ஒரு மாணவனின் குழப்பம்
பீட்டர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறான். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு எப்படி அறிவியல்பூர்வமான சிந்தனைக்கு வித்திட்டது, எப்படி மூடநம்பிக்கைகளிலிருந்து மனிதனை விடுதலை செய்தது என்பதை அவனுடைய மதிப்புக்குரிய ஆசிரியை அப்போதுதான் விளக்கினார். இப்போது, இந்த விஷயத்தைப் பற்றி மாணவர்களுடைய கருத்துக்களைக் கேட்கிறார்.
பீட்டருக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலை. ஏனென்றால், பூமியையும் அதிலுள்ள அனைத்து உயிரினங்களையும் கடவுள் படைத்தார் என அவனுடைய பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; அதோடு, படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதுதான் சரியானது... பரிணாமம் வெறுமனே ஒரு கோட்பாடு, அதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை... என்றும் கற்பித்திருக்கிறார்கள். பீட்டரின் ஆசிரியையும் சரி பெற்றோரும் சரி, அவனுக்குச் சரியானதைச் சொல்லித் தரவே விரும்புகிறார்கள். ஆனால், இப்போது பீட்டர் யார் சொல்வதை நம்ப வேண்டும்?
ஒவ்வொரு வருடமும், உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கலாம். பீட்டரும் அவனைப் போன்ற மாணவர்களும் என்ன செய்ய வேண்டும்? இந்த விஷயத்தைப் பற்றி அவர்களே யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? ஆம், பரிணாமத்திற்கான அத்தாட்சியையும் படைப்பிற்கான அத்தாட்சியையும் ஆராய்ந்து பார்த்து, எதை நம்புவது என்பதை அவர்களே தீர்மானிப்பது அவசியம்.
சொல்லப்போனால், மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பிவிடக்கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று பைபிள் எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். (நீதிமொழிகள் 14:15) கிறிஸ்தவர்கள் “சிந்திக்கும் திறனைப்” பயன்படுத்த வேண்டும் என்றும், தங்களுக்குக் கற்பிக்கப்படும் விஷயங்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பைபிள் அவர்களை உந்துவிக்கிறது.—ரோமர் 12:1, 2.
படைப்பைப் பற்றி பள்ளிகளில் கற்பிக்க வேண்டுமென விரும்புகிற மதப் பிரிவுகளின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்தச் சிற்றேடு தயாரிக்கப்படவில்லை. உயிர் தானாகத் தோன்றியது என்றும், படைப்பைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை என்றும் அடித்துச் சொல்கிறவர்களின் கருத்துக்களை ஆராய்வதே இந்தச் சிற்றேட்டின் நோக்கம்.
உயிருக்கு மிகவும் அடிப்படைக் கூறாக இருக்கும் செல்லைப் பற்றி நாம் இப்போது கூர்ந்து ஆராய்வோம். அப்படி ஆராயும்போது, செல்கள் உருவாகும் விதத்தைக் கண்டு நீங்கள் மலைத்துப்போவீர்கள். பரிணாமக் கோட்பாட்டிற்கு ஆதாரமாக இருக்கும் ஊகங்களை ஆராயவும் தூண்டப்படுவீர்கள்.
உயிர் படைக்கப்பட்டதா அல்லது பரிணமித்ததா?—இந்தக் கேள்வியை நாம் எல்லாருமே ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் எதிர்ப்படுவோம். ஒருவேளை இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே ஆழ்ந்து சிந்தித்திருக்கலாம். உயிர் படைக்கப்பட்டது என்பதை நம்புவதற்கு அநேகரைத் தூண்டிய அத்தாட்சிகள் சிலவற்றை இந்தச் சிற்றேட்டில் காணலாம்.