யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்
யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்
சமோவா
“பாலினேசியாவின் தொட்டில்” என்றழைக்கப்படும் சமோவாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய இந்தப் பதிவு அவர்களுடைய தேவபக்தியையும் தைரியத்தையும் உண்மைத்தன்மையையும் பறைசாற்றுகிறது. பைபிளை நன்கு அறிந்திருக்கும் இந்த வெப்பமண்டல சமுதாயத்தினர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போதும், கடவுளைப் பற்றிப் பேசும்போதும் பிரத்தியேகச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்; அந்தளவு இவர்களுக்கு மதப்பற்று இருக்கிறது. இவர்கள் மத்தியில் பிரசங்கிப்பது எப்படிப்பட்ட அனுபவம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உடல்ரீதியில் இமாலயப் பிரச்சினைகளைச் சமாளித்து யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்கும் அவரது சாட்சிகளை நீங்கள் சந்திப்பீர்கள். சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் மலைத்தொடரிலே 22 கிலோமீட்டர் நடந்துசென்ற கதையை வாசியுங்கள். “அர்மகெதோன் வர்றாங்க!” என்று சில கிராமத்துப் பிள்ளைகள் சொன்னதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
முன்னாள் யுகோஸ்லாவிய நாடுகள்
இன மற்றும் மத வேறுபாடுகளால் பகைமை பீறிட்டு இரத்தம் ஆறாய் ஓடியிருந்த இடத்தில், விசுவாசமும் தைரியமும் எவ்வாறு தழைத்தோங்கின என்ற சுவாரஸ்யமான கதையை வாசித்துப் பாருங்கள். நவீனகால சரித்திரத்தில், நீண்டகால முற்றுகையைத் தாக்குப்பிடித்த ஒரு நகரத்தில் சிக்கிக்கொண்ட யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “வெளியே குரோஷியர்களும், செர்பியர்களும், போஸ்னியர்களும் ஒருவரையொருவர் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதே பின்னணிகளைச் சேர்ந்த நாங்கள் உண்மை வணக்கத்தில் ஒன்றுபட்டிருந்தோம்.” சமாதான காலத்திலும் போர்க் காலத்திலும் சகோதரர்கள் உத்தமத்தன்மையைக் காத்துக்கொண்ட பதிவுகளை வாசிக்கையில் உங்கள் விசுவாசம் பலப்படும்.