அதிகாரம் 138
கடவுளுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து
-
கடவுளுடைய வலது பக்கத்தில் இயேசு உட்காருகிறார்
-
சவுல் ஒரு சீஷராகிறார்
-
நாம் சந்தோஷப்பட காரணம் இருக்கிறது
இயேசு பரலோகத்துக்குப் போய் பத்து நாட்களுக்குப் பிறகு, பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது. அவர் பரலோகத்தில் இருப்பதை இது காட்டியது. சீக்கிரத்திலேயே, உண்மையோடு பிரசங்கித்ததற்காக சீஷராகிய ஸ்தேவான் கல்லால் அடிக்கப்பட்டார். அதற்குச் சற்று முன்பு, “அதோ! வானம் திறந்திருப்பதையும் மனிதகுமாரன் கடவுளுடைய வலது பக்கத்தில் நிற்பதையும் பார்க்கிறேன்” என்று சொன்னார்; இதுவும் இயேசு பரலோகத்தில் இருப்பதை நிரூபித்தது.—அப்போஸ்தலர் 7:56.
இயேசு பரலோகத்தில் தன்னுடைய தகப்பனோடு இருக்கும்போது, கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட கட்டளைக்காகக் காத்திருப்பார். ‘யெகோவா என் எஜமான் [இயேசுவிடம்], “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’ என கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு தாவீது எழுதினார். காத்திருக்க வேண்டிய நேரம் முடிந்த பிறகு, ‘[அவருடைய] எதிரிகளின் நடுவே அவர் ஆட்சி செய்வார்.’ (சங்கீதம் 110:1, 2) எதிரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருக்கும்போது இயேசு பரலோகத்தில் என்ன செய்வார்?
கி.பி. 33-ஆம் வருஷம், பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்தவ சபை ஆரம்பமானது. கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களைப் பரலோகத்திலிருந்து இயேசு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். (கொலோசெயர் 1:13) பிரசங்க வேலையில் அவர்களை வழிநடத்தினார். எதிர்காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கப்போகிற ஒரு பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர்களைத் தயார்படுத்தினார். ஏனென்றால், மரணம்வரை உண்மையோடு இருப்பவர்கள், பிற்பாடு உயிரோடு எழுப்பப்பட்டு, இயேசுவுடன் சேர்ந்து ஆட்சி செய்கிற பொறுப்பைப் பெறுவார்கள்.
அப்படி ராஜாவாக ஆட்சி செய்யப்போகிற ஆட்களில் சவுலும் ஒருவர். அவருடைய ரோமப் பெயர் பவுல். இந்தப் பெயரைச் சொன்னால்தான் நிறைய பேருக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு யூதர். அவர் ரொம்பக் காலமாக, திருச்சட்டத்தை வைராக்கியத்தோடு பின்பற்றிவந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களின் பேச்சைக் கண்மூடித்தனமாக நம்பியதால், ஸ்தேவானைக் கல்லால் அடித்து கொல்வதற்கு சவுலும் உடந்தையாக இருந்தார். “எஜமானின் சீஷர்களை . . . மிரட்டிக்கொண்டும் கொல்லத் துடித்துக்கொண்டும்” இருந்தார். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கு தலைமைக் குருவான காய்பா அவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். அதனால், சவுல் தமஸ்குவுக்குப் புறப்பட்டார். (அப்போஸ்தலர் 7:58; 9:1) அவர் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு ஒளி அவரைச் சுற்றிலும் பிரகாசித்தது. உடனே, அவர் தரையில் விழுந்தார்.
அப்போது, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அப்போது அவர், “எஜமானே, நீங்கள் யார்?” என்று கேட்டார். உடனே, “நீ துன்புறுத்துகிற இயேசு நான்தான்” என்று பதில் வந்தது.—அப்போஸ்தலர் 9:4, 5.
