எபிரெயருக்குக் கடிதம் 3:1-19
3 அதனால், பரலோக அழைப்பில்+ பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்களே, நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிற அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்+ பற்றி யோசித்துப் பாருங்கள்.
2 கடவுளுடைய வீட்டில் மோசே சேவை செய்தபோது அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தது போலவே,+ இவரும் தன்னை அப்போஸ்தலராகவும் தலைமைக் குருவாகவும் நியமித்த கடவுளுக்கு+ உண்மையுள்ளவராக இருந்தார்.
3 ஆனால், வீட்டை உண்டாக்கியவர் வீட்டைவிட அதிக மதிப்புள்ளவராக இருப்பது போல, இவர்* மோசேயைவிட அதிக மகிமையைப்+ பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார்.
4 உண்மைதான், ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.
5 பணியாளர் என்ற முறையில் மோசே கடவுளுடைய வீடு முழுவதும் சேவை செய்தபோது உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய சேவை, பிற்பாடு வெளிப்படுத்தப்படவிருந்த காரியங்களுக்குச் சாட்சியாக இருந்தது.
6 ஆனால் கிறிஸ்து, மகன்+ என்ற முறையில் கடவுளுடைய வீட்டின் அதிகாரியாக, உண்மையுள்ளவராக இருந்தார். அதனால், தைரியத்தையும்,* நாம் பெருமைப்படுகிற எதிர்கால நம்பிக்கையையும் முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நாமே கடவுளுடைய வீடாக+ இருப்போம்.
7 அதனால், கடவுளுடைய சக்தி சொல்வது இதுதான்:+ “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
8 வனாந்தரத்தில் அவரைச் சோதித்துப் பார்த்த நாளன்று அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்;+
9 அங்கே அவர்கள் 40 வருஷங்களாக நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னைச் சோதித்தார்கள்.+
10 அதனால்தான், நான் அந்தத் தலைமுறையைப் பார்த்து வெறுப்படைந்து, ‘அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது, அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னேன்.
11 அதனால் ‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.”+
12 அதனால் சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிப் போவதன் காரணமாக உங்களில் யாருடைய இதயமும் விசுவாசம் இல்லாத பொல்லாத இதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.+
13 அதோடு, உங்களில் யாருடைய இதயமும் பாவத்தின் வஞ்சக சக்தியால் இறுகிப்போகாதபடி, “இன்று”+ எனக் குறிப்பிடப்படும் காலம் நீடிக்கும்வரை, தினமும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்.
14 ஆரம்பத்தில் நமக்கு இருந்த நம்பிக்கையை முடிவுவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டிருந்தால் மட்டும்தான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக ஆவோம்.+
15 அதனால்தான், “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவருக்குப் பயங்கர கோபமூட்டிய உங்கள் முன்னோர்களைப் போல் உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+
16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+
17 அதோடு, கடவுள் 40 வருஷங்களாக யார்மீது வெறுப்படைந்தார்?+ பாவம் செய்தவர்கள்மீதுதான், இல்லையா? அவர்களுடைய சடலங்கள் வனாந்தரத்தில் விழுந்தன, இல்லையா?+
18 தன்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள் என்று அவர் யாரிடம் ஆணையிட்டுச் சொன்னார்? கீழ்ப்படியாதவர்களிடம்தான், இல்லையா?
19 அதனால், விசுவாசம் இல்லாததால்தான் அவரோடு சேர்ந்து அவர்களால் ஓய்வை அனுபவிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.+