மாற்கு எழுதியது 3:1-35
3 மறுபடியும் அவர் ஒரு ஜெபக்கூடத்துக்குள் போனார்; சூம்பிய* கையுடைய ஒருவன் அங்கே இருந்தான்.+
2 அந்த ஓய்வுநாளில் அவர் அவனைக் குணமாக்குவாரா என்று பரிசேயர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறியாக இருந்தார்கள்.
3 அப்போது, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “எழுந்து வந்து நடுவில் நில்” என்று அவர் சொன்னார்.
4 பின்பு பரிசேயர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி? நல்லது செய்வதா கெட்டது செய்வதா, ஒரு உயிரைக் காப்பாற்றுவதா கொல்வதா?”+ என்று கேட்டார். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
5 அதனால், கோபத்தோடு அவர்களைப் பார்த்தார்; அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருந்ததை+ நினைத்து மிகவும் துக்கப்பட்டார்; பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்று சொன்னார். அவனும் கையை நீட்டினான், அது குணமானது.
6 அதைப் பார்த்ததும் பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்வதற்காக ஏரோதுவின் ஆதரவாளர்களோடு+ உடனடியாகத் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.
7 ஆனால், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தன்னுடைய சீஷர்களோடு கடலோரமாகப் போனார்; கலிலேயாவிலிருந்தும் யூதேயாவிலிருந்தும் வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள்.+
8 அவர் செய்துவந்த நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டு, எருசலேமிலிருந்தும் இதுமேயாவிலிருந்தும் யோர்தானுக்கு அக்கரையிலிருந்தும், தீரு, சீதோன் பகுதிகளின் சுற்றுவட்டாரத்திலிருந்தும்கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
9 கூட்டம் தன்னை நெருக்காமல் இருப்பதற்காக ஒரு சிறிய படகைத் தயாராக வைக்கும்படி சீஷர்களிடம் அவர் சொன்னார்.
10 அவர் நிறைய பேரைக் குணமாக்கியதால், கொடிய நோய்களால் அவதிப்பட்ட எல்லாரும் அவரைத் தொடுவதற்காக+ அவரைச் சுற்றிலும் கும்பலாகக் கூடிவந்தார்கள்.
11 பேய்களும்கூட,*+ அவரைப் பார்த்தபோதெல்லாம் அவர் முன்னால் விழுந்து, “நீங்கள் கடவுளுடைய மகன்”+ என்று சொல்லிக் கத்தின.
12 ஆனால், தன்னைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாதென்று பல தடவை அந்தப் பேய்களுக்கு அவர் கண்டிப்புடன் கட்டளையிட்டார்.+
13 அவர் ஒரு மலைமேல் ஏறிப்போய், தன்னுடைய சீஷர்களில் சிலரையும் அங்கே வரச் சொன்னார்;+ அவர்களும் அங்கே போனார்கள்.+
14 அப்போது அவர் 12 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார். எப்போதும் தன்னோடு இருப்பதற்காகவும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும்,
15 பேய்களைத் துரத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+
16 அந்த 12 பேர் இவர்கள்தான்:+ சீமோன் (இவருக்கு பேதுரு என்றும் பெயர் வைத்தார்),+
17 செபெதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரன் யோவான் (இவர்கள் இரண்டு பேருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார், இதற்கு “இடிமுழக்க மகன்கள்” என்று அர்த்தம்),+
18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, பக்திவைராக்கியமுள்ள* சீமோன்,
19 இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.
பின்பு, அவர் ஒரு வீட்டுக்குள் போனார்.
20 மறுபடியும் அங்கே கூட்டம் கூடியதால், அவர்களால் சாப்பிடக்கூட முடியவில்லை.
21 எல்லாவற்றையும் அவருடைய சொந்தக்காரர்கள் கேள்விப்பட்டபோது, “அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது”+ என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொண்டுவர அங்கே போனார்கள்.
22 அதுமட்டுமல்ல, எருசலேமிலிருந்து வந்த வேத அறிஞர்கள், “இவனை பெயல்செபூப்* பிடித்திருக்கிறது, பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொல்லிக்கொண்டார்கள்.
23 அதனால் அவர்களைத் தன்னிடம் கூப்பிட்டு, உவமைகளைப் பயன்படுத்திப் பேசினார்; “சாத்தான் எப்படிச் சாத்தானை விரட்ட முடியும்?
24 ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால், அந்த ராஜ்யம் நிலைக்காது.+
25 ஒரு வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த வீடு நிலைத்திருக்க முடியாது.
26 அதேபோல், சாத்தானும் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்கினால், அவன் நிலைத்திருக்க முடியாது, அழிந்துதான் போவான்.
27 ஒரு பலசாலியின் வீட்டுக்குள் நுழைகிற எவனும், முதலில் அவனைக் கட்டிப்போடாவிட்டால் அவனுடைய வீட்டிலுள்ள பொருள்களைக் கொள்ளையடிக்க முடியாது; அவனைக் கட்டிப்போட்ட பின்புதான் வீட்டைக் கொள்ளையடிக்க முடியும்.
28 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் செய்கிற எந்தப் பாவமும் மன்னிக்கப்படும்; அவர்கள் நிந்தித்துப் பேசுகிற எந்த நிந்தனையும் மன்னிக்கப்படும்.
29 ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்கிற எவனுக்கும் என்றுமே மன்னிப்பு கிடையாது;+ தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்”+ என்று சொன்னார்.
30 “அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது”+ என்று அவர்கள் சொல்லிவந்ததால் அவர் அப்படிச் சொன்னார்.
31 அவருடைய அம்மாவும் சகோதரர்களும்+ வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.+
32 அப்போது அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்; அவர்கள் அவரிடம், “உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரர்களும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள், அவர்கள் வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்”+ என்று சொன்னார்கள்.
33 அதற்கு அவர், “யார் என்னுடைய அம்மா, யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்.
34 பின்பு, தன்னைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து, “இதோ! என் அம்மாவும் சகோதரர்களும் இவர்கள்தான்!+
35 கடவுளுடைய விருப்பத்தின்படி* நடக்கிறவர்தான் என் சகோதரர், என் சகோதரி, என் அம்மா”+ என்று சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட.”
^ அதாவது, “கெட்ட தேவதூதர்களும்கூட.”
^ அர்த்தம், “அனுப்பப்பட்டவர்கள்.”
^ நே.மொ., “கெனனீயனாகிய.”
^ சாத்தானைக் குறிக்கும் பெயர்.
^ வே.வா., “சித்தத்தின்படி.”