அதிகாரம் 22
நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது?
சிறுமி ஒருத்தி அவள் அம்மாவிடம், “ஸ்கூல் முடிந்தவுடனேயே வீட்டுக்கு வந்துவிடுகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அவள் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிவிட்டு, “டீச்சர்தான் ஸ்கூல் முடிந்த பிறகு இருக்க சொன்னாங்க” என்று அம்மாவிடம் சொல்லலாம். அப்படிச் சொல்வது சரியா?—
அல்லது ஒரு பையன் தன் அப்பாவிடம் “நான் வீட்டிற்குள் பந்தை உதைத்து விளையாடவே இல்லை” என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் அவன் பந்தை உதைத்து விளையாடியிருக்கலாம். ஆகவே அவன் அப்படி சொல்வது சரியா?—
எது சரி என்பதை பெரிய போதகர் காட்டியிருக்கிறார். ‘நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் சொல்லுங்கள். இதற்கும் அதிகமாக சொல்பவர்கள் பொல்லாதவர்கள்’ என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:37) இயேசு சொன்னதன் அர்த்தம் உனக்கு தெரியுமா?— நாம் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம்.
உண்மையை பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் ஒரு நிஜக் கதை பைபிளில் இருக்கிறது.
இயேசுவின் சீஷர்கள் என்று சொல்லிக்கொண்ட இரண்டு பேருடைய கதை அது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.இயேசு இறந்து இரண்டு மாதங்கள்கூட ஆகியிருக்காது. ரொம்ப தூரமாக இருந்த ஊர்களிலிருந்து நிறைய பேர் எருசலேமிற்கு வந்தார்கள். பெந்தெகொஸ்தே என்ற முக்கியமான யூத பண்டிகைக்காக அவர்கள் வந்தார்கள். அப்போது அப்போஸ்தலனாகிய பேதுரு அருமையான ஒரு பேச்சைக் கொடுத்தார். அதில் இயேசுவைப் பற்றி பேசினார். இறந்த அவரை யெகோவா உயிர்த்தெழுப்பியதையும் குறிப்பிட்டார். எருசலேமிற்கு வந்திருந்த நிறைய பேர் அப்போதுதான் முதன்முறையாக இயேசுவைப் பற்றி கற்றுக் கொண்டார்கள். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆகவே என்ன செய்தார்கள் தெரியுமா?
நினைத்ததைவிட இன்னும் அதிக நாட்கள் தங்கினார்கள். இதனால் கொஞ்ச நாட்களிலேயே சிலருடைய காசு தீர்ந்துபோனது. உணவும் வாங்க முடியவில்லை. எருசலேமிலிருந்த சீஷர்கள் இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார்கள். ஆகவே அநேகர் தங்களுக்கு சொந்தமான பொருட்களை விற்று அந்தப் பணத்தை இயேசுவின் அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்கள். அப்போஸ்தலர்கள் அந்தப் பணத்தை கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு கொடுத்தார்கள்.
அனனியா என்பவனும் அவனது மனைவி சப்பீராளும் எருசலேமிலிருந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்கு சொந்தமான
வயலை விற்றார்கள். அப்படி விற்கும்படி யாரும் அவர்களிடம் சொல்லவில்லை. தாங்களாகவே அந்த முடிவு எடுத்தார்கள். ஆனால் இயேசுவின் புதிய சீஷர்கள் மீது அன்பு இருந்ததால் அவர்கள் அதைச் செய்யவில்லை. தங்களை மேலானவர்களாக காட்டிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் அப்படி செய்தார்கள். ஆகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக எல்லா பணத்தையும் கொடுத்துவிடுவதாக சொல்ல முடிவு செய்தார்கள். ஆனால் உண்மையில் கொஞ்சத்தை மட்டுமே கொடுக்க நினைத்தார்கள். இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?—அனனியா அப்போஸ்தலர்களைப் பார்க்கச் சென்றான். அவர்களிடம் காசை ஒப்படைத்தான். ஆனால் அவன் எல்லா பணத்தையும் கொடுக்காதது கடவுளுக்குத் தெரியும். ஆகவே அனனியா நேர்மையாக இல்லை என்பதை அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு கடவுள் தெரியப்படுத்தினார்.
அதன் பிறகு பேதுரு இப்படி சொன்னார்: ‘அனனியாவே, சாத்தானுக்கு இடம் கொடுத்து ஏன் இப்படிச் செய்தாய்? அந்த வயல் உன்னுடையதாகத்தான் இருந்தது. அதை விற்க வேண்டிய கட்டாயம் உனக்கு இருக்கவில்லை. அதை விற்ற பின்பும், அந்தப் பணம் உனக்குத்தான் சொந்தமாக இருந்தது. அப்படி இருக்கும்போது அதில் ஒரு பங்கை மட்டும் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் கொடுத்ததாக ஏன் நடிக்கிறாய்? இதனால், நீ எங்களிடம் மட்டுமல்ல கடவுளிடமே பொய் சொன்னாய்.’
