லை. அதேசமயம் கடுகடுப்பாகப் பேசிக்கொண்டும், எப்போதும் தப்பு கண்டுபிடித்துக்கொண்டும், குத்தலாகப் பேசிக்கொண்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் மற்றவர்களைக் காயப்படுத்தும்.—நீதிமொழிகள் 12:18.

கேளுங்கள்

பெற்றோரால் எப்போதும் கடவுளைப் போல பொறுமையாக இருக்க முடியாதுதான். சில நேரங்களில், உங்கள் பொறுமை எல்லையைக் கடந்துவிடும். கோபமாக அல்லது எரிச்சலாக இருக்கும்போது பிள்ளைகளைக் கண்டித்தால் அது அளவுக்கு மிஞ்சி போய்விடும், கொடூரமாக ஆகிவிடும், கண்டிப்பதற்கான நோக்கமும் வீணாகிவிடும். அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. கோபத்தில் உங்கள் பிள்ளையைக் கண்டித்தால் உங்கள் பொறுமையை இழந்துவிட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்பாக, பொறுமையாக உங்கள் பிள்ளைகளைக் கண்டித்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஜார்ஜ் மற்றும் நிக்கோல் எப்படி நடந்துகொண்டார்கள் என்று கவனியுங்கள்.

ஜெபியுங்கள்

“எங்க பையன் ஜார்டன் வீட்டுக்கு வந்தப்போ, நானும் என் மனைவியும் பயங்கர கோபத்துல இருந்தோம். ஆனா அவன் சொன்னதெல்லாம் பொறுமையா கேட்டோம். ராத்திரி ரொம்ப லேட் ஆயிட்டதுனால, இத பத்தி காலையில பேசிக்கலாம்னு முடிவு பண்ணுனோம். நாங்க மூனு பேரும் சேர்ந்து ஜெபம் செஞ்சுட்டு தூங்க போயிட்டோம். இது, அடுத்த நாள் எங்க பையன்கிட்ட பொறுமையா பேசுறத்தும், நாங்க சொல்றத அவன் புரிஞ்சுகிறதுக்கும் உதவியா இருந்துச்சு. அவன் செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டது மட்டும் இல்லாம இனிமே நாங்க சொல்றபடி செய்றதாவும் சொன்னான். கோபத்துல வெடிக்காம, பொறுமையா பேசுறது எவ்ளோ நல்லதுன்னு அப்போத்தான் எங்களுக்கு புரிஞ்சது. பிள்ளைங்க சொல்லவர்றதை பொறுமையா கேட்டோம்னா, அது எப்போவும் பிரயோஜனமா இருக்கும்.”—ஜார்ஜ்.

பேசுங்கள்

நிக்கோல் சொல்கிறார்: “என்னோட பொண்ணு தலைய புடிச்சிகிட்டு அழுததை பாத்தப்போ எனக்கு கோபம் தலைக்கேறுச்சு. ஆனா உடனே கோபத்த காட்டாமா என் பையனை அவனோட ரூம்முக்கு அனுப்பிட்டேன். என்னோட கோபம் தணிஞ்சதுக்கு அப்புறம், இந்த மாதிரி சண்டை போடுறது எல்லாம் தப்புன்னு ரொம்ப கண்டிப்பா சொன்னேன். அவனோட அக்கா எந்தளவு வலியில துடிச்சிருப்பான்னும் புரிய வெச்சேன். இப்படி அவன்கிட்ட நடந்துகிட்டதுனால, அவன் செஞ்ச தப்புக்கு அக்காகிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவள கட்டிப்பிடிச்சுகிட்டான்.”

 நியாயமாக நடந்துகொள்ளுங்கள்

யெகோவா எப்போதும் தம் மக்களை அளவுக்கு மிஞ்சி தண்டிப்பதில்லை; ‘மட்டாய்த் தண்டிக்கிறார்.’ (எரேமியா 30:11; 46:28) ஒருவர் தவறு செய்யும்போது, அதை ஏன் செய்தார், எதற்காகச் செய்தார் என்று எல்லா விஷயங்களையும் யெகோவா பார்க்கிறார்; பளிச்செனத் தெரியாத விஷயங்களையும்கூட அவர் பார்க்கிறார். நீங்களும் யெகோவாவை எப்படிப் பின்பற்றலாம்? ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஸ்டீப்ஃன் சொல்கிறார்: “மோதிரத்த திருடலன்னு நட்டாலி திரும்ப திரும்ப பொய் சொன்னது எங்களுக்கு கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா அவளோட வயசையும் அந்த வயசுக்கு இருக்கிற பக்குவத்தையும் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சோம்.”