தமஸ்கு நகரத்துக்குள் போய், கூடுதலான தகவல் கிடைக்கும்வரை காத்திருக்கும்படி சவுலிடம் இயேசு சொன்னார். பிரகாசமான அந்த ஒளியைப் பார்த்த பிறகு, சவுலுக்குக் கண் தெரியாமல் போய்விட்டது. அவரோடு வந்தவர்கள் அவருடைய கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போனார்கள். தமஸ்குவில் அனனியா என்ற சீஷருக்கு இயேசு தரிசனமாகி, ஒரு முகவரியைக் கொடுத்தார். அந்த இடத்துக்குப் போய், சவுலைக் கண்டுபிடிக்கும்படி சொன்னார். அதைக் கேட்டு அனனியா தயங்கினார். ஆனால் இயேசு, “மற்ற தேசத்து மக்களுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று சொல்லி அவரைத் தைரியப்படுத்தினார். அதற்குப் பிறகு சவுலுக்குப் பார்வை கிடைத்தது. அவர் தமஸ்குவில், “இயேசுதான் கடவுளுடைய மகன் என்று . . . பிரசங்கிக்க ஆரம்பித்தார்.”—இயேசு ஆரம்பித்த பிரசங்க வேலையை, அவருடைய துணையோடு பவுலும் மற்றவர்களும் செய்தார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்து கடவுள் ஆசீர்வதித்தார். தமஸ்குவுக்குப் போகிற வழியில் பவுலுக்கு இயேசு தரிசனமாகி 25 வருஷங்களுக்குப் பிறகு, ‘வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவிட்டது’ என்று பவுல் எழுதினார்.—கொலோசெயர் 1:23.
நிறைய வருஷங்களுக்குப் பிறகு, இயேசு தன் பாசத்துக்குரிய அப்போஸ்தலனான யோவானுக்கு வரிசையாக தரிசனங்களைக் காட்டினார். அவையெல்லாம் பைபிளில் இருக்கிற வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தத் தரிசனங்கள் மூலமாக, இயேசு ராஜாவாக வருவதை யோவான் பார்த்தார். இந்த விதத்தில், இயேசு வரும்வரை யோவான் உயிரோடு இருந்தார் என்று சொல்லலாம். (யோவான் 21:22) ‘கடவுளுடைய சக்தியால் நம் எஜமானுடைய நாளுக்கு [யோவான்] கொண்டுவரப்பட்டார்.’ (வெளிப்படுத்துதல் 1:10) அது எப்போது ஆரம்பமாகும்?
பைபிள் தீர்க்கதரிசனங்களைக் கவனமாகப் படிக்கும்போது, ‘எஜமானுடைய நாள்’ நம்முடைய காலத்தில் ஆரம்பமானதைத் தெரிந்துகொள்ளலாம். 1914-ல் முதல் உலகப் போர் ஆரம்பித்தது. அதற்குப் பிறகு வந்த வருஷங்களில், போர்களும், பயங்கரமான நோய்களும், பசி பட்டினியும், நிலநடுக்கங்களும் அதிகமாகியிருக்கின்றன. ‘முடிவை’ பற்றியும் தன்னுடைய ‘பிரசன்னத்தை’ பற்றியும் இயேசு கொடுத்த “அடையாளம்” பெரியளவில் நிறைவேறுவதை இவையும் மற்ற அத்தாட்சிகளும் காட்டுகின்றன. (மத்தேயு 24:3, 7, 8, 14) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி, ரோம பேரரசில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்போது பிரசங்கிக்கப்படுகிறது.
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு யோவான் இப்படி எழுதியிருக்கிறார்: “நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது! அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது! அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது!” (வெளிப்படுத்துதல் 12:10) எந்த அரசாங்கத்தைப் பற்றி இயேசு எல்லாருக்கும் பிரசங்கித்தாரோ, அந்த அரசாங்கம் இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது!
இயேசுவை உண்மையாகப் பின்பற்றுகிற எல்லாருக்கும் இந்தச் செய்தி சந்தோஷத்தைத் தருகிறது. “இதன் காரணமாக, பரலோகங்களே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷப்படுங்கள்! பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு! ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்” என்று யோவான் சொன்னதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 12:12.
இயேசு இப்போது தன்னுடைய தகப்பனின் வலது பக்கத்தில் காத்துக்கொண்டில்லை. அவர் இப்போது ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். சீக்கிரத்தில் தன்னுடைய எதிரிகள் எல்லாரையும் அவர் அழிப்பார். (எபிரெயர் 10:12, 13) அதற்குப் பிறகு, நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?