பேட்டி | ரக்கெல் ஹால்
ஒரு யூதப் பெண் தன்னுடைய மத நம்பிக்கைகளை ஏன் மறுபரிசீலனை செய்தார்?
ரக்கெல் ஹாலின் அம்மா ஒரு யூதப் பெண், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். யூத மதத்துக்கு மாறியிருந்தார். ரக்கெலின் அம்மாவழி தாத்தா பாட்டி, சீயோனிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1948-ல் இஸ்ரேலில் குடியேறினார்கள். அந்த வருஷத்தில்தான் இஸ்ரேல் ஒரு தனி நாடாக ஆனது. ரக்கெல் தன்னுடைய மத நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்தார். ஏன்? விழித்தெழு! பத்திரிகையின் நிருபரிடம் அவர் தந்த பேட்டி இதோ:
உங்கள பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?
நான் 1979-ல அமெரிக்காவுல பிறந்தேன். எனக்கு மூணு வயசானப்போ என்னோட அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செஞ்சுகிட்டாங்க. யூத மத நம்பிக்கைகள்படிதான் அம்மா என்னை வளர்த்தாங்க. என்னை யூத பள்ளிகள்ல படிக்க வெச்சாங்க. எனக்கு ஏழு வயசானப்போ, நாங்க இஸ்ரேலுக்கு குடிமாறி போனோம். அங்க ஒரு வருஷம் இருந்தோம். கிப்புட்ஸ் சமூகத்துல இருந்த ஒரு பள்ளியில நான் சேர்ந்தேன். அதுக்கு அப்புறம், அம்மாவும் நானும் மெக்சிகோவுக்கு குடிமாறி போனோம்.
அந்த பகுதியில எந்த ஜெபக்கூடமும் இல்ல. ஆனாலும், யூத பழக்கவழக்கங்கள நான் தொடர்ந்து கடைப்பிடிச்சேன். ஓய்வுநாள்ல மெழுகுவர்த்தி ஏத்துவேன், தோராவை வாசிப்பேன், சிதூர் அப்படிங்கற ஜெப புத்தகத்த வெச்சு ஜெபம் பண்ணுவேன். என்னோட மதம்தான் முதல்முதல்ல தோன்றுன மதம்னு என்கூட படிச்ச பிள்ளைங்ககிட்ட அடிக்கடி சொல்வேன். இயேசுவோட போதனைகளயும் ஊழியத்தயும் பத்தி சொல்ற புதிய ஏற்பாட்டை நான் படிச்சதே இல்ல. சொல்லப்போனா, அதை நான் படிக்கவே கூடாதுனு அம்மா சொல்லி வெச்சிருந்தாங்க. அதை படிச்சா பொய்யான விஷயங்கள நான் நம்ப ஆரம்பிச்சிடுவேனு பயந்தாங்க.
நீங்க ஏன் புதிய ஏற்பாட்டை படிக்க முடிவு செஞ்சீங்க?
எனக்கு 17 வயசானப்போ, படிப்பை முடிக்குறதுக்கு மறுபடியும் அமெரிக்காவுக்கு குடிமாறி போனேன். அங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிறிஸ்தவரா இருந்தாரு. இயேசுவை ஏத்துக்கலனா என்னோட வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காதுனு அவரு சொன்னாரு.
“இயேசுவை நம்புறவங்க எல்லாம் ஏமாளிங்க”னு நான் சொன்னேன்.
அதுக்கு அவரு, “நீங்க முதல்ல புதிய ஏற்பாட்டை படிச்சிருக்கீங்களா?”னு கேட்டாரு.
“இல்ல”னு சொன்னேன்.
“அப்படினா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாத ஒரு விஷயத்த பத்தி நீங்க கருத்து சொல்றீங்க”னு சொன்னாரு.
எனக்கு சுருக்குனு இருந்துது. ஏன்னா, தெரியாத விஷயத்த பத்தி கருத்து சொல்றது முட்டாள்தனம் அப்படினுதான் நானே சொல்வேன். அதனால அவரு சொன்னது சரிதான்னு எனக்கு உறைச்சுது. அவரோட பைபிளையே கேட்டு வாங்கிட்டு, வீட்டுக்கு போய் புதிய ஏற்பாட்டை படிக்க ஆரம்பிச்சேன்.