நிக்கோலுடைய கணவர் ராபர்ட்டும் தன் பிள்ளையின் சூழ்நிலையை யோசித்துப் பார்க்கிறார். பிள்ளைகள் தவறு செய்யும்போது, அவர் இப்படிக் கேட்டுக்கொள்கிறார்: ‘பிள்ளைங்க இந்த தப்ப முதல் தடவை செய்றாங்களா இல்ல திரும்ப திரும்ப செஞ்சுட்டு இருக்காங்களா? அவங்களுக்கு உடம்பு சரியில்லையா இல்ல களைப்பா இருக்காங்களா? இல்லன்னா வேற ஏதாவது பிரச்சினையா?’

பைபிள் எழுத்தாளரான பவுல் சொல்கிறார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன்.” எனவே, பிள்ளைகள் குழந்தைத்தனமான குணங்களைத்தான் காட்டுவார்கள் என்பதை நியாயமாக நடந்துகொள்கிற எந்தப் பெற்றோரும் புரிந்துகொள்வார்கள்; அவர்களைப் பெரியவர்கள்போல் பார்க்க மாட்டார்கள். (1 கொரிந்தியர் 13:11) ராபர்ட் சொல்கிறார்: “சின்ன வயசுல நான் எப்படி இருந்தேன், என்ன செஞ்சேன்னு யோசிச்சு பாப்பேன். உணர்ச்சிவசப்படாம எதார்த்தமா இருக்கிறதுக்கு இது உதவியா இருந்துச்சு.”

பிள்ளைகளிடம் அளவுக்கு மிஞ்சி எதிர்பார்க்காமல் இருப்பது முக்கியம். அதேசமயத்தில், அவர்கள் தவறு செய்யும்போது அதைக் கண்டுகொள்ளாமலும் கண்டித்துத் திருத்தாமலும் இருந்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளுடைய திறமைகளையும், வரையறைகளையும், சூழ்நிலையையும் யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அவர்களை அன்பாகவும் நியாயமாகவும் கண்டிப்பீர்கள்.

சொன்னபடி செய்யுங்கள்

“நான் யெகோவா, நான் மாறாதவர்” என்று கடவுள் சொல்கிறார். (மல்கியா 3:6, NW) இந்த உண்மையைத் தெரிந்திருப்பது அவருடைய மக்களுக்கு உதவியாக இருக்கிறது. கண்டித்துத் திருத்தும் விஷயத்தில் பெற்றோர் மாறாமல் இருந்தால்தான் பிள்ளைகள் பயனடைவார்கள். தவறு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று சொன்னீர்களோ அதைக் கொடுங்கள். நீங்கள் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருந்தால், பிள்ளைகள் வெறுப்படைந்து, குழம்பிப் போவார்கள்.

“நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். இந்த வார்த்தைகளை, பிள்ளை வளர்க்கும் விஷயத்திலும் பொறுத்தலாம். (மத்தேயு 5:37) தவறு செய்யும்போது என்ன தண்டனை கொடுப்பதாகச் சொல்லி இருந்தீர்களோ, அதை கண்டிப்பாகக் கொடுங்கள். சும்மா பயமுறுத்துவதற்காக தண்டனை கொடுப்பதாகச் சொல்லி அவர்களை மிரட்டாதீர்கள்.

பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்தும் விஷயத்தில், கணவனும் மனைவியும் ஒத்துப்போக வேண்டும். அதற்கு அவர்களுக்குள் நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டும். ராபர்ட் சொல்கிறார்: “ஒரு விஷயத்த வேண்டாம்னு பிள்ளைங்ககிட்ட என் மனைவி ஏற்கெனவே சொல்லியிருப்பா. பிள்ளைங்க நைஸா என்கிட்ட சம்மதம் வாங்கிடுவாங்க. ஆனா, என் மனைவி சொன்னது எனக்கு தெரிய வரும்போது அவ வேண்டாம்னு சொன்ன விஷயத்த நானும் வேண்டாம்னு சொல்லிடுவேன்.” ஒரு விஷயத்தில் எப்படித் தீர்மானம் எடுப்பது என்று கணவன் மனைவிக்கு இடையே வித்தியாசமான கருத்து இருந்தால், அதைப் பற்றி பிள்ளைகள்முன் பேசாமல் இருவரும் தனியே பேசி ஒரே முடிவை எடுக்க வேண்டும்.

கண்டிப்பு ஏன் அவசியம்?

கண்டிக்கும் விஷயத்தில் யெகோவா அன்பாக, நியாயமாக, சொன்னபடி செய்பவராக இருக்கிறார். நீங்களும் அவரைப் போல நடந்துகொண்டால் உங்கள் பிள்ளைகள் பயனடைவார்கள். பிள்ளைகளுக்கு அன்பாக ஆலோசனை கொடுங்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பக்குவமுள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, சமநிலையைக் காட்டுபவர்களாக இருப்பார்கள். அதனால்தான், “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 22:6. ▪ (w14-E 07/01)