அது மிகப் பெரிய குற்றம். அனனியா பொய் சொன்னான்! தான் செய்ததாக சொன்னதை அவன் உண்மையில் செய்யவில்லை. அதை செய்ததாக வெறுமனே நடித்தான். அடுத்ததாக என்ன நடந்தது என்று பைபிள் சொல்கிறது.
‘பேதுரு பேசியதைக் கேட்டவுடனேயே அனனியா கீழே விழுந்து செத்துப்போனான்.’ ஆமாம், கடவுள் அவனை தண்டித்தார்! அதன் பிறகு அவனுடைய உடல் வெளியே கொண்டுபோகப்பட்டு புதைக்கப்பட்டது.சுமார் மூன்று மணிநேரத்திற்குப் பிறகு சப்பீராள் வந்தாள். தன் கணவனுக்கு என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆகவே, ‘வயலை இவ்வளவு பணத்திற்குத்தான் விற்றீர்களா?’ என்று பேதுரு கேட்டார்.
‘ஆமாம், இவ்வளவு பணத்திற்குத்தான் விற்றோம்’ என்று சப்பீராள் சொன்னாள். ஆனால் அது பொய்! வயலை விற்ற பணத்தில் கொஞ்சத்தை இருவரும் தங்களுக்காக வைத்திருந்தார்கள். ஆகவே சப்பீராளையும் கடவுள் சாகடித்தார்.—அப்போஸ்தலர் 5:1-11.
அனனியாவுக்கும் சப்பீராளுக்கும் ஏற்பட்ட முடிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— பொய் பேசுபவர்களை கடவுளுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்று கற்றுக்கொள்கிறோம். நாம் எப்போதுமே உண்மை பேச வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் பொய் பேசுவது தப்பில்லை என்று அநேகர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரியென்று நீ நினைக்கிறாயா?— இந்த உலகில் இருக்கும் எல்லா வியாதிக்கும் வேதனைக்கும் சாவுக்கும் காரணமே ஒரு பொய்தான் என்பது உனக்குத் தெரியுமா?—
முதல் பெண்ணாகிய ஏவாளிடம் சாத்தான் பொய் சொன்னான் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொன்ன கனியை சாப்பிட்டாலும் சாவு வராது என்று அவன் சொன்னான். ஏவாள் சாத்தானின் பேச்சை நம்பி அந்தக் கனியை சாப்பிட்டாள். ஆதாமையும் சாப்பிட வைத்தாள். அதனால் அவர்கள் பாவிகள் ஆனார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் பாவிகளாக பிறந்தார்கள். இப்படிப்பட்ட பாவத்தினால் அந்தப் பிள்ளைகள் எல்லாருக்கும் வேதனையும் சாவும் வந்தது. இந்த எல்லா பிரச்சினைகளும் எதனால் வந்தன?— ஒரு பொய்யினால் வந்தன.
சாத்தான் ‘ஒரு பொய்யன், பொய்க்கு தந்தை’ என்று இயேசு சொன்னதில் ஆச்சரியமே இல்லை. முதன்முதலில் பொய் பேசியது அவன்தான். யாராவது பொய் சொன்னால், அவன் சாத்தானை பின்பற்றுவதாக அர்த்தம். யோவான் 8:44.
எப்போதாவது பொய் சொல்லத் தோன்றினால் உடனடியாக இதை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.—பொய் சொல்ல வேண்டும் என்று எப்போது உனக்குத் தோன்றும்?— ஏதாவது தவறு செய்யும்போதுதானே தோன்றும்?— உதாரணத்திற்கு, நீ எதையாவது தெரியாமல் உடைத்திருக்கலாம். ஆனால் யாராவது கேட்கும்போது உன் அண்ணனோ அக்காவோதான் அதை உடைத்தார்கள் என்று சொல்லலாமா? அல்லது அது எப்படி உடைந்தது என்றே தெரியாதது போல் நடிக்கலாமா?—
ஒருவேளை நீ பாதி ஹோம்வொர்க்கை மட்டும் செய்திருக்கலாம். இருந்தாலும், எல்லாவற்றையும் முடித்துவிட்டதாக சொல்லலாமா?— அனனியாவையும் சப்பீராளையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அவர்கள் உண்மையை மறைத்தார்கள். அது மிகவும் தவறு என்பதை கடவுள் காட்டினார்; ஆமாம், அதற்காக கடவுள் அவர்களை சாகடித்தார்.
ஆகவே நாம் என்ன செய்தாலும் சரி, அதைப் பற்றி பொய் சொன்னால் பிரச்சினை இன்னும்தான் அதிகமாகும். உண்மைகளை மறைக்கவும் நாம் முயலக் கூடாது. ‘உண்மை பேசுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. ‘ஒருவரிடம் ஒருவர் பொய் பேசாதீர்கள்’ என்றும் சொல்கிறது. யெகோவா எப்போதுமே உண்மை பேசுகிறார். நாமும் உண்மை மட்டுமே பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—எபேசியர் 4:25; கொலோசெயர் 3:9.
நாம் எப்போதுமே உண்மை பேச வேண்டும். அதைத்தான் இந்த வசனங்கள் சொல்கின்றன: யாத்திராகமம் 20:16; நீதிமொழிகள் 6:16-19; 12:19; 14:5; 16:6; எபிரெயர் 4:13.