படிச்சதுக்கு அப்புறம் என்ன நினைச்சீங்க?
புதிய ஏற்பாட்டை எழுதுனவங்களே யூதர்கள்தான்னு தெரிஞ்சுகிட்டப்போ எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்துது. அதோட, இயேசுவை பத்தி படிக்க படிக்க அவரு எவ்ளோ மனத்தாழ்மையான, அன்பான ஒரு யூதர்னு புரிஞ்சுது. மக்களுக்கு உதவி செய்யத்தான் அவரு நினைச்சாரு, அவங்கள ஏமாத்த நினைக்கல. நான் லைப்ரரிக்கும் போய் அவரை பத்தி நிறைய புத்தகங்கள படிச்சேன். ஆனாலும், அவர்தான் மேசியானு நம்புறதுக்கு அது எதுவுமே எனக்கு போதுமான ஆதாரத்தை கொடுக்கல. சில புத்தகங்கள்ல அவர்தான் கடவுள்னுகூட சொல்லியிருந்துது. ஆனா, அது எப்படி இருக்க முடியும்? அவரு கடவுளா இருந்தா அவரு யார்கிட்ட ஜெபம் செஞ்சாரு? தன்கிட்டயே ஜெபம் செஞ்சுகிட்டாரா? அதுமட்டுமில்ல, இயேசு இறந்துபோனாரு. ஆனா ‘கடவுளுக்கு சாவுங்கறதே இல்ல’னு பைபிள் சொல்லுது. *
இதுக்கெல்லாம் எப்படி பதில் கண்டுபிடிச்சீங்க?
ஒரு விஷயம் உண்மையா இருந்தா அதுல முரண்பாடு இருக்காது. அந்த உண்மைய கண்டுபிடிச்சே தீரணும்னு நினைச்சேன். அதனால கடவுள்கிட்ட ரொம்ப உருக்கமா கண்ணீர்விட்டு ஜெபம் செஞ்சேன், அதுவும் முதல் முறையா ஜெப புத்தகம் இல்லாம ஜெபம் செஞ்சேன்! நான் ஜெபம் செஞ்சு முடிச்ச உடனேயே யாரோ கதவை தட்டுனாங்க. ரெண்டு யெகோவாவின் சாட்சிகள் வாசல்ல நின்னுட்டு இருந்தாங்க. பைபிளை புரிஞ்சுக்க உதவுற ஒரு புத்தகத்தை என்கிட்ட கொடுத்தாங்க. அத நான் படிச்சேன். அதோட, யெகோவாவின் சாட்சிகளோட அடிக்கடி கலந்துபேசுனேன். அதனால, பைபிள் சொல்றதைத்தான் அவங்க நம்பறாங்கனு புரிஞ்சுகிட்டேன். உதாரணமா, இயேசு ஒரு திரித்துவக் கடவுள்னு அவங்க சொல்றது இல்ல. இயேசு ‘கடவுளோட மகன்,’ * ‘கடவுளோட படைப்புகளிலேயே முதல் படைப்பு’ * அப்படினுதான் நம்பறாங்க.
கொஞ்ச நாள்ல நான் மெக்சிகோவுக்கு திரும்பி போனேன். அங்கயும் யெகோவாவின் சாட்சிகளோட உதவியோட மேசியாவை பத்தி சொல்லியிருந்த தீர்க்கதரிசனங்களை படிச்சேன். அவரை பத்தி இவ்ளோ தீர்க்கதரிசனங்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமா இருந்துது. ஆனாலும், என் மனசோட ஓரத்துல சந்தேகம் ஒட்டிட்டுதான் இருந்துது. ‘இதெல்லாம் உண்மையிலேயே இயேசுக்கு மட்டும்தான் பொருந்துதா? இல்லனா, இதெல்லாம் தனக்கு பொருந்துற மாதிரி இயேசு ரொம்ப புத்திசாலித்தனமா நடிச்சிருப்பாரா?’ அப்படினு யோசிச்சேன்.
