அதிகாரம் 21
நாசரேத் ஜெபக்கூடத்தில் இயேசு
-
ஏசாயா சுருளை இயேசு வாசிக்கிறார்
-
நாசரேத் மக்கள் இயேசுவைக் கொல்லப் பார்க்கிறார்கள்
இயேசு வந்ததால் நாசரேத்தில் ஒரே பரபரப்பு! அவர் யோவானிடம் ஞானஸ்நானம் எடுப்பதற்காக நாசரேத்திலிருந்து போய் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறது. அதுவரை, அவர் ஒரு தச்சர் என்றுதான் அந்த ஊர் மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போதோ, அவர் அற்புதங்கள் செய்கிறவர் என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால், நாசரேத்தில் இருக்கும் மக்கள் இயேசு தங்கள் ஊரிலும் அற்புதங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இயேசு தன்னுடைய வழக்கத்தின்படி, நாசரேத்தில் இருக்கிற ஜெபக்கூடத்துக்குப் போகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்று மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பொதுவாக, ஜெபக்கூடங்களில் நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஜெபம் செய்வார்கள். அதோடு, “ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெபக்கூடங்களில்” செய்யப்படுவது போல மோசேயின் புத்தகங்களிலிருந்து வாசிப்பார்கள். (அப்போஸ்தலர் 15:21) தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்தும் ஒருசில பகுதிகளை வாசிப்பார்கள். இப்போது, வாசிப்பதற்காக இயேசு எழுந்து நிற்கிறார். பல வருஷங்களாக அந்த ஜெபக்கூடத்துக்கு அவர் போயிருந்ததால், அங்கே வந்திருக்கிற நிறைய பேரை அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை அவரிடம் கொடுக்கிறார்கள். யெகோவாவின் சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற வசனத்தை அவர் எடுக்கிறார். இன்று நம்முடைய பைபிளில் அந்தப் பகுதி ஏசாயா 61:1, 2-ல் இருக்கிறது.
கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர், சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பார்; அதோடு, யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றிப் பிரசங்கிப்பார் என்று இயேசு வாசிக்கிறார். பிறகு, அங்கிருந்த பணியாளரிடம் சுருளைக் கொடுத்துவிட்டு உட்காருகிறார். எல்லாரும் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு, அவர் பேச ஆரம்பிக்கிறார். ஒருவேளை, அந்த வசனங்களைப் பற்றி அவர் விளக்கமாகப் பேசியிருக்கலாம். அந்தச் சமயத்தில்தான், “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிவிட்டது” என்று சொல்கிறார்.—லூக்கா 4:21.
அங்கிருக்கிற எல்லாரும் “அவர் பேசிய கனிவான வார்த்தைகளை” கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். பிறகு, “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். மற்ற இடங்களில் இயேசு அற்புதங்கள் செய்ததைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்ததால், தங்களுடைய ஊரிலும் அவர் அற்புதங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இயேசு அதைப் புரிந்துகொண்டு, “‘மருத்துவனே, நீயே உன்னைக் குணமாக்கிக்கொள்’ என்ற பழமொழியை நீங்கள் எனக்குப் பொருத்தி, ‘கப்பர்நகூமில் நீ செய்த காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். அவற்றை இங்கே உன்னுடைய சொந்த ஊரிலும் செய்’ என்று சொல்வீர்கள்” என்கிறார். (லூக்கா 4:22, 23) இயேசு முதலில் தன் சொந்த ஊரில்தான், தன் சொந்த மக்களுக்காகத்தான் அற்புதங்கள் செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் இயேசு தங்களை அவமானப்படுத்திவிட்டதாகவும் நினைத்திருக்கலாம்.
அவர்கள் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், இஸ்ரவேலின் சரித்திரத்தில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி அவர்களிடம் சொல்கிறார். எலியாவின் காலத்தில் இஸ்ரவேலில் நிறைய விதவைகள் இருந்தார்கள், ஆனால் அவர்களில் யாரிடமும் கடவுள் அவரை அனுப்பவில்லை. சீதோனுக்குப் பக்கத்தில் இருந்த சாறிபாத்தைச் சேர்ந்த ஒரு விதவையிடம்தான் அவரை அனுப்பினார். எலியா அவளுடைய மகனை அற்புதமாக உயிர்த்தெழுப்பினார். (1 ராஜாக்கள் 17:8-16) எலிசாவின் காலத்தில், இஸ்ரவேலில் நிறைய தொழுநோயாளிகள் இருந்தாலும், அவர் சீரியாவைச் சேர்ந்த நாகமானைத்தான் குணமாக்கினார்.—2 ராஜாக்கள் 5:1, 8-14.
இயேசு சொன்ன சரித்திரப் பதிவுகள் அந்த மக்களின் சுயநலத்தையும் விசுவாசக் குறைவையும் சுட்டிக்காட்டின. அதைக் கேட்டு மக்கள் என்ன செய்கிறார்கள்? ஜெபக்கூடத்தில் இருக்கிற ஆட்கள் கோபத்தோடு எழுந்து, இயேசுவை வேகவேகமாக நகரத்துக்கு வெளியே கொண்டுபோகிறார்கள். நாசரேத் நகரம் அமைந்திருக்கிற மலையின் விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். ஆனால், இயேசு அவர்களிடமிருந்து தப்பித்துவிடுகிறார். பிறகு, கலிலேயா கடலின் வடமேற்கு கரையில் இருக்கிற கப்பர்நகூமுக்குக் கிளம்பிப் போகிறார்.