எது உங்களுக்கு ஒரு திருப்புமுனையா இருந்துது?
யெகோவாவின் சாட்சிகள் காட்டுன சில தீர்க்கதரிசனங்கள படிச்சப்போ, அது தங்களுக்கு பொருந்துற மாதிரி யாருமே நடிச்சிருக்க முடியாதுனு எனக்கு புரிஞ்சுது. உதாரணமா, யூதேயாவுல * இருக்குற பெத்லகேமில்தான் மேசியா பிறப்பாருனு 700 வருஷங்களுக்கு முன்னாடியே மீகா தீர்க்கதரிசி சொல்லியிருந்தாரு. இந்த விஷயத்துல யாராவது நடிச்சு ஏமாத்த முடியுமா? ஒருத்தர் எங்க பிறப்பாருங்கறது அவரோட கையிலயா இருக்கு? அதோட, மேசியா ஒரு குற்றவாளியா கொலை செய்யப்படுவாரு, ஆனாலும் பணக்காரர்களோட அடக்கம் செய்யப்படுவாருனு * ஏசாயா எழுதியிருந்தாரு. இயேசுவோட விஷயத்துலதான் இதெல்லாம் அப்படியே நடந்துது.
இன்னொரு முக்கியமான அத்தாட்சி, இயேசுவோட வம்சாவளி சம்பந்தப்பட்டது. தாவீது ராஜாவோட வம்சத்துலதான் மேசியா வருவார்னு பைபிள் சொல்லுச்சு. * அன்னைக்கு இருந்த யூதர்கள், வம்சாவளி விவரங்கள பதிவு செஞ்சு வெச்சிருந்தாங்க. ஒருவேள, இயேசு தாவீதோட வம்சத்துல வந்திருக்கலைனா, அவரோட எதிரிகள் சும்மா இருந்திருப்பாங்களா? கண்டிப்பா அதை ஊரெல்லாம் பரப்பியிருப்பாங்க! ஆனா, அவங்களால அப்படி செய்ய முடியல. ஏன்னா, இயேசு தாவீதோட வம்சத்தை சேர்ந்தவர் அப்படிங்கறதுக்கு மறுக்க முடியாத அத்தாட்சி இருந்துது. மக்கள் அவரை ‘தாவீதோட மகன்’னுகூட சொன்னாங்க. *
இயேசு இறந்து 37 வருஷங்களுக்கு அப்புறம், அதாவது கி.பி. 70-ல, ரோம படைகள் எருசலேமை அழிச்சுடுச்சு. அப்போ, அங்கிருந்த வம்சாவளி பதிவுகள் அழிஞ்சுபோயிருக்கலாம் இல்லனா தொலைஞ்சுபோயிருக்கலாம். அதனால, கி.பி. 70-க்கு முன்னாடியே மேசியா வந்திருக்கணும். அப்போதான், அவரோட வம்சாவளியை வெச்சு அவரை அடையாளம் கண்டுபிடிச்சிருக்க முடியும்.
இதெல்லாம் புரிஞ்சதுக்கு அப்புறம் என்ன முடிவுக்கு வந்தீங்க?
மோசே மாதிரி ஒரு தீர்க்கதரிசியை இஸ்ரவேல்ல கடவுள் நியமிப்பார்னு உபாகமம் 18:18, 19 சொல்லியிருந்துது. ‘அவரு என் பேர்ல சொல்ற வார்த்தைகள கேட்டு நடக்காதவனை நான் தண்டிப்பேன்’னு கடவுள் சொல்லியிருந்தாரு. நான் முழு பைபிளையும் ஆராய்ச்சி செஞ்சு படிச்சதால, நாசரேத்தை சேர்ந்த இயேசுதான் அந்த தீர்க்கதரிசிங்கறது எனக்கு தெளிவா புரிஞ்சுது.
^ ஏசாயா 9:6, 7; லூக்கா 1:30-32. மத்தேயு முதல் அதிகாரத்தில் இயேசுவின் அப்பாவழி வம்சாவளியும், லூக்கா மூன்றாவது அதிகாரத்தில் அவருடைய அம்மாவழி வம்சாவளியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.